- இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் இந்த நோட்டுகளை 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, 2016இல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நினைவூட்டுகிறது. எனினும், தற்போதைய அறிவிப்பால் சாமானிய மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2,000 ரூபாய் நோட்டு
- 2016 நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு [Demonetisation] நடவடிக்கையைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மற்ற ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்ததால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது 2018-19இலிருந்து நிறுத்தப்பட்டது.
- தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவற்றை 2017 மார்ச் மாதத்துக்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த ரூபாய் நோட்டுத் தாள்களின் கணிக்கப்பட்ட ஆயுள்காலம் 4 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே. அந்த வகையில் 2,000 ரூபாய் நோட்டுத் தாள்களின் ஆயுள்காலம் முடிவடையப் போகிறது; வெளியிடப்பட்ட நோக்கமும் நிறைவேறிவிட்டது.
- இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் ‘தூய்மையான ரூபாய் நோட்டுக் கொள்கை’யின்படி (Clean note policy), 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது.
தூய்மையான ரூபாய் நோட்டுக் கொள்கை
- பொதுமக்களுக்கு ரூபாய் நோட்டுகள் நல்ல தரத்துடனும், சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடனும் கிடைப்பதை உறுதிசெய்வதே இந்தக் கொள்கையின் நோக்கம். இதன்படி அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
- மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்; பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும், 2023 செப்டம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னதாக இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்காக மே 23 முதல் செப்டம்பர் 30 வரை அனைத்து வங்கிகளிலும் பிரத்யேக வசதி செய்யப்பட்டிருக்கும். இந்த வசதி ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் கிடைக்கும்.
வரம்பு ஏதும் உள்ளதா?
- 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம். இதற்காகக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எந்த வங்கியின் கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். மாறாக, வங்கிக் கணக்குகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதாக இருந்தால், அதற்கு எவ்வித உச்சவரம்பும் கிடையாது; எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்.
2016 இன் இன்னல்கள் மீண்டும் நிகழுமா?
- 2016இல் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக சாமானியர்கள் பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனினும், தற்போது அப்படியான பாதிப்புகள் ஏற்படச் சாத்தியமில்லை என்றே தெரிகிறது. காரணம், 2016இன் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும், தற்போதைய அறிவிப்புக்கும் இடையில் மிகுந்த வித்தியாசங்கள் உள்ளன.
- 2016இல் வெகுவாகப் புழக்கத்திலிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் (புழக்கத்திலிருந்த நோட்டுகளின் மதிப்பில் 86%) திடீரென்று திரும்பப் பெறப்பட்டன. ஆனால், தற்போது திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பொதுமக்களிடையே மிகவும் குறைவாகவே (புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்பில் 10.8%) உள்ளது. மேலும், 2016இல் நடந்ததுபோல் அல்லாமல், இந்த முறை மக்களுக்கும் வங்கிகளுக்கும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளநோட்டு அழிப்பு, ஊழல் தடுப்பு, தீவிரவாதச் செயல்களைத் தடுத்தல் போன்றவை 2016இன் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குக் காரணங்களாகக் கூறப்பட்டன. அந்தக் காரணங்கள் 2016க்கு முந்தைய நிலையிலேயே தற்போதும் தொடர்கின்றன. இருப்பினும், தற்போது 2,000 ரூபாயைத் திரும்பப் பெறுவதற்கு அவை காரணங்களாகக் கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
நன்றி: தி இந்து (28 – 05 – 2023)