TNPSC Thervupettagam

மொழிக் கொள்கை: ஒத்தையா ரெட்டையா ஆட்டமல்ல!

May 15 , 2019 2043 days 1254 0
  • தமிழ்நாட்டின் மேல்நிலை வகுப்புகளில் தற்போது உள்ள மொழிப் பாடத்திட்டத்தின்படி முதல் மொழியாக ஆங்கிலமும் இரண்டாம் மொழியாக தமிழ் அல்லது வேறு மொழிகளும் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றி, இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டால் போதும் என்றொரு பரிந்துரை பள்ளிக்கல்வித் துறையால் முன்வைக்கப்பட்டிருந்தாக சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பவே பள்ளிக்கல்வி அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். எனினும், மொழிக் கொள்கை தொடர்பில் நாம் விவாதிக்க இது ஒரு தருணமாகியிருக்கிறது.
  • தமிழ்நாட்டில் மொழித் திட்டமிடலை அணுகும் விதத்திலுள்ள ஒரு அடிப்படையான அணுகுமுறையைப் பற்றி நாம் கேள்வியெழுப்பியாக வேண்டிருக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக மொழி அரசியல் சார்ந்தும் தொழில் சார்ந்தும் இதை நான் நூற்றுக்கணக்கான தருணங்களில் எதிர்கொண்டிருக்கிறேன். இந்தப் பாடாவதியான அணுகுமுறை மொழிப் பிரச்சினையை எப்போதும், ‘ஒத்தையா; ரெட்டையா?’ விவகாரமாகவே பார்க்கிறது. ‘அதுவும் இதுவும்’ என்று பார்க்காமல் ‘அதுவா; இதுவா?’ என்றுதான் பார்க்கிறது. இது சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல; அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள், பல்துறை நிபுணர்கள், ஆசிரியர்கள், திண்ணைப் பேச்சாளர்கள், சமூக வலைதள விவாதிகள் எனப் பல தரப்பினரிடமும் இதைப் பார்க்க முடிகிறது.
ஏன் தமிழ் அல்லது ஆங்கிலம்?
  • தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு என்று ஏன் கேள்வி கேட்கிறது? இரண்டும் என்று முடிவெடுக்காமல் இரண்டில் ஒன்று என்கிற யோசனை தமிழ்நாட்டில் எப்போது முளைத்தது? ஆங்கிலம், இந்தி என்று வரும்போது ஆங்கிலமும் இந்தியும் என்று சேர்த்து முடிவெடுக்கும் மேட்டிமைச் சக்திகள் தமிழ், ஆங்கிலம் என்று வரும்போது மட்டும் ஏன் தமிழா, ஆங்கிலமா என்று கேள்வி கேட்கின்றன?
  • நாம் அனைவரும் பன்மொழிச் சூழலில் வாழத் தலைப்பட்டிருக்கிறோம் என்கிற ஓர் அடிப்படையான உண்மையிலிருந்துதான் மொழி குறித்த இன்றைய எந்த நிலைப்பாட்டையும் நாம் அணுக முடியும். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளோடு இணைந்து உறவாட வேண்டிய அவசியம் காரணமாக ஒற்றைமொழிக் கொள்கையை இனி பின்பற்றவே முடியாது. அதேசமயம், எந்த ஒரு மனிதரும் தன் முதல் மொழிக்கு அப்பால் வேறு ஒரு மொழியைக் கட்டாயமாகப் படித்தே ஆக வேண்டும் என்கிற சூழலை உருவாக்கிவிடவும் கூடாது. ஒன்றுக்கொன்று முரண்பாடுபோல தோன்றும் இவ்விரு வாக்கியங்களும் உண்மையில் ஒரே விஷயத்தைத்தான் சொல்கின்றன: அதாவது, மொழியுரிமை என்கிற அடித்தளத்திலிருந்துதான் மொழிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் அது.
  • எண்பதுகள் வரை தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் அதனதன் இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறோம். எனவேதான், தமிழ் மொழிக் கல்விக்காகக் குறிப்பிடத்தக்க அளவுக்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், பின்பு உயர் கல்வியில் ஆங்கிலம் முதலிடத்தைப் பெற்ற பிறகு, ஒற்றை மொழிவாதம் என்கிற விஷம் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கி, முதுகெலும்பைப் பலவீனமாக்கி இன்று வேரிலேயே இறங்கிவிட்டது.
சந்தைக்குப் பணம்தான் முக்கியம்; மொழி அல்ல
  • கடந்த முப்பதாண்டுகளில் உலகமயமாதலின் காலகட்டத்தில், மொழிகள் விஷயத்தில் எல்லா வளர்ந்த நாடுகளின் பொதுப்போக்கு என்னவாக இருந்துவருகிறது என்று பார்த்தால் தமிழ்நாட்டில் நாம் செய்துவரும் முட்டாள்தனமான நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
  • உலகமயமாதல் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் ஆதிக்கத்தையும் அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். பல நாடுகளிலும் புதிதாக ஆங்கிலம் பயிலும் போக்கு பெருகியிருக்கிறது. சீனாவும் கொரியாவும் முக்கிய உதாரணங்கள். ஆனால், எந்த நாடும் தங்கள் தாய்மொழியைத் தூக்கியெறிந்துவிட்டு, ஆங்கிலத்தை அந்த இடத்தில் வைக்கவில்லை.
  • மேற்கத்திய வளர்ந்த நாடுகளிலும் சரி, இந்தியாவைத் தவிர்த்து எழுச்சிநிலைப் பொருளாதாரங்கள் என்று வரையறுக்கப்படுகிற சீனா, ரஷ்யா, துருக்கி, மலேசியா, பிரேசில், மெக்சிகோ, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் சரி; இதுதான் பொதுப்போக்கு.
  • தொடக்கத்தில், சந்தை தன்னுடைய தேவைக்காக ஆங்கிலத்தை முன்னிறுத்தவே செய்தது. ஆனாலும், தாய்மொழிகளைக் கைவிடாத நாடுகளின் பொருளாதார வெற்றிக்குப் பிறகு சந்தை, தனது மொழிக் கொள்கையில் சமரசம் செய்துகொண்டது. நீங்கள் ஆங்கிலத்தைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை; நாங்கள் உங்கள் மொழியைப் படித்துக்கொள்கிறோம் என்று அவை இறங்கிவருகின்றன. சந்தேகமிருந்தால் ‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘பேஸ்புக்’, ‘நெட்பிளிக்ஸ்’, ‘அமேசான்’ சென்று பாருங்கள். சந்தைக்குப் பணம்தான் முக்கியம்; மொழி அல்லவே? எனவே, சந்தை ஒற்றை மொழிவாதத்தைக் கைவிட்டுவிட்டது; பன்மொழிச் சூழலுக்குத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், அந்தச் சந்தையைக் காரணம் காட்டித்தான் நம்மூரில் தமிழைப் புறக்கணிக்க முற்படுகிறார்கள்.
பன்மொழிக் கொள்கையின் வெற்றி
  • வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கிய மொழிக் கொள்கைகள் அனைத்தும் பன்மொழிக் கொள்கைகளாகவே இக்காலத்தில் இருக்கின்றன. குழந்தைகள் தொடக்க நிலையில் முழுமையாகத் தாய்மொழியில் படிக்க வேண்டும், பிறகு மெல்ல மெல்ல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் போன்ற ஒரு பன்னாட்டுப் பயன்பாட்டுக்கான மொழியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு, வாய்ப்பிருப்பின் வேறு எந்த ஒரு பயனுள்ள மொழியையும் விருப்ப நிலையில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்குத் தரப்பட வேண்டும் - இதுதான் அந்த வெற்றிகரமான கொள்கை.
  • தாய்மொழிக் கல்வியில் நல்ல அடித்தளம் அமைந்தால் பிற மொழிகளைக் கற்பது எளிது என்பதே உலகெங்கும் கல்வியாளர்களாலும் அறிவுஜீவிகளாலும் அதிகம் முன்மொழியப்படும் வழிமுறை. அத்துடன் முழுமையான கல்வியின் அடித்தளம் என்பது தாய்மொழியில் நீங்கள் பெறக்கூடிய மொழித்திறனைப் பொறுத்தும் அமைகிறது. ‘எம்டிபி – எம்எல்இ’ (Mother tongue based multilingual education – MTB, MLE, Bilingualism) போன்ற கருத்தாக்கங்களைப் பற்றியெல்லாம் நாம் இன்னும் பேசவே தொடங்கவில்லை.
  • ஆக, தமிழும் ஆங்கிலமும் என்று சேர்த்து சிந்திக்கத்தக்க ஒரு சிந்தனையை நோக்கி அண்ணா காலத்தில் இருமொழிக் கல்வி வழியே தமிழ்நாடு அடியெடுத்துவைத்தது ஒரு தொலைநோக்கின் வெளிப்பாடு; அந்த வழி நாம் பயணிக்க நீண்ட தொலைவு இருக்கிறது; ஆனால், ‘தமிழா? ஆங்கிலமா?’ என்ற சிந்தனை நம்மைப் பின்னோக்கியே தள்ளும்; அடிமைகளாக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை(15-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories