TNPSC Thervupettagam

14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்

October 11 , 2023 283 days 225 0
  • சேகர் குப்தா, ராஜ்தீப் சர்தேசாய், கரண் தாப்பர், ரூபன் பானர்ஜி போன்றவர்களுக்கு இதழியல் குறித்து நான் கற்றுத்தர என்ன இருக்கிறது? எதுவுமில்லை. இந்தியாவில் இன்னமும் மதிக்கப்படுகிற நல்ல பத்திரிகையாளர்கள் இவர்கள். இவர்களை விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிக் குறை காண்பவர்கள்கூட அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்கிறார்கள்.
  • ஊடகத் துறை தொடர்பாக அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கருத்து தெரிவித்தால் நான்கூட அதை அப்படியே ஏற்பேன்.  அரசியல் – தார்மிக நெறிகள் பற்றி அவர்கள் பேசினாலும், அவர்கள் சொல்வது சரிதானா என்று ஆராய்வேன்.

மூன்று வகையான வாதங்கள்

  • எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி, தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த 14 பத்திரிகையாளர்கள் நெறியாளர்களாகப் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இனிப் பங்கேற்பதில்லை என்ற முடிவை அறிவித்த பிறகு குப்தா, தாப்பர் மட்டுமல்ல வேறு பலரும்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலைத் திரும்பப் பெறுங்கள் என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தலையங்கமே எழுதியது. அவர்கள் சொல்வது கவனமுடன் கேட்கப்பட வேண்டியது, காரணம் அவர்கள் இப்போதைய ஆட்சியாளர்களுடைய தயவுக்காக எழுதுகிறவர்களும் அல்ல, அவர்களுடைய துதி பாடிகளும் அல்ல.
  • ‘செய்தி ஒளிபரப்பாளர் – எண்ம ஊடக சங்கத்தார்’ போன்ற ஜால்ரா ஊடகத்தவர் போல அல்ல மேலே குறிப்பிட்டவர்கள்; ‘இன்டியா’ எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை, இந்திரா காந்தியின் நெருக்கடி காலத்துடன் பொருத்தமில்லாமல் அந்த அமைப்பு முடிச்சுப் போட்டிருக்கிறது! இப்போதைக்கு இந்தப் புறக்கணிப்பு அறிவிப்பு தொடர்பான விவாதங்கள் ஓய்ந்துவருகின்றன.
  • ரவீஷ் குமார் போன்றவர்கள் இந்த முடிவு சரியல்ல என்று அழுத்தமாக எழுதியுள்ளனர். ‘இது நிரந்தரப் புறக்கணிப்பு அல்ல - நிபந்தனைகளுக்கு உள்பட்டதே’ என்று ‘இன்டியா’ கூட்டணி அந்த அறிவிப்பிலேயே கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தின் சிடுக்குகளை அகற்றிவிட்டு ஆராய்வது நல்லது, காரணம் இது நீண்ட கால விளைவுகளுக்கு இட்டுச்செல்ல வல்லது.

இந்தப் புறக்கணிப்பு கூடாது என்பவர்கள் மூன்று வகையான வாதங்களை முன்வைத்துள்ளனர்

  • உள்ளார்ந்த தார்மிகம் பற்றியது: தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்களில் சிலரை மட்டும் பட்டியலிட்டுப் புறக்கணிப்பது தவறு என்பது அவர்களுடைய கருத்து.
  • இதனால் ஏற்படக்கூடிய எதிர்காலச் சங்கிலித் தொடர் விளைவுகளையும் புறக்கணிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துவது. எதிர்காலத்தில் இதைவிட மோசமான நெறியாளர்களை அது உருவாக்கிவிடும் என்ற எச்சரிக்கையும் அதில் அடங்கும்.
  • வியூகரீதியாக அந்த முடிவு சரியல்ல என்பது. செய்தி ஊடகங்களுடனான உறவுக்கு இது சரியான வழிமுறை அல்ல என்பது இதன் சாரம்.

செல்லாத தார்மிக கண்டனம்

  • ஜனநாயகமும் சுதந்திரமான கருத்துரிமையும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஊடகர்கள் சிலரை எதிர்க்கட்சிகளே ஒதுக்கி ஒரங்கட்டுவது அந்த உணர்வுகளுக்கே எதிரானது என்பது முதல் வகை விமர்சனம்.
  • ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தனது தலையங்கத்தில் இந்த முடிவைப் பின்வருமாறு கண்டிக்கிறது: “வெறுப்பு பரப்பப்படுவதை ஆதரிக்கவில்லை என்று மேடையில் அலங்காரமாகப் பேசிவிட்டு, வெறுப்புச் சந்தையில் அன்பைப் பராமரிக்கும் கடையைத் திறந்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மீட்கப்போகிறோம் என்பவர்கள், தங்களுடைய கருத்துக்கு மாறானவர்களைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதையே இந்த முடிவு காட்டுகிறது” என்று சுட்டியுள்ளது.
  • விவாதத்துக்கும் உரையாடலுக்கும் உள்ள வழியை அடைத்துவிடும் முடிவு இது என்று தலையங்கம் தெரிவிக்கிறது. சேகர் குப்தா தனது ‘த பிரிண்ட்’ நாளிதழில் தெரிவித்த சில கருத்துகள் இதனுடன் ஒத்துப்போகிறது.
  • இந்த வாதத்தை நுணுக்கமாக ஆராய்ந்தால், கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் புறக்கணிப்பை இணைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது என்பது தெளிவாகிறது. மதவெறுப்பை ஆதரிப்பது, வெறுப்பை விதைப்பது, இனப் படுகொலையை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை ஆதரிப்போரை சுதந்திரச் சிந்தனையாளர்கள் புறக்கணிக்கக் கூடாது என்பது விந்தையான வாதம்.
  • கட்டுப்பாடுகளற்ற பேச்சுரிமையை வலியுறுத்திய பிரிட்டிஷ் மெய்யியலாளர் ஜான் ஸ்டூவர்ட் மில்கூட, தானாகவே ஒரு சிலரைப் புறக்கணித்து மௌனமாக இருப்பதும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று கருத மாட்டார். பேசாமலிருப்பது என்று ஒருவர் தீர்மானிப்பதற்கும், அடுத்தவரைப் பேசவிடாமல் வாயைத் தைப்பதற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது.
  • கையில் அதிகாரம் வைத்திருப்பவர்கள்தான், பேசக் கூடாது என்று அடுத்தவர் வாயை அடைப்பார்; தன் வாயைத் தானே மூடிக்கொள்கிறவர் அப்படியல்ல. இந்த நெறியாளர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று ‘இன்டியா’ கூட்டணி வலியுறுத்தியிருந்தால், இது தவறு என்ற வாதம் சரியாக இருக்கும்.
  • அல்லது இந்த நெறியாளர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ அவர்களுடைய அலுவலகம் மீதோ தாக்குதல் நடத்தியிருந்தால் அதைக் கண்டிப்பது சரியான செயலாக இருக்கும். தங்களுடைய நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் வரக் கூடாது என்று தடை விதித்திருந்தால்கூட அதைத் தவறு என்று கண்டிக்கலாம். இதை எதையுமே அவர்கள் செய்யவில்லையே?
  • சட்டப்படியும், அரசியல் கருத்துகளுக்கு ஏற்பவும், தார்மிக உரிமைகள் அடிப்படையிலும் எதிர்க்கட்சிகள் கூடி, வேண்டுமென்றே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் ஊடகர்களின் நிகழ்ச்சிக்குச் செல்வதில்லை என்று முடிவெடுத்திருப்பது மிகச் சரியானது; கோமாளிகளுடன் கூத்தாடுவதில்லை என்ற முடிவில் என்ன தவறு இருக்க முடியும்? வெறுப்பை வளர்க்கிறவர்களுடன் சேராமலிருப்பது ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.
  • சில வகை சூழல்களுக்கு, ‘புறக்கணிப்பு’ என்பதே சரியான வழிமுறையாகும். வகுப்புவாத நஞ்சைத் தூவிய பத்திரிகைகளைப் புறக்கணிக்குமாறு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்ததை இங்கே நினைவுகூர்வது பொருத்தமானது. புறக்கணிக்க யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அது வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் அமைய வேண்டும்.

இங்கே வேறொன்றும் கவனிக்கப்பட வேண்டும்

  • புறக்கணிப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா, அந்த அளவுக்கா அவர்கள் நடந்துகொண்டார்கள்? இதிலுமே விவாதிக்க ஏதுமில்லை. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கமே அவர்களைப் பற்றிக் கூறும்போது – ‘வெறுப்பை நாவிலே கொண்டவர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிரில் மண்டியிடுகிறவர்கள்’ என்று கூறிவிட்டது.
  • இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தலைகீழாகத்தான் ஆராய்வார்கள்; அரசை ஆதரிப்பார்கள், எதிர்க்கட்சிகளைக் கண்டிப்பார்கள். மணிக்கு மணி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வெறுப்பை பரப்பிக்கொண்டே இருப்பார்கள். சேகர் குப்தா இந்தக் கருத்தை ஏற்க மாட்டார், ஆனால் இந்த நெறியாளர்களை நேரடியாகத் தாக்காமல் இடக்கரடக்கலாகக் குறிப்பிடுகிறார் அவர். இது சரியாக இருக்கும்பட்சத்தில், புறக்கணிப்பு கூடாது என்று தார்மிக நோக்கில் கண்டிக்க ஏதுமில்லை.

கலவரங்களுக்கு எதிராகத்தான்

  • இரண்டாவது காரணத்தை மிக வலுவாக வலியுறுத்துகிறார் சேகர் குப்தா. பத்திரிகையாளரைப் பெயர் சொல்லி பகிரங்கமாகப் புறக்கணிப்பது பல்வேறு விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்.
  • முதலாவது, இது தவறான முன்னுதாரணமாகிவிடும். எதிர்த்தரப்பும் இதேபோல பல பத்திரிகையாளர்களைப் புறக்கணிப்பதாக அறிவிக்கக்கூடும். அது மேலும் தொடர் விளைவுகளுக்கு வழிவகுக்கும். பெயர் குறிப்பிடப்படும் பத்திரிகையாளர்களை எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் தாக்கக்கூடும். இதையடுத்து ஊடகங்களிலேயே ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என்று இரண்டு பிரிவு ஏற்பட வழிவகுக்கும். அதனால் இருதரப்பினர் இடையே பேச்சும் விவாதமும் நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விடும் என்கிறார்.
  • இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பது தவறு.  பாரதிய ஜனதா ஏற்கெனவே ‘என்டிடிவி’யைப் புறக்கணித்தது. சமீபகாலம் வரையில் தமிழ்நாட்டில் பாஜக அனைத்து செய்திச் சேனல்களையும் புறக்கணித்தது. எனவே, குப்தாவின் ஆலோசனை வேறு யாருக்கோ கூறப்பட்டிருக்க வேண்டும்.
  • பெயர் குறிப்பிட்டு ஒருவரை விமர்சனத்துக்குள்ளாக்குவது தார்மிக ஆயுதம், அதை எப்போதாவதுதான் பயன்படுத்த வேண்டும், அதுவும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்யப்பட வேண்டும். அதேசமயம் அப்படிச் செய்வதே தவறு என்று எல்லாத் தருணங்களிலும் கூறிவிடவும் முடியாது. மத வெறுப்புணர்வையும் வெறுப்பரசியலையும் பரப்புவதைச் சில சேனல்களும் நெறியாளர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.
  • இதனால் வகுப்புக் கலவரங்கள் மூள்கின்றன, கும்பல்கள் மாற்று தரப்பைத் தாக்குகின்றன, பரஸ்பர வெறுப்பும் பகைமையும் அதிகமாகிறது. இப்படித் தவறிழைப்பவர்களைப் பொதுவெளியில் பெயர் சொல்லித்தான் ஆக வேண்டும். அடுத்த நடவடிக்கையாக இப்படிப்பட்டவர்களுக்கு ஊதியம் தருகிறவர்களையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
  • மத அடிப்படையில் மக்கள் அணிதிரள்வது குறித்துக் கவலைப்படுவது நியாயமானதே. ஆனால், இந்திய ஊடகம் என்பது எப்போதோ இந்துத்துவ ஆதரவு நிலையை எடுத்துவிட்டது என்பதை விமர்சகர்கள் மறந்துவிடுகிறார்கள். ‘ரிபப்ளிக் டி.வி’யின் அர்னாப் கோஸ்வாமியுடன் பேச வேண்டும் என்றால் அது கேலியாகவே கருதப்படும், அதேசமயம் அந்த லட்சியத்தைக் கைவிட்டுவிடவும் கூடாது.
  • இருவேறு துருவங்களாக இருக்கும் நிலையில்தான் அப்படிப் பேசவும் முடியும் இப்போதைப் போல எல்லோரும் ஒரு தரப்பையே ஆதரிப்பதாக மாறிவிட்டால் பேச முடியாது.

புறக்கணிப்பு ஏன்

  • வியூகரீதியாக கரண் தாப்பர் முன்வைக்கும் கேள்வி இறுதியாக பரிசீலிக்கப்பட வேண்டியது. இந்தப் பட்டியலை இப்படி பகிரங்கமாக வெளியிட்டது மிகப் பெரிய தவறு என்கிறார் தாப்பர். மிக ரகசியமாக இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறார். அப்படிச் செய்வதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன.
  • முதலாவது, இந்த பறக்கணிப்பு என்பது சத்தியாகிரகமாகும், இங்கே ரகசியத்துக்கோ இரட்டை நிலைப்பாட்டுக்கோ இடமில்லை. தார்மிக நெறிப்படி எதைச் செய்வதாக இருந்தாலும் அதை வெளிப்படையாகத்தான் செய்ய வேண்டும், அது ஏன் என்பதையும் விளக்க வேண்டும்.
  • இரண்டாவது, இந்த நெறியாளர்கள் அனைவரும் ஒரு சார்பு மனப்போக்கு உள்ளவர்கள், அவர்களுடைய கருத்துகளை ஏற்க வேண்டியதில்லை என்று மக்களுக்கு உணர்த்த இந்தப் புறக்கணிப்பு உதவும். எதிர்ப்பே இல்லாமல் விவாதம் நடந்தால் அதுவே பார்ப்பவர்களுக்கு உண்மையை உணர்த்திவிடும் என்றாலும் இப்படி பகிரங்கமாகப் பலரைப் பற்றி அறிவிப்பது, சொல்ல வரும் தகவல் விரைவாக போய்ச் சேர உதவும்.
  • அதுவல்லாமல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவைப் போல அல்ல, தங்களுடைய ஆதரவாளர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தங்களுடைய நிலையை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தாக வேண்டும். இதனால் அந்தத் தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறையுமா என்று தெரியாது, ஆனால் மக்களுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் போய்ச் சேர்ந்துவிட்டன.
  • இந்தியத் தொலைக்காட்சிகளில் செய்திகளையும் கருத்துகளையும் தெரிவிப்போர் எத்தகைய மனச் சார்புடன் வேலை செய்கின்றனர் என்பதை மக்கள் இதன் மூலம் நன்கு தெரிந்துகொண்டுள்ளனர்.

நன்றி: அருஞ்சொல் (11 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories