TNPSC Thervupettagam

1 லட்சம் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதி: ஆப்பிள் நிறுவனம் அமைக்கிறது...

November 12 , 2024 65 days 95 0

1 லட்சம் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதி: ஆப்பிள் நிறுவனம் அமைக்கிறது...

  • உலகம் முழுவதும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. அப்படி வேலை நிமித்தமாக வெளி ஊர்களிலிருந்து வரும் அவர்களுக்கு தங்கும் வசதி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. பல விடுதிகளில் அதிக வாடகை வசூலிப்பதோடு, பாதுகாப்பு உள்ளிட்ட உரிய அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற கஷ்டங்களை உணர்ந்துதான் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது பெண்களுக்கான மெகா தங்குமிட வசதியை ஏற்படுத்தி தருவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளன.
  • சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ள ஆப்பிள், பாக்ஸ்கான் சிட்டி என்று அழைக்கப்படும் ஷென்ஸென் வளாகத்தில் 4.2 லட்சம் பெண் பணியாளர்கள் தங்கும் வகையிலும், ஷென்ஸோகுவில் உள்ள ஐபோன் சிட்டியில் 3 லட்சம் பெண்கள் தங்கும் வகையிலுமான விடுதிகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதைப் போலவே இந்தியாவில் உள்ள ஐபோன் உதிரி பாக நிறுவனங்களில் பணிபுரியும் 1 லட்சம் பெண்கள் தங்குவதற்காக விடுதிகளை கட்டிக் கொடுக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • இந்த விடுதி திட்டம் பிபிபி எனப்படும் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை அடிப்படையில் கட்டப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான், சென்னை அருகே ஆப்பிள் ஐபோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு அரசின் சிப்காட்டுடன் இணைந்து 18,720 பெண் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி வளாகத்தை கட்டி உள்ளது. இந்த வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதுதவிர, ஸ்ரீபெரும்பூதூரில் மேலும் 18,112 பெண்கள் தங்குவதற்கான விடுதி வளாகத்தை எஸ்பிஆர் சிட்டி எஸ்டேட் நிறுவனம் கட்டி வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 41,000 பேரில் 35,000 பேர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது.
  • ஆப்பிளின் ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ்கான், பெகட்ரான் (தமிழ்நாடு), டாடா எலக்ட்ரானிக்ஸ் (ஓசூர்) ஆகிய மூன்று ஐபோன் ஆலைகளில் மட்டும் 80,000-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து ஒசூரில் 40 ஆயிரம் பெண்கள் தங்குவதற்கான விடுதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  • டாடா நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கும் இரண்டாவது ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் உற்பத்தியை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை உச்சநிலை உற்பத்தியை எட்டும்பட்சத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆலைக்கான ஆட்சேர்ப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
  • மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு உதிரிபாக உற்பத்தி நிறுவனமான சால்காப்பில் பணிபுரியும் 4 ஆயிரம் பெண்கள் தங்குவதற்கான விடுதியும் கட்டப்பட உள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,75,000 வேலைவாய்ப்பு வழங்கி ஆப்பிள் முக்கிய பங்காற்றி வருகிறது.
  • இதனை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 2 லட்சமாக அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதில், 70 சதவீதம் பேர் 18-24 வயதுக்குட்பட்ட பெண்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வியட்நாம், சீனாவில் இதுபோன்ற விடுதிகள் கட்டப்பட்டு அவர்களின் வேலைத் திறன் மேம்பட்டது மட்டுமின்றி, பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, அந்த மாடலை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவன குடியிருப்பு வரும் நிதியாண்டின் இறுதிக்குள் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முழுவதும் செயல்பாட்டுக்கு வந்தால் இந்திய தொழில் துறை வரலாற்றில் மிகப்பெரிய விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுத்த நிறுவனம் என்ற பெருமை ஆப்பிளுக்கு கிடைக்கும்.
  • அதேநேரம், ஆப்பிள் அமைக்கும் இந்த மெகா குடியிருப்பு திட்டம் இந்திய பெண் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பெண்பணியாளர்களை அதிகம் கொண்டுள்ள பெரிய நிறுவனங்கள் அவர்கள் தங்குவதற்கு ஆரோக்கியமான, அமைதியான, பாதுகாப்பான இருப்பிட சூழலை ஏற்படு்த்தி தரும்பட்சத்தில் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கும் என்பது உலகளவில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories