TNPSC Thervupettagam

வாரிசுகளுக்கு கல்விச் சுதந்திரம் எப்போது?

May 10 , 2019 2073 days 1286 0
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உயர் கல்விக்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் சூழலில் மாணவர்களின் விருப்பத்தை அறியாமலேயே அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உயர் கல்வி
  • கட்செவி அஞ்சல், முகநூல், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் உயர் கல்வி குறித்த தெளிவும், எத்தகைய கல்விக்கு எந்தெந்த வேலைவாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் தெரியாத மாணவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
  • இதுபோன்ற விவரங்கள் கூகுளில் இன்று காணக் கிடைப்பது என்பது மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்தான். இருந்தாலும்கூட மாணவர்களைவிட அவர்களின் பெற்றோர்கள்தான் கட்-ஆப் மதிப்பெண்களை கையில் வைத்துக் கொண்டு  பொறியியல், வேளாண் படிப்புகள், மேலாண்மை படிப்புகள் உள்ள கல்லூரிகளின் விவரம் தெரிந்தவர்கள், படித்தவர்கள் என எல்லோரிடமும் விசாரிக்கின்றனர். அவ்வாறு விசாரணை மேற்கொள்ளும்  பெரும்பாலான நபர்களுக்கு இன்றைய கல்வி முறை என்பது தெரியாத விஷயமாகத்தான் இருக்கும்.
  • யாருக்காவது உடல்நல பாதிப்பு என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பார்க்க வருவோர் என ஒவ்வொருவரும் மருத்துவக் குறிப்புகளை அள்ளி வீசுவதுண்டு. அதே போன்று பிளஸ் 2 முடித்த மாணவர்களின் வீடுகளுக்குச் செல்வோர்  அவர்கள் கேட்காமலேயே உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவர்.
  • இவர்களில் பெரும்பாலானோர் அறிந்தது பொறியியல் அல்லது மருத்துவம்தான். இதை தவிர புதிய பாடப் பிரிவுகள் குறித்து எந்த ஆலோசனைகளையும் அவர்கள்  சொல்வதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் யாரோ ஒரு பொறியியல் பட்டதாரி, எங்கோ உள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் கைநிறைய காசு சம்பாதிக்கும் தகவல் மட்டும்தான். எத்தனையோ பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்காமலும், குறைவான ஊதியத்திலும் பணியாற்றுவது அவர்களுக்குத் தெரிவதில்லை.
  • பொறியியல், மருத்துவக் கல்வியைத் தாண்டி எத்தனையோ கலை அறிவியல் பாடப் பிரிவுகள், வேலைவாய்ப்பை வழங்கும் பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என எண்ணற்றவை தமிழகத்தில் குவிந்து கிடக்கின்றன. அது போன்ற படிப்புகளைத் தேர்வு செய்ய பெற்றோர்கள் தயாராக இல்லை.
  • ஒரு காலத்தில் பி.காம். படித்தால் வங்கி வேலைக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையால் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதுபோல் இன்று குறிப்பிட்ட பொறியியல் பிரிவு படித்தால் சாஃப்ட்வேர் பொறியாளராகி கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இதே போன்று ஒருசில ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகிவிட வேண்டும் என்ற சிந்தனையும்தான் பெரும்பாலான பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள்
  • அதற்காக, பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுத உள்ள தங்களது வாரிசுகள் அடுத்த ஆண்டு நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளில் இப்போதே சேர்க்கத் தொடங்கிவிட்டனர். தங்களது வாரிசுகள் இந்தப் படிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ளனரா அல்லது அவர்கள் வேறு ஏதேனும் கல்வி கற்றுச் சாதிக்க விரும்புகின்றனரா என்பதைத் தெரிந்துகொள்ள பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சில மாணவர்கள் மட்டுமே நாங்கள் கண்டிப்பாக இந்த பாடப் பிரிவைத்தான் படிப்போம் என்று உறுதியான மனநிலையுடன் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
  • தங்கள் பெற்றோருக்காகவும், மற்றவர்களுக்காகவும் தங்களின் கல்வியைத் தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனால் சுயமாகச் சிந்திக்கும் அவர்களின் ஆற்றலில் பெரும் தடை ஏற்படுகிறது. பள்ளிகள்தோறும் பல நூறு பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால், எந்த பாடப் பிரிவிலும் அந்தப் பாடப் பிரிவில் உள்ள புதிய உத்திகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
  • பாடப் புத்தகங்களில், உதாரணமாக அறிவியல் பாடத்தில் அறிவியல் தொடர்புடைய படிப்புகள்  தமிழகத்திலோ அல்லது இந்திய அளவிலோ என்னென்ன இருக்கின்றன என்பது போன்ற தகவலோ, தொழில் தொடங்குவதற்கான அல்லது வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எங்கு உள்ளன என்பவை குறித்த விவரங்களோ பாடப் புத்தகங்களில் இல்லை.
மாணவர்களின் ஆற்றல்
  • வித்தியாசமான கல்விகளின் விவரங்கள், அதைத் தேர்வு செய்து படித்தால் கிடைக்கும் பலன்கள் போன்ற விவரங்களையும் பாட நூல்களில் குறிப்பிட்டால் மாணவர்களின் ஆற்றல் மேம்படும். கல்வியில் அடுத்த கட்டத்தை நோக்கி அவர்கள் எளிதாக நகர்வதற்கான சிந்தனையும் எழும். வரும் காலங்களில் தமிழக கல்வித் துறை இது தொடர்பாக பரிசீலனை செய்தால் மாணவர்களின் திறன் நிச்சயம் மேம்படும். தங்களின் கனவை வாரிசுகளின் மீது பெற்றோர் திணிக்காமல், அவர்களது கனவைச் செயல்படுத்த உறுதுணையாக இருந்தால் எதிர்கால மாணவச் சமுதாயம், திறன் மிகுந்த சமூகமாக மலரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • ஆகவே, கல்வியாளர்களும், பெற்றோர்களும் மாணவர்களின் கல்வி தொடர்புடைய முடிவுகளில் தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு நிறுத்திக் கொண்டு, மாணவர்களின் கனவுகளையும் லட்சியங்களையும் செயல்படுத்த அனுமதித்தால் அவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும்.  அதுதான் இன்றைய மாணவர்களுக்கு பெற்றோர் செய்யக்கூடிய உதவியாக இருக்கும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories