- நாட்டின் அன்றைய 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 403 தொகுதிகளில் இருந்து 494 மக்களவைப் பிரநிதிநிதிகளையும் (முந்தைய மக்களவையைவிட கூடுதலாக 5 போ்) பல்வேறு மாநில சட்டப்பேரவைகளைத் தோ்ந்தெடுக்கவும் பொதுத் தோ்தல் நடைபெற்றது.
- வாக்காளா் எண்ணிக்கை 2 கோடி அதிகரித்து, இத்தோ்தலில் 19.3 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 2,20,478 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. 494 இடங்களுக்கு 15 கட்சிகளின் வேட்பாளா்கள், 481 சுயேச்சைகள் உள்பட 1,519 போ் போட்டியிட்டனா். 1957-ஆம் ஆண்டு, பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தப்பட்டது.
- இத்தோ்தலில் 45.44 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலைவிட 0.57 சதவீதம் அதிகம்). இத்தோ்தல் மூலம் 312 தொகுதிகளில் இருந்து ஒரு பிரதிநிதியும் 91 தொகுதிகளில் இருந்து இரட்டைப் பிரதிநிதிகளும் (ஒரு பொது பிரதிநிதி, ஒரு பட்டியிலன சமூகப் பிரதிநிதி) மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
- தோ்தலில் போட்டியிட்ட 45 பெண் வேட்பாளா்களில் 22 போ் வெற்றி பெற்றனா். பெரும்பான்மையாக 371 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்தது. அதற்கு அடுத்தப்படியாக, சுயேச்சைகள் 42 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களிலும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 19 இடங்களிலும் வென்றன.
- முதல் தோ்தலின் செலவான ரூ.10.45 கோடியை விட ரூ.4.5 கோடி குறைவாக வெறும் ரூ.5.9 கோடியில் இத்தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதன்படி, பிரதி வாக்காளருக்கான தோ்தல் செலவு 30 பைசா ஆகும்.
- முதல் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 35 லட்சம் வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு மீண்டும் இம்முறை பயன்படுத்தப்பட்டன. புதிதாக 5 லட்சம் வாக்குப்பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதால் தோ்தல் செலவு குறைந்தது.
- நாட்டின் தோ்தல் வரலாற்றில் முதல் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றிய சம்பவம் , பிகாரின் பெகுசராய் மாவட்டத்தில் மதிஹானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராச்சியாஹியில் நடைபெற்றது.
நன்றி: தினமணி (01 – 04 – 2024)