- 17ஆவது மக்களவை 2024 பிப்ரவரி 10 அன்று முடிவடைந்தது. இந்த மக்களவையில் மொத்தம் 274 அமர்வுகள் 1,354 மணி நேரத்துக்கு நடைபெற்றதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தன்னுடைய இறுதி உரையில் குறிப்பிட்டார். மக்களவையில் 97% பயனுள்ள பணிகள் (work productivity) நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து மக்களவைகளில் இதுதான் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 அன்று நிறைவடையும். இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்குகிறது. ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெறும்.
- சிறப்பம்சங்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வென்று பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றது (2014இல் அக்கட்சி 282 தொகுதிகளில் வென்றிருந்தது). நரேந்திர மோடி, 2019 மே 30 அன்று பிரதமராகப் பதவியேற்றார். இதன் மூலம் பிரதமராக அவரது இரண்டாவது பதவிக் காலம் தொடங்கியது.
- ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி இருவருக்குப் பிறகு முழுப் பெரும்பான்மையுடன் மக்களவையில் இரண்டாவது முறை ஆட்சி அமைத்த மூன்றாவது தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் தலைவர் என்ற பெருமைகளும் மோடிக்குக் கிடைத்தன.
- 2019 ஜூன் 17 அன்று 17ஆவது மக்களவையின் முதல் அமர்வு நடைபெற்றது. பாஜக சார்பில் ராஜஸ்தானிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, 2019 ஜூன் 19 அன்று மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 17ஆவது மக்களவையில் 222 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டன. 202 மசோதாக்களை அரசு அறிமுகப்படுத்தியது. 11 மசோதாக்களை அரசு திரும்பப் பெற்றது. 2023 செப்டம்பரில் நாடாளுமன்றம் - வட்ட வடிவிலான கட்டிடத்திலிருந்து ‘சென்ட்ரல் விஸ்டா’வில் அமைந்துள்ள புதிய கட்டிடத்துக்கு மாறியது.
- அதன் உச்சியில் இந்திய தேசியச் சின்னத்தை நினைவுபடுத்தும் நான்கு சிங்க முகங்களைக் கொண்ட, முக்கோண வடிவக் கட்டிடம் இந்திய ஜனநாயகத்தின் இல்லமானது.
- இதில் ஐந்து நாள் சிறப்பு அமர்வின் இரண்டாவது நாளில், முதல் முறையாக மக்களவையும் மாநிலங்களவையும் ஒன்றாகக் கூடின. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ‘சம்விதான் சதன்’ (அரசியல் நிர்ணய அவை) என்று பெயரிடப்பட்டது.
கேள்வி வேள்விகள்
- 17ஆவது மக்களவையில் நட்சத்திரக் குறியிடப்பட்ட 4,663 கேள்விகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் 1,116 கேள்விகளுக்கு வாய்மொழி பதில் அளிக்கப்பட்டது. நட்சத்திரக் குறியிடப்படாத 55,889 கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கான எழுத்துபூர்வ விடைகள் அளிக்கப் பட்டன. நட்சத்திரக் குறியுடைய, பட்டியலிடப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் மக்களவையில் இரண்டு சந்தர்ப் பங்களில் வாய்மொழி பதில் அளிக்கப்பட்டது.
- நட்சத்திரக் குறியிடப்பட்ட கேள்வி என்பது கேள்வி கேட்பவர் அவையில் இருக்கும் அமைச்சரிடம் வாய்மொழி பதிலை எதிர்பார்க்கிறார் என்பதற்கானது. அத்தகைய கேள்வி நட்சத்திரக் குறியிடப்பட்டு தனித்துக் காட்டப்பட வேண்டும். அத்தகைய கேள்விக்கான பதில் கிடைத்த பிறகு, உறுப்பினர்கள் துணைக் கேள்விகளை எழுப்பலாம்.
- நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி என்பது வாய்மொழி பதிலைக் கோராத கேள்வி ஆகும். அவற்றுக்கான பதில் எழுத்து வடிவில் மேஜையில் வைக்கப்படும். 17ஆவது மக்களவையில் அமைச்சர்கள் 26,750 அறிக்கைகளைத் தாக்கல் செய்தனர். 729தனிநபர் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் 691 அறிக்கைகளை முன்வைத்தன. நிலைக் குழுக்களின் பரிந்துரைகளில் 69% அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காகிதம் இல்லாத அலுவலகமாக 17ஆவது மக்களவையை மாற்றும் இலக்குடன் நாடாளுமன்றப் பணிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகபட்சப் பயன்பாடு சாத்தியப்படுத்தப்படுகிறது. தற்போது 97%க்கு அதிகமான கேள்விக் குறிப்புகள் மின்னணு வழியில் தரப்படுகின்றன.
- 2023 டிசம்பர் 13 அன்று மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென்று உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகைக்குப்பியை வீசி, முழக்கங்களை எழுப்பினர். 2001இல் இதே தேதியில்தான் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
முக்கிய மசோதாக்கள்
- உடனடி முத்தலாக் அளிப்பதை மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் மசோதா 2019 ஜூலையில் நிறைவேறியது.
- 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புக் கூறு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரை லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பரில் குடியுரிமை (திருத்த) மசோதா - 2019 நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, 2014 வரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறிய இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். 2020 செப்டம்பரில் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இடைத்தரகர்களை நீக்கி விவசாயிகள் தமது விளைபொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்க வழிவகை செய்யும் இந்தச் சட்டங்கள் வேளாண் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்துக்கு வழிவகுப்பவை என்று மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாகப் போராடியதால், 2021 நவம்பரில் மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.
- 2023 டிசம்பரில் ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சன்ஹிதா’, ‘பாரதிய சாக்ஷ்யா’ ஆகிய சட்டங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- காலனி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியத் தடயவியல் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தப் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
- 2023 செப்டம்பரில் மக்களவையிலும் சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33% இடங்களை ஒதுக்குவதற்கான ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம்’ என்னும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது அரசமைப்பு (106ஆவது திருத்தச்) சட்டம் என்று அதிகாரபூர்வமாக அறியப்படுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 03 – 2024)