- 2023 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு கல்வி சார்ந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
வாசிப்பு இயக்கம்
- கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் நூலகம் சார்ந்த செயல்பாடுகள் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தொடர்ந்து மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ரூ.10 கோடி மதிப்பில் மாபெரும் வாசிப்பு இயக்கத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. புலம்பெயர்ந்தோர் கற்கவேலைவாய்ப்புக் காரணமாகத் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயரும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தொழிலாளர்கள் குடும்பத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கு தடையின்றி தமிழில் பேசவும் எழுதவும் ‘தமிழ் மொழி கற்போம்’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்
- அரசு பள்ளிளுக்குத் தொலைத் தூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 2022 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2023 ஆகஸ்ட் 25இல் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
நீட் தேர்வில் முதலிடம்
- 2023இல் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். பிரபஞ்சன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுடன் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்கிற மாணவரும் முதலிடம் பிடித்தார்.
மாதிரிப் பள்ளிகள்
- ஆர்வமும் திறமையும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கத் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் ‘மாதிரிப் பள்ளிகள்’ ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்திட்டம் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம் உருவாக்கப்படும் என்றும் இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் கற்க
- வேலைவாய்ப்புக் காரணமாகத் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயரும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தொழிலாளர்கள் குடும்பத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கு தடையின்றி தமிழில் பேசவும் எழுதவும் ‘தமிழ் மொழி கற்போம்’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மின்னுருப் புத்தகங்கள்
- ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மின்னுருப் புத்தகங்கள் (Accessible Digital Textbooks) உருவாக்கப்படும் எனச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும்போது, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பிற மாணவர்களைப்போல பாடப் புத்தகங்களை எளிதாகப் பயன் படுத்தும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.
மாணவர் சேர்க்கையில் உச்சம்
- இந்திய மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பது வழக்கம். இதில், இந்தியாவிலிருந்து அமெரிக்கா வுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்து, 2022-23ஆம் கல்வியாண்டில் 2,68,923ஆக உயர்ந்தது. அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாண வர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்வு தேர்ச்சி
- 2023இல் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பில் தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.39%. இதில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் 94.66%. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16%. 12ஆம் வகுப்புத் தேர்வில் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,481 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.03%. இதில் மாணவியரின் தேர்ச்சி விகிதம் 96.38%. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.45%.
யுபிஎஸ்சியில் சாதித்த பெண்கள்
- மத்திய பணியாளர் தேர்வாணையத் (யுபிஎஸ்சி) தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார், ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷிதா கிஷோர். யுபிஎஸ்சி தேர்வில் இம்முறை முதல் நான்கு இடங்களையும் பெண்களே பிடித்தனர். பிஹாரைச் சேர்ந்த கரிமா, தெலங்கானாவைச் சேர்ந்த உமா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிருதி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து அசத்தினர். அதுமட்டுமல்ல, முதல் 25 இடங்களில் 14 பெண்கள் இடம்பிடித்தனர்.
இனி ஆங்கிலம் எளிது
- செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - ஏஐ) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திச் சென்னை ஐஐடி மாணவர்கள் புதிய ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பை உருவாக்கியுள்ளனர். ஐஐடி மாணவர் மகரிஷி, அவருடைய நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய ‘சூப்பர் நோவா’ என்கிற நிறுவனம், குழந்தைகளுக்கான கல்வி தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சேவையை வழங்குகிறது. ஆங்கிலம் கற்றுத் தருவதற்கென இவர்கள் பிரத்தியேகமாக ஒரு செயலியையும் உருவாக்கியுள்ளனர். சூப்பர் நோவா ஏஐ (Supernova AI) செயலியை கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2023)