TNPSC Thervupettagam

விம்பிள்டன் வெற்றிகள்!

July 20 , 2019 1996 days 1443 0
  • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய ஊடகங்களில் தரப்பட்ட முக்கியத்துவம், வழக்கம்போல டென்னிஸூக்குத் தரப்படவில்லை.
  • விம்பிள்டனில் ரோஜர் பெடரரும், ரபேல் நடாலும்தான் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் பெடரர்-நடால் இரட்டையர்களின் முக்கியத்துவத்தை வேறெந்த விளையாட்டு வீரராலும் பின்னுக்குத் தள்ள முடிந்ததில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அவர்கள் இருவரையுமே திணறடித்த பெருமை நோவக் ஜோகோவிச்சுக்கு மட்டுமே உண்டு.
  • இந்த முறை உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான நோவக் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை வென்று, பெடரர்-நடால் ரசிகர்களை மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்குமுன்னால் இதேபோல 2008-இல் பெடரரும்-நடாலும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டபோது அவர்களில் கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற பரவலான எதிர்பார்ப்பு உலகமெங்கும் இருந்தது. அவர்கள் இருவரும் இந்த முறை விம்பிள்டன் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், இந்த முறை அவர்களுக்கு இடையேயான போட்டிக்காக அல்ல, ஜோகோவிச் எழுப்பிய சவாலை எதிர்கொள்வதற்காக.
கடந்த 11 ஆண்டுகளில் 
  • கடந்த 11 ஆண்டுகளில் ஜோகோவிச் தன்னுடைய கிராண்ட் ஸ்லாம் வெற்றி எண்ணிக்கையை ஒன்றிலிருந்து 15-ஆக அதிகரித்துக் கொண்டு பெடரருக்கும், நடாலுக்கும் போட்டியாக சர்வதேச டென்னிஸில் அசைக்க முடியாத வீரராக உயர்ந்திருந்தார்.
  • பெடரருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில், 5 செட்டுகள் விளையாடி வெற்றி பெற்று தனது ஐந்தாவது விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஜோகோவிச்.
  • இப்போதும்கூட, நடாலும் பெடரரும்தான் இரண்டாவது, மூன்றாவது சர்வதேச டென்னிஸ் வீரர்களாக தர நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே உச்சகட்ட திறமையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, ஜோகோவிச் அவர்கள் இருவரையும் மூச்சிரைக்க வைத்து வெற்றி கண்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
  • 2011-இல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டிதான் ஜோகோவிச்சின் இரண்டாவது பெரிய சர்வதேச போட்டி. அப்போது தொடங்கி, ஒன்றுவிட்டு ஒன்று என்பதுபோல அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. 34 சர்வதேச போட்டிகளில் 15 போட்டிகளில் ஜோகோவிச் வெற்றி பெற்றிருக்கிறார். இதே காலகட்டத்தில் பெடரர் நான்கு போட்டிகளிலும், நடால் ஒன்பது போட்டிகளிலும் மட்டுமே வெற்றி அடைந்திருக்கின்றனர். இதுவரை ஜோகோவிச் வெற்றி பெற்றிருக்கும் 16 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், 12 போட்டிகளில் பெடரரையோ, நடாலையோ தோற்கடித்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
விம்பிள்டன் இறுதி ஆட்டம்
  • லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டம் ஒருவகையில் டென்னிஸ் ரசிகர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நான்கு மணி நேரம் 57 நிமிஷங்கள் நடந்த இந்த ஆட்டம்தான் இதுவரை நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டங்களிலேயே மிக அதிகமான நேரம் விளையாடப்பட்ட ஆட்டம். வெற்றி பெற்ற ஜோகோவிச்சும், இரண்டாம் இடம்பிடித்த ரோஜர் பெடரரும் ஆட்டம் முடிந்து மைதானத்தில் இருந்து வெளியேறும்போது இரண்டு பேரும் சேர்ந்து 36 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். ரபேல் நடால் 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
  • 1967-இல் ஆஸ்திரேலிய வீரரான ராய் எமர்சன் 12 கிராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார். அந்தச் சாதனையை 33 ஆண்டுகளுக்குப் பிறகு 2000-ஆம் ஆண்டில் விம்பிள்டன் கோப்பையை வென்று பீட் சாம்ப்ராஸ் முறியடித்தார். ரோஜர் பெடரர், அமெரிக்கரான பீட் சாம்ப்ராஸின் சாதனையை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டனில் தனது 15-ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியின் மூலம் முறியடித்தார். பெடரருக்கு இப்போது 38 வயதாகப் போகிறது. இன்னும் எத்தனை நாள், எத்தனை வெற்றிகளை அவரால் ஈட்ட முடியும் என்கிற கேள்வி எழுகிறது.
  • பெடரரின் சாதனையை 32 வயது ஜோகோவிச் முறியடிக்கக் கூடும். செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் எல்லா வகையான டென்னிஸ் மைதானங்களிலும் விளையாடும் திறமை பெற்றிருப்பதுதான் அதற்குக் காரணம்.
  • டென்னிஸ் விளையாட்டில் "ஹார்ட் கோர்ட்', "கிராஸ் கோர்ட்' என இரண்டு வகை மைதானங்கள் உண்டு. "ஹார்ட் கோர்ட்'டில் தன்னிகரல்லாத வீரராக நடால் இருந்தாலும்கூட, ஆண்டுதோறும் ஒரேயொரு கிராண்ட் ஸ்லாம் ஆட்டம்தான் "ஹார்ட் கோர்ட்'டில் நடைபெறும். மேலும், ஜோகோவிச்சைவிட நடால் ஒரு வயது மூத்தவர் என்பதால் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு 32 வயது ஜோகோவிச்சுக்குத்தான் அதிகம் உள்ளது.
செரீனா வில்லியம்ஸ்
  • பெண்கள் ஆட்டத்தில் செரீனா வில்லியம்ûஸ 6-2, 6-2 என்ற நேர் செட்டுகளில் 56 நிமிஷங்கள் மட்டுமே நடந்த ஆட்டத்தில் தோற்கடித்து தனது முதல் விம்பிள்டன் கோப்பையை வென்றிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த 27 வயது சிமோனா ஹலேப். மகப்பேறுக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்த 37 வயது செரீனா எதிர்கொள்ளும் மூன்றாவது தொடர் தோல்வி இது.
  • அவர் தனது தோல்வியை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, முதல்முறையாக  வெற்றி பெற்றிருக்கும் சிமோனா ஹலேப்பை ஆரத்தழுவி பாராட்டியது ஏனைய விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணம்படைக்கிறது!

நன்றி: தினமணி (20-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories