வாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!
March 20 , 2019 2126 days 1427 0
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினராலும் கண்காணிப்புக் குழுவினராலும் ரூ.6 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக எந்த நிலைக்கும் செல்வதற்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன. தேர்தல்களின் முக்கியத்துவம் குறித்தும் தங்களது ஜனநாயகக் கடமை குறித்தும் வாக்காளர்களுக்கு இன்னும் ஆழமான புரிதல் ஏற்படவில்லையோ எனும் கேள்வியும் எழுகிறது.
அனைவருக்கும் வாக்குரிமை
அனைவருக்கும் வாக்குரிமை என்பது இந்திய அரசமைப்பின் தனித்த சிறப்பியல்புகளில் ஒன்று. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இந்த சமத்துவ உரிமை படிப்படியாகத்தான் நடைமுறைக்கு வந்தது. எதிர்கால இந்தியா முழுமையான ஜனநாயக நாடாக விளங்க வேண்டும் என்று லட்சியத்தோடு இந்திய அரசமைப்பை வடிவமைத்தவர்கள், அனைவருக்கும் சமத்துவ உரிமையை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அந்த உரிமையின் முழு பரிணாமத்தையும் அறியாத வகையிலேயே இந்திய வாக்காளர்களில் பலர் அறியாமைக்குள் அழுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வாக்காளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் வாக்குகளை விலைபேசும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இச்செயல்களோடு தொடர்புடையதாகத் தெரியவரும் வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை இழக்க வேண்டியிருக்கும் என்ற நெருக்கடியை உருவாக்குவது அவசியம். இல்லையென்றால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
வங்கிப் பணப் பரிமாற்றம்
தேர்தல் காலத்தில் வங்கிக் கணக்குகளின் பணப்பரிமாற்றங்கள் முழுமையான கண்காணிப்புக்கு உள்ளாகின்றன. ஆனால், தேர்தலின்போது சுற்றிவரும் பணம் என்பது பெரும்பாலும் கணக்கில் வராததாகவே இருக்க முடியும். எனவே, வாகனச் சோதனைகளின் மூலம் அவற்றை முழுமையாகக் கண்டறிந்து தடுத்துவிட முடியாது. வாக்காளர்களிடம் அந்தப் பணம் கொண்டுசெல்லப்படும் ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்பட வேண்டும். தொகுதிகள் தோறும் பகுதிகள் வாரியாக நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணிபுரிவதோடு, புகார்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்தைவிடவும் முக்கியமாக, வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒரு வாக்கு என்பது இந்தியக் குடிமக்களின் அரசியல் பெருமிதம்; அடுத்தத் தலைமுறையின் நலவாழ்வைத் தீர்மானிக்கும் அஸ்திரம் என்பதை உணரவைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்று உறுதியெடுத்துக் கொள்ளும்போதுதான் இந்திய ஜனநாயம் அதன் உண்மையான வலிமையைப் பெற முடியும்!