TNPSC Thervupettagam

வாக்காளர்களே... தீர்ப்பு என்ன?

April 3 , 2019 2073 days 1613 0
  • மன்னராட்சி - சர்வாதிகார ஆட்சி,  ராணுவ ஆட்சி போன்றவற்றைத் தகர்த்துவிட்டு, மக்களாட்சி முறை வந்தமைக்கே காரணம், அதில் மக்களுடைய நேரடிப் பிரதிநிதித்துவம் இருப்பதால்தான்! மன்னராட்சி - சர்வாதிகார ஆட்சி - ராணுவ ஆட்சி ஆகியவற்றின் பலவீனங்கள், இப்போது மக்களாட்சி முறைமையிலும் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன.
மக்களாட்சி
  • இந்தியாவின் மக்களாட்சி அமைப்பு பலவித பாதிப்புகளுக்கு உள்ளான போதிலும் இன்னும்  தோற்றுப் போகாமல் இருப்பதற்குக் காரணம், அதைவிடச் சிறப்பான ஆட்சி முறை தோன்றாமலிருப்பதே ஆகும். ஆளும் வர்க்கத்திலும், அதிகார வர்க்கத்திலும், நீதித் துறையிலும் சில நல்ல தலைமுறைகள் தோன்றியபோதிலும், இந்த நாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் எந்த மாற்றமும் அடிநாளிலிருந்து காணப்படவில்லை. அதற்கொரு காரணமாக எழுத்தறிவின்மையைச் சொல்லலாம்.  மக்களாட்சி முறையைப் பெற்ற நாடுகளில் அதிகம் தற்குறித் தன்மையைக் கொண்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானுமே! இந்த நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் நம் மக்கள் சின்னத்துக்குத்தான் வாக்குப்பதிவு  செய்து கொண்டிருக்கின்றனர்.
  • மக்களாட்சி முறைமையில் மக்கள் பயமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உணர்ந்தவர்களாக இல்லை. அதுபோலத்தான் தேர்தலும் ஆகிவிட்டன.
பிரான்ஸ்
  • பிரான்சிலே ஒரு காலத்தில் அரைகுறைப் பிரசவத்தில் சட்டப்பேரவைகள் கலைந்து போனதுண்டு. அதனை விமர்சிக்க வந்த டி-கால் எனும் அதிபர், பிரான்சில் சட்டப்பேரவைகள் இல்லை என்றால், சிரிப்பதற்கே வழியில்லாமல் போய்விடும் என்றார். இந்தியாவிலும் அப்படியொரு நிலையை வாக்காளர்கள் கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது.
  • இரண்டாம் உலகப் போரின்போது உலகத்தையே ஆட்டிப்படைத்த ஹிட்லர், நான் ஒரு பக்குவப்படாத ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே, சர்வாதிகாரி ஆனேன் என்றார். தேர்தல் நாளன்று, திருவாளர் பொதுஜனம் இதையும் மனத்திலே இருத்தல் வேண்டும். நம்முடைய ஜனநாயக அமைப்பில் தலைகள்தாம் எதையும் தீர்மானிக்கிறதே தவிர, தலைகளுக்குள்ளிருக்கின்ற தத்துவங்கள் தீர்மானிப்பதில்லை எனும் சிந்தனையையும் வாக்காளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது. திருவிழாவுக்குச் சொந்த பந்தங்களைப் பார்ப்பதற்கு விரைகின்ற கிராமத்துவாசிகளைப் போல், தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின் தகுதியைப் பற்றி எண்ணிப் பார்க்காமல், வேட்பாளர்களில் யார் நம்ம சாதி, நம்ம சொந்தம் என்று ஆராய்ந்து பார்க்கின்ற மனப்பான்மை வாக்காளர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
  • திருவிழாவிற்கு வரும் உறவு முறைகளில் எவ்வளவு வரதட்சணை கேட்கலாம் என ஆசைப்படுகின்ற மாப்பிள்ளை வீட்டாரைப் போல, வீடு தேடி வரும் வேட்பாளர்களிடம் என்ன நிபந்தனை விதிக்கலாம்; எதை எதைக் கேட்கலாம் என்ற மனப்போக்கு பொதுமக்களிடமிருந்து முற்றிலும் நீங்கியாக வேண்டும்.
வாக்குச் சீட்டு
  • வாக்குச்சீட்டு மனைவிக்கு நிகரானது  என்பதை எத்தனை முறை அழுத்திச் சொன்னாலும், ஒரே வாக்குச்சீட்டை பல வேட்பாளர்களிடம் விற்கும் பேராசையும் நம்மிடமிருந்து நீங்கியாக வேண்டும்.
  • வாக்காளர்களில் சிலர் சமூகத்தில் வலிமையும் ஆதிக்கமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள், வரும் வேட்பாளர்களிடம் என்னிடம் 300 வாக்குகள் இருக்கின்றன. அனைவரும் என் சாதிக் கட்டுக்கோப்பில் இருப்பவர்கள். நான் எந்த இடத்தில் கைகாட்டுகிறேனோ, அந்த இடத்தில் தட்டாமல் தவறாமல் வாக்களிக்கக் கூடியவர்கள்.  அதனால் உங்களால் எவ்வளவு முடியும்? என்று பேரம் பேசுகின்ற பெருந்தலைகளும் பேட்டைதோறும் இருக்கின்றனர்.  வாயடியும் கையடியும் நீங்குகின்றபோதுதான், இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்.
  • திருவிழாக்களில் பாத்திரம் பண்டம் வாங்க ஆசைப்படுகின்ற பெண்கள்போல், தேர்தல் காலத்திலும் நாடிவரும் முகவர்களிடம் துண்டுச்சீட்டை எதிர்பார்க்கின்ற பெண்கள் இருக்கிறார்கள்.  எந்தச் சீட்டை எந்தக் கடையில் கொடுத்தால், கிரைண்டர் கிடைக்கும், மிக்சி கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கின்ற பேராசையும் முற்றிலும் நீங்கியாக வேண்டும்.
  • தேர்தல் காலத்தில் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்காகத் தேர்தல் கண்காணிப்புக் குழு இரவு பகலாக வேவு பார்ப்பதுண்டு.  சில கட்சிக்காரர்களும் இரவு முழுமையும் விழித்திருந்து, பணப் பட்டுவாடாவைத் தடுக்கப் பார்ப்பார்கள்.  அதனால், வோட்டு வேட்டை ஆடுபவர்கள் பணத்தை நூதனமான வழியில் விநியோகிக்க சில வழிகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.  அதற்குக் காலம் காலமாக நம் நாட்டில் ஏழ்மையிலே துடிக்கும் பாமர மக்களின் நிலையும் ஒரு காரணமாகும். அன்றாடம் காய்ச்சிகள் தரித்திரத்துக்கு ஆட்பட்டு, தம் வீட்டிலுள்ள சொற்ப நகைகளையும் பாத்திரங்களையும் அடகு வைத்துவிடுவார்கள். அத்தகைய மக்கள் யாரென்று வேட்பாளரின் முகவர்களுக்கு நன்கு தெரியும்.  முகவர்கள் அத்தகைய வாக்காளர்களின் வீடு தேடிப்போய், அவர்களிடம் இருக்கும் அடமானச் சீட்டுக்களைப் பெற்று வந்து, அடகுக் கடைக்காரர்களிடம் அசலையும் வட்டியையும் கட்டி விடுவார்கள்.  மறுநாள் உரியவர்கள் சென்று அடகுக் கடையில் நகைகளையோ பாத்திரங்களையோ பெற்று வரலாம். இத்தகைய உதவியைச் செய்த வேட்பாளர்களை, வாக்காளர்கள் மறப்பதில்லை.  வேட்பாளர் வெற்றி பெறுவார்; மக்களாட்சி தோற்கும்.  சில தேர்தல்களில் வாக்காளரின் வங்கிக் கணக்கு எண்ணை வாங்கி வந்து, அதில் பணத்தைச் சேர்ப்பதும் நடந்திருக்கிறது.
இந்திய ஜனநாயகம் 
  • வாக்காளப் பெருமக்கள் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் அல்லாமல், இந்திய ஜனநாயகம் வெற்றி பெறாது.
  • ஒரு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ் தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு எல்லாத் தரப்பிலும் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்களோ, அதேபோன்று மக்களாட்சி யுகத்தில் வாக்காளர்கள் முழுமையான விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.  மக்களாட்சியின் அடிமரம் ஆளும் வர்க்கம் என்றால், அதன் கிளைகள் அதிகார வர்க்கம் என்றால், அது தரும் கனிகள் நீதித் துறை என்றால், இவை அத்தனையும் தாங்கி நிற்கும் ஆணிவேர் வாக்காளர்கள் ஆவர்.
  • வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் தாம், ஆளும் வர்க்கம் ஆகின்றனர்.  ஆளும் வர்க்கத்தால்தான் அதிகார வர்க்கம் நியமிக்கப்படுகிறது; ஆளும் வர்க்கத்தால்தான் நேரடியாக இல்லாவிட்டாலும் நிழல் மறைவில் நீதிமான்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • அதனால், தவறான ஆட்சி அமைவதற்கும், நாணயமில்லாத அதிகார வர்க்கம் உருவாவதற்கும், நீதித்துறையில் கருமேகங்கள் படர்வதற்கும், வாக்காளர்களே பொறுப்பாளர்கள் ஆவர்.  வாக்காளர்கள் புத்திசாலிகளாக இல்லாவிட்டால், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அயோக்கியர்களாகத்தான் இருப்பர். மக்களுடைய யோக்கியதைக்கு ஏற்றவாறுதான் அவர்களுக்குரிய அரசு அமையும். சென்ற சில தேர்தல்களில் மக்களுக்குத் தீவிர சிந்தனையின்மையால், வில்லையும் அம்பையும் கையில் ஏந்தி வேட்டையாடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  துப்பாக்கி ஏந்தி கொலை-களவுகளில் ஈடுபட்ட முரட்டுப் பெண்களையும் ஆட்சிமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறோம்.  இந்திய நாட்டு வங்கிகளைச் சூறையாடிவிட்டு, வெளிநாட்டில் சொகுசாக வாழும் பெரிய மனிதர்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  இந்திய நாட்டில் சம்பாதித்த பணத்தை, இந்த நாட்டு வங்கிகளில் சேமிக்காமல், அயல்நாட்டு வங்கிகளில் குவித்து வைத்திருக்கும் கணவான்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  விமானத்தில் பறக்கும்போதுகூட பணிப்பெண்களைச் சீண்டிப் பார்க்கும் பெரிய மனிதர்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
  • எனவே, தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் தந்தை, எந்தெந்த வழியில் எல்லாம், மாப்பிள்ளையின் ஒழுக்கத்தை அலசி ஆராய்கிறாரோ, அது போல வேட்பாளர்களின் முன் நடத்தையை வாக்காளர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் திருவிழாவில் பொருள்களை வாங்குவதுபோல் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது.  வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களா என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டும்.  அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறருடைய சொத்துகளை மோசடியில் பறித்தவர்களா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
  • வேட்பாளர்கள் இரண்டு, மூன்று தடவை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், பொது வாழ்க்கையில் தொடக்கத்தில் அவர்கள் இருந்த நிலைமையை, இப்போது இருக்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வாக்காளர்களில் சிலர் கட்சி சார்ந்தவர்களாக இருந்தால், தம் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கே வாக்களித்து விடுகின்றனர்.  எந்தக் கட்சியிலும் கருப்பு ஆடுகள் உண்டு.  எனவே, கட்சிக்காரர் என்பதற்காகவே வாக்களித்தால், உங்களுக்குக் கட்சிக்காரர்கள் கிடைப்பார்களே தவிர, நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க மாட்டார்கள். ஜாதிக்காரர் என்பதற்காக வாக்களித்தால் சொந்தக்காரர் கிடைப்பாரே தவிர, ஆரோக்கியமான ஆட்சியாளர் கிடைக்க மாட்டார். பொதுமக்கள் செய்ய வேண்டிய முதல் பணி, ஒரு கட்சி தேர்தலில் அறிக்கையை வெளியிட்டவுடன் அதற்கு முதல் தேர்தலில், அக்கட்சி கொடுத்த தேர்தல் அறிக்கையில் எத்தனை சதவீதம் நிறைவேற்றியிருக்கிறார்கள், எத்தனை சதவீதம் தவறவிட்டிருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேர்தல் என்பது திருவிழா அன்று;  தீர்ப்பு நாள்!  நீங்கள் எழுதுகின்ற தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது;  உயர்நீதிமன்றம் கிடையாது.  உங்கள் தீர்ப்பு 5 ஆண்டுகளுக்குள் திருத்தி எழுத முடியாத தீர்ப்பு.
  • ஒருவர் போக்குவரத்து விதியை மீறினால், ஒருநாள் தண்டனை கிடைக்கும். ஒருவர் கடன் வாங்கிக் கொண்டு, கொடுத்தவரை ஏமாற்றினால், சில நாள்கள் தண்டனை கிடைக்கும்.
  • ஆனால், வாக்குச்சீட்டைத் தவறாகப் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுக்கால தண்டனை கிடைக்கும். வாக்குச்சீட்டு-உங்கள் கையில் இருக்கும் துருப்புச் சீட்டு.  அந்த ஆயுதத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், உங்களுக்கும் பாதுகாப்பு, நாட்டுக்கும் பாதுகாப்பு!

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories