2019: சர்வதேச உள்ளூர் மொழிகள் ஆண்டு - காணாமல் போனது என்ன?
April 22 , 2019 2088 days 1337 0
இந்தியாவில் 780 விதமான மொழிகள் பேசப்படுகின்றன. 86 மொழிகளுக்கு எழுத்து வடிவம் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பனியைச் சுட்டுவதற்கு மட்டும் 200 சொற்கள் உள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த நாடோடிச் சமூகங்கள் தாங்கள் பயணம் செல்லும் பாலைநிலப் பகுதியை விவரிக்கப் பல்வேறு சொற்களை வைத்திருக்கின்றனர்.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 250 மொழிகளை இழந்துள்ளதாக இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பு அமைப்பு (People’s Linguistic Survey of India) கூறியுள்ளது. இந்தக் கணக்கெடுப்புக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற இலக்கிய விமர்சகரும் கலாசாரச் செயற்பாட்டாளருமான கணேஷ் நாராயண் தேவி.
எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மொழி ஆர்வலர்கள் என 3,500 பேர் கொண்ட ஒரு குழுவை தேவி ஒருங்கிணைத்தார்.
அப்போதிலிருந்து இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக 300 பயணங்களை அவர் மட்டுமே மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இத்தகைய கணக்கெடுப்பை எப்படிச் செய்யவேண்டுமென்பதற்கான பட்டறைகளையும் நடத்தியுள்ளார்.
தேவி செய்த இத்தகைய பிரம்மாண்டப் பணியின் முக்கியத்துவம் என்ன?
இந்தியாவின் மொழிகள் மற்றும் வழக்காறுகளைக் கணக்கெடுக்கும் பணி வெள்ளையர் காலத்தில் முதல்முறையாக 1894 முதல் 1927 வரை நடத்தப்பட்டது. ஜார்ஜ் ஆப்ரஹாம் க்ரியர்சன், இந்திய மொழியியல் கணக்கெடுப்புக்குக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். முப்பது ஆண்டுகள் நடந்த அந்தக் கணக்கெடுப்பில் 364 மொழிகள், வழக்காறுகள் இருப்பது தெரியவந்தது.
ஆனாலும், அவர்களது செயல்முறை மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. நாட்டின் பெரும்பகுதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை என்பது பிரதான விமர்சனமாக இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பு முயற்சி மேற்கொள்ளப்படவே யில்லை.
இந்தியாவில் அருகிவரும் மொழிகள் குறித்து கணக்கெடுப்பதற்காக 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவேயில்லை. இந்நிலையில் மிகவும் சோர்வடைந்த ஜி. என். தேவி, தனது பாஷா ஆய்வு மற்றும் வெளியீட்டு மையம் சார்பில் அப்பணியைச் செய்ய முடிவெடுத்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மூன்று ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கையெழுத்துப் படிகளைக் கொண்டுவரச் சொன்னார். புத்தக வெளியீட்டு நிறுவனமான ஓரியண்ட் பிளாக்ஸ்வான் அவற்றைத் தொகுதிகளாகக் கொண்டுவர ஒப்புக்கொண்டது. இந்தக் கணக்கெடுப்பு சார்ந்து 45 புத்தகங்கள் இதுவரை வெளியாகி யுள்ளன. 2020-ம் ஆண்டுக்குள் மீதம் 37 புத்தகங்கள் வெளியாகும்.
இந்தியாவின் பன்மைத்துவம் குறித்த புரிதல்
இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பில் தெரியவந்த 780 மொழிகள் குறித்த விவரங்கள் அனைத்தும் 92 நூல்தொகைகளில் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் சுருக்கமான வரலாறு, பேசப்படும் நிலவியல் பரப்பு, மொழிபெயர்ப்புடன் கூடிய அந்தந்த மொழியின் வாய்மொழிப் பாடல்கள் மற்றும் வாய்மொழிக் கதைகள், முக்கியமான கலைச் சொற்கள் ஆகியவை விவரமாகக் கொடுக்கப் பட்டிருக்கும். இந்திய சமூகத்தின் வண்ணங்களையும் வித்தியாசங்களையும் அனுபவிப்பதற்கு இந்த நூல்தொகை அரிய வாய்ப்பாகத் திகழும்.
இந்தியாவில் 780 மொழிகள் இருக்கிறதென்றால், இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கு 780 வழிகள் உள்ளன என்று அர்த்தம் என்கிறார் தேவி. அறிவின் விதவிதமான சேகரங்களாக இருக்கும் 780 மொழிகளுக்கும் சம அந்தஸ்து தேவை என்பதே அவரது விருப்பமாக உள்ளது.
தற்போது 22 மொழிகளையே இந்திய அரசு அங்கீகரித்திருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான பிற மொழிகளைப் பேசும் மக்களின் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்றுக்கொடுப்பதற்குப் பள்ளிகளோ பொருளாதார வாய்ப்புகளோ இல்லை. அந்தச் சூழ்நிலையில் ஆவணப்படுத்துதல் என்பது அனைத்து மொழிகளும் அங்கீகரிக்கப்படுவதற்கான முதல் அடியாக இருக்கும் என்கிறார் தேவி.
மொழியியல் கணக்கெடுப்பு
இந்தியாவின் அறிவுத் தோற்றவியல்களின் (epistemology) வளமையையும் பிரம்மாண்டத்தையும் காட்டுவதாக இந்த மொழியியல் கணக்கெடுப்பு அமைந்துள்ளது. அரசு அங்கீகாரம் உள்ள சில மொழிகளுக்கே உயர்கல்வி நிலையங்களில் இடம் உள்ளது.
சமூகக் கட்டமைப்பு, மொழி, அறிவு எல்லாமே ஒன்றுக்கொன்று கொண்டிருக்கும் தொடர்பைக் காட்டுவதாக இந்நிலைமை உள்ளது என்கிறார் ஜி. என். தேவி.
“இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடிகளின் வாழ்க்கை முறை, வரலாறு குறித்து உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பே இல்லை. அதனால், வளாகத்துக்கு வெளியே வாழும் குறிப்பிட்ட சமூகங்களின் வெளிப்பாடு, மொழி ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது” என்கிறார் தேவி.
அருகிவரும் மொழிகள், மொழிச் சிறுபான்மையினரை அங்கீகரிப்பதை அவர்களுக்குக் காட்டும் கருணையாக நினைக்கும் போக்கையும் ஜி. என். தேவி விமர்சிக்கிறார். “புதுமையான போதனா முறைகளை நமது வாய்மொழி, எழுத்து மரபுகளிலிருந்தும் பெற்றுக்கொள்வதன் மூலம் வளர்ந்துவரும் அறிவுத்துறைகளுக்கு வளம் சேர்க்க முடியும். அத்துடன் அந்த மொழிகளுக்கும் அர்த்தப்பூர்வமான எதிர்காலத்தைத் தரும்.” என்கிறார்.
ஒரு மொழி மறையும்போது, நூற்றாண்டுகளாக அது தன்னுடன் சேகரித்து வைத்திருக்கும் அறிவும் காணாமல் போகிறது. அழியும் ஒரு மொழியுடன் அதற்கேயுரியதாக இருந்த உலக நோக்கும் மறைந்துபோகிறது. அதுவும் உயிரிழப்புக்கு இணையான வன்முறைதான் என்கிறார் தேவி.