TNPSC Thervupettagam

12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு

April 27 , 2023 626 days 405 0
  • நிலம் கையகப்படுத்தும் சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றில் நரேந்திர மோடி அரசு கடைப்பிடித்த அதே அணுகுமுறைத் தவறை, 1948-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்த மசோதாவில் தமிழக அரசும் செய்திருக்கிறது. முறையான கலந்தாலோசனைகளும், விவாதங்களும் நடந்திருந்தால் பிரச்னை இல்லாமல் அந்த மசோதா சட்டமாகியிருக்கும்.
  • தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசு ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. 1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டம் அப்படியே நடைமுறையில் தொடரும். வாராந்தர, தினசரி வேலை நேரம், வரம்புமுறைகள், ஓய்வு, இடைவேளை, மிகை நேரம், மிகை நேரப்பணிக்கான ஊதியம் போன்றவையும் அப்படியே இருக்கும். ஆனால், தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் சில பன்னாட்டு நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத் தன்மை கோரியதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது.
  • தொழிற்சாலைகள் சட்டத்தின் 65 (ஏ) பிரிவின் கீழ் விதிவிலக்குக் கோரும் தொழிற்சாலைகளுக்கு, அரசின் பரிசீலனைக்குப் பிறகு சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் தொழிலாளர்களின் நலன் பாதிக்காத வகையில் அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மசோதாவைத் தாக்கல் செய்தபோது தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்றும், இந்தத் திருத்தத்தை உயர்நிலைக் குழு முழுமையாக பரிசீலனை செய்துதான் மசோதா கொண்டுவரப்படுகிறது என்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்தார்.
  • எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் திமுகவின் கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசின் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்காக நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பணி நேர விதிவிலக்கு வழங்குவது என்பதுதான் அரசின் நோக்கம் என்பதை, எதிர்ப்பாளர்கள் உணரும் விதத்தில் எடுத்தியம்ப அரசுக்கு இயலவில்லை என்பதுதான் நிறுத்தி வைத்ததற்கான பின்னணி.
  • அரசின் நோக்கம் கணிணி, மின்னணு, காலணித் தயாரிப்பு போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொடுத்து ஊக்குவிப்பது என்பதுதான். அதை முன்கூட்டியே எல்லோரையும் வரவழைத்து கலந்தாலோசித்து முடிவெடுக்காதது தவறு. குறைந்தபட்சம் கூட்டணிக் கட்சிகளையாவது கலந்தாலோசித்திருக்கலாம். கூட்டத்தொடரின் கடைசி நாளில் அவசரக்கோலத்தில் மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றிக்கொண்டதால், தொழிற்சங்கங்கள் அரசின் நோக்கத்தை சந்தேகித்தன.
  • தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா 2023 இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆளுநருக்கு அனுப்பி சட்டமாக்கப்போவதில்லை. அநேகமாக அந்த மசோதா கைவிடப்பட்டது என்றுதான் கருதவேண்டும்.
  • அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தொழிலாளர்களின் செயல்பாடுகளுக்கும், இப்போதைய சூழலுக்கும் நிறையவே வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது. கணிணிமயமும், மின்னணுமயமும், இயந்திரமயமும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றி அமைத்து விட்டன. குறிப்பாக கணினி மூலம் இணையம் சார்ந்த செயல்பாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில், வீடுகளிலிருந்து வேலை பார்க்கும் நிலைமை அதிகரித்து வருகிறது.
  • அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் செயல்படும் நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்தியாவிலிருந்து "பேக் ஆபீஸ்' என்கிற பெயரில் செயல்படுகின்றன. அவர்களுக்கு பகல் என்பது நமக்கு இரவு என்பதால், அவை பெரும்பாலும் இரவில்தான் இயங்குகின்றன. அவற்றின் வேலை நேரம் நெகிழ்ச்சித் தன்மையுடையது. சீனா போன்ற நாடுகள் 12 மணி நேர வேலை உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்குகின்றன.
  • பிரிட்டனில் கடந்த ஆண்டு, வாரத்துக்கு நான்கு நாள் வேலை முறை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப் பட்டது. ஜூன் முதல் டிசம்பர் வரை 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதை நடைமுறைப் படுத்தின. பிப்ரவரி மாதம் பெறப்பட்ட ஆய்வின் முடிவு பல தகவல்களை வழங்கியது. ஊழியர்களின் உடல்நிலையும், உற்பத்தித் திறனும் வாரத்துக்கு நான்கு நாள் வேலை திட்டத்தால் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
  • பெரும்பாலான நிறுவனங்கள் அந்த முறையை ஊழியர்களின் சம்மதத்துடன் தொடர முற்பட்டிருக்கின்றன. அதேபோன்ற பரீட்சார்த்தங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்டு ஆதரவு பெருகி வருகிறது.
  • 12 மணி நேர வேலை என்பது தொழிற்சாலைகள், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், பொது நிர்வாகம், காவல் துறை போன்றவற்றுக்கு பொருந்தாது. 12 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவது பலரது உடல்நிலையையும் ஓய்வு நேரத்தையும் பாதிக்கும். அலுவலகங்களுக்கு வந்து போவதற்கான போக்குவரத்து பிரச்னையும் இருக்கிறது. அதனால் சட்டத் திருத்தத்தை வாய்ப்பாக மாற்றி, எல்லாத் துறையிலும் 12 மணி நேர வேலை முறையை அறிமுகப்படுத்தி, கூடுதல் நேர பணிக்கான (ஓவர் டைம்) ஊதியத்தை நிறுவனங்கள் மிச்சப்படுத்தக்கூடும் என்கிற தொழிலாளர்களின் நியாயமான அச்சத்தை புறந்தள்ளிவிட முடியாது.
  • முன்பே கலந்தாலோசித்திருந்தால் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்!

நன்றி: தினமணி (27 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories