TNPSC Thervupettagam

வீழ்கிறதா வெனிசுலா?

February 27 , 2019 2140 days 2061 0
  • தென்னமெரிக்க நாடான வெனிசுலா கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
  • அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் உச்சமடைந்திருக்கின்றன.
  • ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுமா, நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தொடருவார்களா, அமெரிக்கா இதில் தலையிடுமா என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
  • இடதுசாரிகளால் ஆதர்சமாகப் பார்க்கப்பட்ட நாடு ஆதங்கமாகப் பார்க்கப்படும் நிலைக்கு வந்தது ஏன்?
  • இந்தக் கேள்விக்கான பதிலில் பிற நாடுகளுக்குமான பாடமும் இருக்கிறது.
  • வெனிசுலாவுக்குப் பிரச்சினைகள் தொடங்கியது 2010-ல்.
  • ஹியுகோ சாவேஸ் அப்போது அதிபராக இருந்தார்.
  • இடதுசாரியான அவர் நாட்டின் மிகப் பெரிய இயற்கைச் செல்வமான பெட்ரோலிய எண்ணெய் வளத்தை நாட்டுடமையாக்கினார்.
  • எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த தொகையில் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் செய்ய முற்பட்டார்.
  • இதில் அவருக்கு கியூபா உள்ளிட்ட நாடுகள் முன்மாதிரியாகத் திகழ்ந்தன.
  • நல்ல நோக்கம்; மோசமான விளைவு
  • நாட்டுடமையாக்கும் கொள்கையை விவசாயத்தின் ஒரு பகுதி உள்பட பல துறைகளுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
  • பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்.
  • நல்ல நோக்கத்துடன் அவர் கொண்டுவந்த இந்நடவடிக்கைகள் பல சிக்கல்களையும் உருவாக்கின.
  • லாபம் குறைவது மட்டுமல்ல, உற்பத்திச் செலவுக்குக்கூட கட்டுப்படியாகாது என்ற நிலையில் பல  தனியார் உற்பத்தியாளர்கள் தொழிலைவிட்டு வெளியேறினர்.
  • இதனால் உற்பத்தி இழப்பு, வேலையிழப்பு ஏற்பட்டது.
  • உள்நாட்டில் தயாரான பொருட்களை அதிக விலைக்கு வெளிநாடுகளிலிருந்து வாங்க நேரிட்டது.
  • அரசால் எல்லா துறைகளிலும் தலையிட்டு கட்டளையிட முடிந்ததே தவிர உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை.
  • அரசின் கொள்கைகளால் அஞ்சிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கினர்.
  • அவர்களுடன் உள்நாட்டுப் பணக்காரர்களும் முதலுடன் வெளியேறினர்.
  • தனியாரிடமிருந்து அரசுத் துறைக்குப் பல நிறுவனங்கள் வந்தன.
  • எனினும், லஞ்சமும் ஊழலும் வேண்டியவர்களுக்குச் சலுகை அளிக்கும் போக்கும் தலைதூக்கின.
  • உற்பத்தியும் குறைந்தது.
  • பொருட்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குக் கிடைத்தன.
  • மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கியது. வி
  • வசாயம் உட்பட எல்லாத் துறைகளிலும் உற்பத்திக் குறைவு ஏற்பட்டது.
  • மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றுக்குக்கூட தட்டுப்பாடுகள் வரலாயின.
  • திண்டாடும் மக்கள்
  • 2011-ல் வெனிசுலாவின் அரசு எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தடை விதித்தது.
  • 2015 முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை சரியத் தொடங்கியது.
  • ஏற்றுமதி வருவாயில் 96% எண்ணெய் மூலம் கிடைத்தது, அது கணிசமாகக் குறைந்தது.
  • வருவாயும் லாபமும் குறைந்தாலும் அரசு தன்னுடைய செலவைக் குறைத்துக்கொள்ளவில்லை.
  • ஊதியம், படிகளும் அப்படியே தொடர்ந்தன.
  • நாட்டின் நிர்வாகத்தில் ஜனநாயகத் தன்மையும் படிப்படியாகக் குறைந்தது.
  • அதிபரைக் கேள்வி கேட்பவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.
  • தேசத்துரோகிகள்,  அமெரிக்க ஏஜென்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.
  • ஊக வியாபாரிகளால்தான் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பின்னடைவே தவிர வேறு ஒன்றுமில்லை என்று ஆட்சியாளர்கள் வாதிட்டனர்.
  • இன்றைக்கு வெனிசுலாவில் விலைவாசி உயர்வு அச்சப்படத்தக்க வகையில் உயர்ந்துவருகிறது. பால், இறைச்சி, கோழி, காபி, அரிசி, எண்ணெய், வெண்ணெய், ரொட்டி தயாரிப்பதற்கான மாவு, மருந்துகள், சுகாதாரத்துக்கு அவசியமான கிருமிநாசினிகள், சானிடரி நாப்கின் போன்றவற்றுக்குக்கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • அரசின் ரேஷன் கடைகள் மட்டுமல்ல, பொது அங்காடிகளின் வாசல்களிலும்கூட மக்கள் மிக நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.
  • 90% பேர் வறுமையில் ஆழ்ந்துவிட்டனர்.
  • நாட்டின் நிலைமை சரியில்லாததால் இதுவரை 23 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டனர்.
  • 50% மக்களுக்கு அடிப்படை உணவுகூட கிடைக்கவில்லை.
  • 2017-ல் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கைப்படி 75% மக்கள் சரியான உணவின்றி தங்களுடைய எடையில் சராசரியாக 8 கிலோ இழந்துள்ளனர்.
  • ரத்த சோகை உள்ளிட்ட நோய்கள் பெண்கள், குழந்தைகளைப் பீடித்துள்ளன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் எல்லா குப்பைக்கூடைகளையும் கிளறி தின்பதற்கோ, விற்பதற்கோ ஏதாவது தேறுகிறதா என்று பார்க்கிறார்கள்.
  • குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். நாட்டில் உள்ள 21 பெரிய அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படுவோரில் சரிபாதி, சிறு குழந்தைகள்தான்.
  • மருத்துவமனைகளின் நிலைமையும் பரிதாபம்தான்.
  • குற்றச் செயல்களிலும் வெனிசுலா இப்போது முதலிடத்தில் இருக்கிறது.
  • லட்சம் பேருக்கு 56.3 பேர் கொலை செய்யப்படுகின்றனர்.
  • ஊரில் இப்போது நாய், பூனை, கழுதை, குதிரை ஆகியவற்றைப் பார்க்க முடிவதில்லை.
  • இரவு நேரங்களில் இவற்றைக் கொன்று தின்கிறார்கள்.
  • பகலில் குப்பைக் கூளங்களுக்கு நடுவே துர்நாற்றமடிக்கும் இவற்றின் உடலுறுப்புகள் அழுகிக்கிடக்கின்றன.
  • நாட்டின் நிலைமையால் 19 விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான சேவையை நிறுத்திவிட்டன.
  • அதிகரித்திருக்கும் ஊழல்
  • 2015-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 5.7% குறைந்தது.
  • 2016-ல் அது மேலும் 18.6% குறைந்தது. பணவீக்க விகிதம் பின்வருமாறு உயர்ந்தது.
  • 2014 - 69%, 2015 - 181%, 2016 - 800%, 2017 - 4,000%, 2019 - 26,88,670%.
  • இடி அமீன் ஆட்சியில் உகாண்டாவில்கூட இப்படி இருந்ததில்லை.
  • இந்தப் பணவீக்க விகிதத்தைப் படிப்பவர்கள் அச்சுப் பிழையா அல்லது கற்பனையா என்று வியக்கும் அளவுக்கு பணவீக்க விகிதம் அதிகரித்துவருகிறது.
  • இப்படியொரு நாட்டில் நிலைமை முற்றினால் அங்கே மக்கள் புரட்சி செய்வார்களே, இடதுசாரிகள் செல்வாக்குள்ள நாடாக இருந்தாலும் ராணுவமே தலையிட்டிருக்குமே என்று கேட்கலாம்.
  • இங்குதான் இன்னொரு அவலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
  • அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொறுப்பு ராணுவம் மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது.
  • ராணுவ அதிகாரிகளே லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் பொருட்களைக் கொடுப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.
  • எனவே, கூட்டத்தில் கலவரம் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
  • அந்நாட்டின் செலாவணியான பொலிவருக்கு அறவே மதிப்பில்லை என்பதால் பொருட்களாகத்தான் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.
  • இன்றைக்கு ஊழலில் ஊறித்திளைக்கும் முதல் 20 நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருப்பது வேதனை!
  • சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பிறகு அதைச் சார்ந்திருந்த கியூபா, அல்பேனியா போன்ற நாடுகளில்கூட நிலைமை இத்தனை மோசமடையவில்லை என்கிறார்கள்.
  • கச்சா பெட்ரோலியத்தின் விலைச் சரிவால் வெனிசுலா மட்டுமில்லை, ரஷியாவின் பொருளாதாரமும் பாதிப்படைந்தது.
  • ஆனால், அந்நாடு பிற துறைகளிலும் உற்பத்தி, விற்பனை ஆகியவற்றின் மூலம் வருமானத்தைப் பெறுவதால் இழப்பு அதிகமாகத் தெரியவில்லை.
  • அடுத்த கட்டமாக வெனிசுலா மீது பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
  • அந்த எச்சரிக்கை உண்மையானால் வெனிசுலாவால் எழுந்து நிற்கக்கூட முடியாது. வெனிசுலா இந்த நெருக்கடிகளிலிருந்து மீளுமா என்பதை உலகம் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
  • மீண்டுவரட்டும் சாவேஸின் தேசம்!

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories