- தில்லிவாழ் குடிமகனான அப்துல் மஜீத் 1920இல் பிரிட்டிஷ் அரசின் கவனத்துக்கு உள்ளானார். வழக்கமாக அரசிடம் ஏதாவது கோரி மனுச் செய்யும் சாதாரணர் அல்ல அவர். தில்லியில் அவர் சிறு வியாபாரி, மிட்டாய் போன்ற தின்பண்டங்களைத் தயாரித்து விற்பவர். அந்த ஆண்டு நவம்பரில் தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு அளித்தார். அவர் போட்டியிட விரும்பிய பதவிக்கு இரு வழக்கறிஞர்களும், ஒரு வளையல் வியாபாரியும்கூட மனுச் செய்தனர். அப்துல் மஜீத் மற்றும் வளையல் வியாபாரியின் மனுக்களை, ‘நகைப்புக்குரிய வேட்பாளர்கள்’ என்று கருதி அரசு நிராகரித்துவிட்டது.
தேர்தல் சீர்திருத்தங்கள்
- இந்திய மக்களுடைய பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை 1920இல் தொடங்கியது எனலாம். அதற்கும் முன்னதாக பிரிட்டிஷ் அரசே, இந்தியர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து மக்களுடைய பிரச்சினைகளை அரசிடம் எப்படி முறையிட வேண்டும், எவையெல்லாம் முறையிடத்தக்க பிரச்சினைகள் என்று சொல்லிக் கொடுத்து பிறகு உறுப்பினர்களாக்கிவிடும். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்தியர்களுடைய கோரிக்கைகளைக் கண்டும் காணாமல் புறக்கணிப்பதோ, மறுப்பதோ இயலாது என்ற நிலை ஏற்பட்டது.
- எனவே, மக்களுடைய பிரதிநிதிகள் அவையில், இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளை 1909இல் தொடங்கினர். தேர்தலை, சில வரம்புகள் நிர்ணயித்து நடத்தினர். அப்போதுதான் சர்ச்சைக்கிடமான, முஸ்லிம்களுக்கு தனி வாக்குரிமை அல்லது தனித் தொகுதிகள் என்ற நடைமுறை ஆரம்பமானது.
- இந்திய அரசமைப்புச் சட்ட சீர்திருத்தக் குழு 1918இல் அரசுக்கு அளித்த அறிக்கையில், 1909இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் நடைமுறையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியது. அந்தச் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்தான் ‘மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்’ என்று பின்னாளில் அழைக்கப்படலாயிற்று.
- “மக்களுடைய விருப்பங்களை எதிரொலிக்கும் பொதுவான பிரதிநிதித்துவ அமைப்பு இப்போது இல்லை. இப்போதுள்ள பிரதிநிதித்துவமுறையானது வெவ்வேறு பிரிவினர் அல்லது வெவ்வேறு வகைத் தொழில்கள் அல்லது சமூக வகைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதுவுமே சில வரையறைகளுக்கு உள்பட்டதாகவும் இருக்கிறது. முகம்மதியர்களுக்கான பிரதிநிதித்துவம் அந்த வகுப்பில் உள்ள அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டுமென்பது நோக்கமென்றாலும், நடைமுறையில் அப்படி இல்லை” என்று மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு அறிக்கை தெரிவித்தது.
இந்திய அரசு சட்டம்
- இரண்டு வெவ்வேறு அவைகளைக் கொண்ட ‘தேசிய சட்டமன்றம்’ (நாடாளுமன்றம்) உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்தது. அந்த அவையில், ஒன்றுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றது. தேசிய சட்டமன்றத்தைப் போல மாகாணங்களிலும் சட்டமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றது.
- பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தப் பரிந்துரைகளை ஏற்று, ‘இந்திய அரசு சட்டம்- 1919’ என்பதை இயற்றியது. அதுவரையில் தேர்தல் தொடர்பாக முழுமையான சட்டத்துக்குத் தேவை ஏற்பட்டிருக்கவில்லை. பரிந்துரைகளை அரசு அமல்படுத்தத் தொடங்கிய பிறகு, பிரதிநிதிகளை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று. நாடு முழுவதற்கும் தேர்தலை நடத்த, அரசுக்கு தேர்தல் நடைமுறைச் சட்டம் தேவைப்பட்டது.
- இதில் 1919இல் இயற்றப்பட்ட சட்டமே தேர்தல் நடைமுறைக்கான விதிகளையும் வழிமுறைகளையும் உருவாக்கியது. வாக்களிப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், போட்டியிடுவதற்கான தகுதிகள் என்ன, வாக்காளர் பட்டியலை எப்படித் தயாரிக்க வேண்டும் என்றெல்லாம் இச்சட்டத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டது.
- வாக்களிப்பவர்களும் வேட்பாளர்களும் தகுதிபெற்ற ‘பிரிட்டிஷ் குடிமக்களாக’ – அதாவது – பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதி. வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21. தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது 25. பெண்கள் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆனால், அந்தந்த மாகாண சட்டமன்றங்கள், பெண்களும் வாக்களிக்கலாம், போட்டியிடலாம் என்று தீர்மானித்தால் அனுமதி உண்டு. (மாகாண சட்டமன்றங்களும் அப்படி அனுமதித்தன).
- முகம்மதியர்கள் – முகம்மதியர்கள் அல்லாதவர்களுக்கு ஊரகங்களிலும் நகர்ப்புறங்களிலும் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; அப்படியே சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், ஜமீன்தார்கள், தொழில் வர்த்தக சபையினர் ஆகியோருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களும் பிரிட்டிஷ் இந்தியக் குடிமக்களாக வசிக்க வேண்டும், குறைந்தபட்சம் சொத்து வைத்திருக்க வேண்டும், வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும் என்று தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.
- இப்படி வாக்களிப்பதற்கும் போட்டியிடுவதற்கும் பல்வேறு தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டதால் தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிக்கையும் போட்டியிடுவோர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தன; இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குப் பணிச்சுமை குறைவாகவும் எளிதாகவும் மாறியது. தில்லி தொகுதியிலிருந்து தேசிய சட்டமன்றத்துக்கு மஜீத் போட்டியிட விரும்பியபோது மொத்தமே 3,300 வாக்காளர்கள்தான் இருந்தனர்.
தேர்தலும் ஒத்துழையாமை இயக்கமும்
- மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு முதல் தேர்தல் 1920இன் இறுதியில் நடந்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மகாத்மா காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின் ஓர் அம்சம், பிரிட்டிஷார் நடத்தும் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்பது. காங்கிரஸ் இயக்கம் சார்பில் போட்டியிடத் தகுதி வாய்ந்தவர்கள் பலர் இருந்தும், போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். சில தொகுதிகளில் சுயேச்சையாக சிலர் போட்டியிட்டது பிரிட்டிஷ் அரசின் தேர்தல் நடைமுறையையும் நோக்கத்தையும் கேலிசெய்யும் விதத்தில் தருமசங்கடமாக மாறியது.
- லாகூரில் தேர்தல் நடைமுறையில் வன்முறை ஏற்பட்டது. “கடந்த ஓரிரு மாதங்களாக ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துப் பேசிய தலைவர்களுடைய பேச்சுகள்தான் வன்செயல்களுக்குத் தூண்டுதல்களாகிவிட்டன; லாகூரின் சாமான்ய மக்கள் இந்தத் தொடர் பேச்சுகளால் இப்போது பிரிட்டிஷ் அரசை வெறுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நாட்டு மக்களுக்கு அரிய கொடையாகக் கிடைத்த இந்த அரசு, இப்போது மக்களால் இகழப்படுகிறது” என்று ஓர் பிரிட்டிஷ் அதிகாரி மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பினார்.
மாண்டேகுவின் கருத்துகள்
- இதில் 1919 சட்டம் அதிக இந்தியர்களைப் பிரதிநிதிகளாக்கியது என்றாலும் வாக்களிக்கும் உரிமை மிகச் சிலருக்குத்தான் கிடைத்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்ற நடைமுறை வளமாக இருப்பதற்கான பயிற்சி அப்போதே தொடங்கிவிட்டது. தேர்தல் காலத்தில் லஞ்சம் கொடுப்பதோ, ஆசை காட்டுவதோ, மிரட்டுவதோ கூடாது என்றும் அவை அனைத்தும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் 1920இல் அரசு சட்டம் இயற்றியது. குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனையும் ரொக்க அபராதமும் விதிக்கப்பட வழிசெய்யப்பட்டது. அதையே இந்திய தண்டனையியல் சட்டத் தொகுப்பிலும் சேர்த்தனர், அவை இன்றுவரை நீடிக்கிறது.
- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேர்தல்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக நாடாளுமன்றமும் தொடர்ந்து சட்டங்களை இயற்றிவருகிறது. அந்தச் சட்டங்களில் முக்கியமானது 18 வயது நிரம்பிய ஆண் – பெண் இருவரும் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பது. அடுத்து நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் நூறு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
- மேலும், 1920 பொதுத் தேர்தலுக்கு மூலக் காரணமாக இருந்த எட்வின் மாண்டேகு: “வாக்காளருக்கு தேர்தல் தொடர்பாக நேர்மையாக தகவல்களைச் சொல்வதுதான் தேர்தலில் மிகவும் முக்கியமானது. மதம், இனம் அடிப்படையில் வாக்களிக்குமாறு யாரும் வேண்டுகோள் விடுக்கமாட்டார்கள், தேர்தல் உற்சாகத்தில் இந்தியர்கள் பரஸ்பரம் காக்க வேண்டிய ஒற்றுமை – ஒருமைப்பாடு ஆகியவையும் சிதைந்துவிடாது என்று நம்புவோம்.” நூறு ஆண்டுகளுக்கும் முன்னால் அவர் தெரிவித்த கருத்துகள் இப்போதும் முக்கியமானவை.
நன்றி: அருஞ்சொல் (11 – 04 – 2024)