TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா இல்லையா?

February 25 , 2019 2145 days 1872 0
  • நரேந்திர மோடி பிரதமரானது முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெருகியதா, இல்லையா என்ற கேள்விக்குச் சரியாக விடையளிக்க முடியவில்லை நம்மால் – அதாவது அரசாங்கத்தால்.
  • ‘அமைப்பு சாரா துறைகளில் ஏற்படும் வேலைவாய்ப்புகள் அரசின் தரவுகளில் ஏற்றப்படாததால், அங்கே பெருகிய வேலைவாய்ப்புகளைத் தொகுத்துக் கூற முடியவில்லை’ என்கிறது அரசுத் தரப்பு. ‘பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது,
  • பேரியியல் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களும் செழிப்பாக இருக்கின்றன. எனவே, வேலைவாய்ப்பும் பெருகியிருக்க வேண்டும்’ என்கிறது அரசு.
  • ‘பொருளாதாரம் செழிப்படைந்திருக்கிறது. ஆனால், வேலைவாய்ப்பு அந்த அளவுக்குப் பெருகவில்லை’ என்கிறது எதிர்த்தரப்பு.
  • தரவுகள் இல்லை என்று கூறும் அரசு, அப்படிப்பட்ட தரவுகளைத் திரட்டுவதற்கு ஏதும் செய்யவில்லை.
  • 2014 முதல் மத்திய அரசின் நிதிநிலைப் பற்றாக்குறை, பணவீக்க விகிதம் ஆகியவை கட்டுக்குள் இருப்பதால் பொருளாதாரமும் செழித்துள்ளது, வேலைவாய்ப்பும் பெருகியிருக்கிறது என்று கருதுகிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
  • இவ்விரு அம்சங்களும் அவர்களுடைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும்கூட இருந்தன.
  • நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கூறியவர், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் விவசாயிகளுக்கு நேரடி வருமான உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.
வேலைவாய்ப்பு பற்றி மவுனம்
  • மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் எந்த ஆட்சியாளர்களும் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசுவதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.
  • பொருளாதாரம் வளர்ந்தால் மட்டும் போதாது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தால்தான் வாழ்க்கைத் தரம் உயரும்.
  • ஆட்சியாளர்களின் வெற்றி, அவர்கள் உருவாக்கும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே கணிக்கப்பட வேண்டும்.
  • 2014 மக்களவைத் தேர்தலின்போது, வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று மோடி பிரச்சாரம் செய்தார்.
  • அரசின் தொழிலாளர் துறை தரும் வேலைவாய்ப்புத் தரவுகளும், ‘இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்’ (சிஎன்ஐஇ) என்ற சுயேச்சையான அமைப்பும் தரும் தகவல்கள் 2015 வரையில் வேலைவாய்ப்பு உயர்ந்து வந்ததைத் தெரிவிக்கின்றன.
  • அப்படி வளர்ந்ததற்கான காரணங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
  • மோடி பிரதமரான பிறகு, வாக்குறுதி அளித்த அளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட முடியவில்லை என்பது தெளிவாகிறது.
  • வேலைவாய்ப்பு பெருகாமலேயே வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
  • ஒருவேளை, அவர் பிரதமராக இருக்கும் காலத்தில் வேலைதேடுவோர் எண்ணிக்கையே சுருங்கிவிட்டிருக்கக்கூடும்.
  • தொழிலாளர்கள் என்றாலே வேலையில் இருப்பவர்கள், வேலை கிடைக்காதவர்கள் இருவரின் கூட்டுத்தொகைதான். மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே போகும் சமூகத்தில், தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகாமலிருப்பது வழக்கத்துக்கு மாறானது.
பணமதிப்பு நீக்க விளைவு
  • வேலைவாய்ப்பு குறைவது 2015-ல் தொடங்கியது.
  • பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு  2016-ல் தீவிரமானது. எனவே, வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களில் ஒரு பிரிவினர், வேலைதேடும் முயற்சியிலிருந்து விலகிவிட்டிருக்கக்கூடும். இப்படியொரு சாத்தியம் மேற்கத்திய நாடுகளில் காணப்படுகிறது.
  • திறமை மிகுந்த தொழிலாளர்கள் ஏதோ சில காரணங்களால் குறுகிய காலத்துக்கு வேலைசெய்யாமல் இருந்தாலும்கூட தேசப் பொருளாதாரத்துக்கு அது இழப்பை ஏற்படுத்திவிடும்.
  • எனவே, அரசின் பொதுக் கொள்கையானது எந்தக் காலத்திலும் வேலைதேடுவோருக்குத் தகுந்த வேலை கிடைப்பதை உறுதிசெய்வதாக இருக்க வேண்டும்.
  • வேலைசெய்யும் உடல் தகுதியில் உள்ள பலர், வேலைவாய்ப்பு இல்லாததால் வேலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர் என்பதையே இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
  • அதற்கு மாறாக, பேரியியல் பொருளாதாரக் காரணிகள் வளமாக இருக்கின்றன என்றும், தங்களுடைய நிர்வாகத் திறமைதான் அதற்குக் காரணம் என்றும் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமானது என்று அரசு கூறினாலும், ஏற்கெனவே வேலையில் இருந்தவர்கள் இனி நமக்கு வேலையே கிடைக்காது என்று மனச்சோர்வு அடைந்து, வேலை தேடலிலிருந்து விலகியது பெருத்த இழப்பாகும்.
  • 2011-க்குப் பிறகிலிருந்தே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகிவருகிறது. 2019 மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 2011-லிருந்து 2015-க்குள் வேலையில்லாதோர் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டது.
  • இதை அரசின் அறிக்கை எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாக இருக்கிறது. மத்தியில் ஆட்சிக்கு வருவது எந்தக் கூட்டணியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு குறித்த அணுகுமுறை ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
  • வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து இப்படி முறுக்கிப் பிழிந்துகொண்டிருப்பதைவிட, அது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.
  • பேரியியல் பொருளாதாரத்தை ஆய்வுசெய்வது இதற்கு உதவும். உற்பத்தி வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் மூலதனத் திரட்சியைப் பொறுத்தது.
  • 2011-12 முதல் மூலதனத் திரட்சி குறைந்துகொண்டே வருகிறது. நுகர்வுக்கான செலவைவிட மூலதனங்கள் மீதான செலவுதான் பொருளாதாரத்தின் தேவை – அளிப்பு ஆகிய இரு பகுதிகளையும் விரிவடையச் செய்யும்.
  • மூலதனத் திரட்சி குறைந்துகொண்டே வந்ததை அறிந்தும்கூட காங்கிரஸ் கூட்டணியும் பாஜக கூட்டணியும் பொது முதலீட்டை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவேயில்லை.
  • இந்தத் தேக்க நிலையை அரசியல் தளத்திலும் காண முடியும்.
  • காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி, அதன் அரசியல் தளத்தை விரிவுபடுத்த வாய்ப்பளித்தது. ‘அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற கோஷத்தையே அது முன்வைத்தது.
  • பிறகு, நரேந்திர மோடி, தேசிய அரசியல் களத்துக்கு வரத் தொடங்கினார். ‘வாஷிங்டன் கருத்தொற்றுமை’ என்ற கொள்கையைப் பின்பற்றினார்.
  • சோவியத் ஒன்றியம் உடைந்து நொறுங்கிய பிறகு, ‘வாஷிங்டன் கருத்தொற்றுமை’ பிரபலமானது.
  • வாஷிங்டன் கருத்தொற்றுமை என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம், அமெரிக்க நிதித் துறை உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்திய 10 பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். அதில் முக்கியமானது, குறைந்தபட்ச அரசுத் தலையீடு.
  • அதன்படி அரசுகள் தங்களுடைய பணிகளை வரம்புக்குள் சுருக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் சந்தை உதவியுடன், தேவைப்படும் உற்பத்திக்கு வழிவிட வேண்டும்.
  • இந்தக் கொள்கைப்படி, வேலை தேவைப்படுவோர் யாரும் வேலையில்லாமல் வீட்டில் இருக்க மாட்டார்கள்.
  • எனவே, காங்கிரஸ், பாஜக கூட்டணிகளின் கருத்துகளும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருந்தாலும் வேலைவாய்ப்பை அரசுதான் பெருக்க வேண்டும் என்று எண்ணாமல் தன்போக்கில் பெருகிக்கொள்ள விட்டுவிட்டார்கள்.
தோல்விக்கான விலை
  • பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையே நம்முடைய அரசு அமைப்பாகக் கொண்டிருக்கிறோம்.
  • சில பொருளாதாரப் பிரச்சினைகள் நமக்கு மட்டுமே உரித்தானவை என்றாலும் நாம் தனித்து கொள்கைகளை உருவாக்கிப் பலன்களை அடைய முடியாது. வேலைவாய்ப்பு அதில் ஒன்று.
  • தனிநபர்களுக்கானவைதான் வேலைவாய்ப்புகள் என்றாலும், பேரியியல் பொருளாதாரக் காரணிகள்தான் அதைத் தீர்மானிக்கின்றன. தனிநபர்கள் தாங்களாக வேலைவாய்ப்பு நிலையை மாற்றிவிட முடியாது.
  • 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கமும் அமெரிக்காவில் தொடங்கி, பிறகு எல்லா நாடுகளுக்கும் பரவின.
  • சந்தையில் உள்ள சக்திகள் ஒரு விளைவைத் தீர்மானிக்கும்போது தனிநபர்களால் ஏதும் செய்துவிட முடியாது என்பதற்கு இவ்விரண்டும் உதாரணங்கள்.
  • ஜனநாயக நாட்டில், வேலைவாய்ப்பை உருவாக்க எந்தவிதமான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அரசியல் தலைவர்களின் கடமை.
  • இந்திய அரசியல் தலைமை வேண்டுமென்றோ அல்லது அலட்சியம் காரணமாகவோ இதில் தவறிவிட்டது.
  • ஆட்சிசெய்யும் வாய்ப்பை மக்கள் அளிக்கும்போது, வேலைசெய்யும் உடல்நிலையில் உள்ள அனைவருக்கும் நல்ல வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆட்சியாளர்களின் கடமையாகும்.
  • வேலைவாய்ப்பை வழங்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும், இதில் தவறுவோர் நடையைக் கட்ட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories