TNPSC Thervupettagam

2023 - மின் வாகனங்களின் ஆண்டு பெரும் பிரச்சினைகள்

December 27 , 2023 392 days 308 0
  • மின் வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே சந்தைக்கும் அங்கிருந்து சாலைக்கும் வந்துவிட்டாலும், 2023-ல் தான் அதன் தாக்கம் சாலைகளில் அதிகரிக்கத் தொடங்கியது.
  • இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன அறிக்கை-2023 ஆனது, மின் வாகனங்கள் இந்தியாவின் வாகன சந்தையில் 40 சதவீதத்திற்கு அதிகமாகவும், 2030க்குள் சுமார் 830 கோடி வருவாயை ஈட்டவும் முடியும் என்று குறிப்பிடுகிறது.
  • நொய்டாவில் வசிக்கும் தொழிலதிபர் ஆஷிஷ் மெஹ்ரோத்ரா (37), இ-கார் வாங்க திட்டமிட்டுள்ளார்.  அதற்கான காரணங்களை அவர் பட்டியலிடுகிறார். அதில் - மென்மையான இயக்கம், குறைந்த எரிபொருள் செலவு, வரிச் சலுகை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என இடம்பெற்றுள்து. 
  • அதேவேளையில் வாகனத்தை சார்ஜ் செய்வதில் அவருக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ஏசி சாக்கெட்டில் இருந்துதான்  வாகனத்துக்கு சார்ஜ் போட முடியும். அவ்வாறு செய்தால், அது மிகவும் தாமதமாகலாம். ஏன் கிட்டத்தட்ட 24 மணி நேரம்கூட தேவைப்படலாம்.
  • மின் வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்களே, சுவரில் பொறுத்தும் சார்ஜர்களை இலவசமாக நிறுவித்தருகிறார்கள்.  இது வேகமாக இருக்கும். ஆனாலும் கூட வாகனத்தின் பேட்டரி 80 சதவிகிதம் சார்ஜ் ஆக குறைந்தது ஆறு மணிநேரம் ஆகும் என்கிறார்.
  • மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையின்படி, ஒவ்வொரு வளர்ந்த நகரங்களிலும் ஒவ்வொரு மூன்று கி.மீட்டருக்கு இடையே, நெடுஞ்சாலைகள் என்றால், ஒவ்வொரு 25 கி.மீ.க்கு இடையேயும் சாலைகளின் இருபுறமும் மின்விசை சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/12/23/E_Car_text.jpg?w=640&dpr=1.3

  • வாகனங்களின் வகையைப் பொறுத்தவரை, நடுத்தரமான நெக்ஸான் வகை எலக்ட்ரிக் கார் விலை ரூ.16 லட்சம். ஆனால், அதே பிராண்டின் உயர்தர பாரம்பரிய பெட்ரோல், டீசல் கார்களின் (ஐசிஇ வகை) விலையை விட இது அதிகம். நான் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கினாலும், மிக நீண்ட தூர பயணங்களின் போது இது சரியாக இருக்குமா? ஏனென்றால் எலக்ட்ரிக் கார் - நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலில், ஒரு முறை முழுமையாக காரை சார்ஜ் செய்தால், 400க்கும் மேற்பட்ட கிமீ மைலேஜ் கொடுக்கும் -  ஆனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிமீ தான் ஓடும் - இது, மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான பயணத்திட்டத்துக்கு உகந்ததல்ல என்கிறார் மெஹ்ரோத்ரா.
  • இந்த சந்தேகத்துடன் ஒரு தகவலையும் பகிர்கிறார். அதாவது, அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் சோதனை முறையில் நடக்கும் ஒரு முயற்சியாக, சாலைகளின் மேற்பரப்பின் கீழ் வாகனங்களை சார்ஜ் செய்யும் சுருள்களின் வலையமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் மின் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான ஒரு புதிய வழியை அமெரிக்க நகரம் முயற்சித்து வருகிறது. அதாவது அந்த சாலைகள் வழியாக ஒரு  கார் இயக்கப்படும்போது அது தானாகவே சார்ஜ் ஆகும் என்பதுதான் அது.
  • இதற்கிடையே, இந்திய மின் வாகன அறிக்கை-2023 குறிப்பிடுவது என்னவென்றால், மின் வாகனங்கள் நாட்டின் வாகன சந்தையில் 40 சதவீதத்திற்கு அதிகமாகவும், 2030க்குள் ரூ.830 கோடிக்கு அதிகமான வருவாயை ஈட்டக்கூடியதாகவும் இருக்கும். அதாவது, கடந்த அக்டோபர் 2022 மற்றும் செப்டம்பர் 2023-க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்த வாகன விற்பனையில் சுமார் 5 சதவீதத்தை மின் வாகனங்கள் பிடித்துள்ளன. 
  • 2030ஆம் ஆண்டில், வாகன சந்தையில் விற்பனையாகும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களில் மின் வாகனங்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • சரி இந்தியாவில் இப்படி.. மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்றால், இது அனைத்தும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆனால், கதை மட்டும் வேறாக உள்ளது. மின் வாகனம் எனும் காற்றுக் குமிழி வெடித்துக்கொண்டிருக்கிறது..
  • 2019 மற்றும் 2021-க்கு இடையில், நிகோலா, ஃபிஸ்கர், ரிவியான் ஆட்டோமோட்டிவ், லூசிட், என்ஐஓ, எக்ஸ்பெங்க், பொலெஸ்டர் ஆட்டோமோட்டிவ், கனூ மற்றும் லார்ட்ஸ்டவுன் மோட்டார்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் சுமார் $ 470 பில்லியன். ஆனால், இப்போது, ​​அது வெறும் 59 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கிட்டத்தட்ட 87 சதவிகித சரிவு. அதிக லாபம் ஈட்டும் மின் வாகனத் தயாரிப்பாளர்களான டெஸ்லா, பிஒய்டி மற்றும் லீ ஆட்டோ ஆகியவை அதே காலகட்டத்தில் $1.4 டிரில்லியனில் இருந்து $900 பில்லியனாக மாறியிருக்கிறது.
  • மின் வாகனங்கள் மீது, மத்திய அரசு விதிக்கும் குறைந்த வரிவிகிதம் நடைமுறைக்கு வந்த பிறகு மஸ்கின் வணிகம் இந்தியாவில் பெரிய அளவில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள் அறிமுகத்துக்கு இடையே ஒரு நல்ல இடைவெளி இருப்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, டெஸ்லாவும் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மாடல் எதையும் வெளியிடவில்லை.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/12/23/car_graph.jpg?w=640&dpr=1.3

மின் வாகனங்களில் என்ன பிரச்னை?

  • இந்திய நுகர்வோர் சுற்றுச்சூழலைக் காட்டிலும் செலவிடும் தொகை மீதுதான் அதிக அக்கறை கொண்டவராக இருப்பர்.
  • மின் வாகன பேட்டரியின் ஆயுள் 8 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனத்தை விட விலை அதிகம்.
  • வாகன பழுதுநீக்குதலுக்கான செலவும் அதிகம். எடுத்துக்காட்டாக, டாடா நெக்ஸான் மின் வாகனத்தின் பேட்டரியை மாற்றுவதற்கு ரூ.5 - ரூ.5.5 லட்சம் வரை ஆகலாம்.
  • மின் வாகனங்கள் எல்லா நேரங்களிலும் சரியாகப் போவதில்லை. முதலில் வெளியான மாடல்களுடன் மற்றதை ஒப்பிடுகையில் மிகவும் மோசமானதாகவே இருந்தது. இன்னும் வருங்காலத்தில் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்காத குறைபாடுகளும் ஏற்படலாம். 
  • வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய, மின் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து வாகனங்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். இந்த செலவும் கார் உரிமையாளர்கள் தலையில் விழலாம்.
  • ஒரு மின் காரின் திறன் என்று தயாரிப்பு நிறுவனம் அளித்த தகவலுக்கும் உண்மையான மைலேஜூக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக அதிக எடையுள்ள உடைமைகளை ஏற்றினால் காரின் மைலேஜ்,  கவலைதருவதாகவே உள்ளது.
  • மெர்செடீஸ் -பென்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மின் வாகனங்களை வாங்கும்போது அதிக தொலைவுப் பயணங்களுக்கு உகந்ததாக இல்லை என்பது மிகப்பெரிய தடை" என்கிறார்.
  • ஒருபக்கம் பார்த்தால், மின் வாகனங்களும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவைதான். நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைத்தானே இவை பயன்படுத்துகின்றன.
  • இந்த வகையில் பார்த்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதவை என்ற நோக்கத்தையும் இவை தோற்கடித்துவிடுகின்றன. எனவே, மின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானால், மின் தேவை அதிகமாகும். மீண்டும் அது சுற்றுச்சூழலுக்கு கேடாக மாறும்.
  • இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வகையில், நாட்டில் உள்ள பெரும்பாலான சார்ஜிங் நிலையங்கள் டீசல் ஜெனரேட்டரைக் கொண்டு இயக்கப்படுகின்றன.
  • மின் வாகனங்ளில் உடனடி முறுக்குவிசை வேகமாக இருந்தாலும் — பெட்ரோல், டீசல் வாகனங்களைவிட விரைவாக மணிக்கு 1-100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் - அதிக வேகத்தில் தொடர்ந்து இயக்குவது கடினம்.
  • நாட்டில் மின் வாகனங்கள் ஆரம்ப நிலையில் இருப்பதால், பழுதுநீக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். 
  • மின் வாகனங்களுக்கு சேவை மற்றும் உதிரி பாகங்கள் விலையும் அதிகம். மெக்கானிக்கல் மற்றும் பிரேக்டவுன் தொழில்நுட்பங்கள் இந்த வாகனங்களில் பெரும்பாலும் இல்லை.
  • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மாறுபட்ட வெப்பநிலை நிலவுவதால், அது வாகனத்தின் பேட்டரி செயல்திறனை பாதிக்கிறது.
  • இந்தியர்கள் மின் வாகனங்களை விரும்புகின்றனர்.  இத்தொழில்துறையானது 2030 ஆம் ஆண்டில் 266 பில்லியன் டாலர் சந்தையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தற்போது சுமார் 30 லட்சம் பதிவு செய்யப்பட்ட மின் வாகனங்கள் உள்ளன.
  • 2023ஆம் ஆண்டு ஜனவரி -  ஜூலைக்கு இடையில், இதன் விற்பனை 131 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக, பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெறும் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 7,500 இ- கார்கள் விற்பனையாகின்றன.
  • மின் வாகனங்களில் ஊராயும் உதிரிபாகங்கள் குறைவு. அதன் பேட்டரிகள் 2,000-3,000 முறைகளுக்கு மேல் சார்ஜ் செய்யப்பட்டு, சாலையில் 3 - 9 லட்சம் கி.மீ. தொலைவு வரை இயங்கும் என்பதால் அதன் ஆயுள் நீண்ட காலம் நீடிக்கும். இந்த வாகனங்களின் நீண்ட ஆயுளும் சுற்றுச்சூழலுக்கு சாதகமானது. மின் வாகனங்களின் பயன்பாடு, மறுபக்கம் கார்பன்டை ஆக்ஸைடு குறையவும் வழிவகுக்கும் என்று டாடா மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆனால் மின் பேட்டரியின் ஆயுள் குறைவாகவே இருக்கிறது.
  • ஒரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் தலைமையில் நடந்த ஆய்வு, லித்தியத்தை "வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு" என்று முத்திரை குத்துகிறது.  தாவரங்கள், உயிரினங்களில் லித்தியம் மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  இதுவரை  பக்க விளைவுகள் பற்றி தெரியவரவில்லை.  
  • சில ஆண்டுகள் ஆனதும் பேட்டரிகள் சக்தியை இழக்கும். ஓரிரு ஆண்டுகளில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தொலைவு செல்லும் வாகனம், பிறகு 150 கிமீ ஆகக் குறையும். பேட்டரி மாற்றப்படும் வரை இந்த திறன் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும், இது உரிமையாளருக்குக் கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவு வைக்கலாம்.
  • இதற்கு தீர்வாக, சார்ஜிங் நிலையங்களில் காலி பேட்டரிகளைக் கொடுத்து ரீசார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் தில்லியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியாளர் க்‏ஷிதிஜ் டாண்டன்.
  • அறிவியல் விஞ்ஞானிகள் நினைத்தால், ஆய்வுகளை மேம்படுத்தி விரைவில் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்று கண்டுபிடிக்கப்படலாம். வளர்ந்து வரும் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம்.

சுற்றுச்சூழல் முரண்பாடு

  • மின் வாகனங்கள் பசுமையை ஏற்படுத்துவதற்கான ஒரே உபாயம் அல்ல. இப்படி சொல்ல முக்கிய காரணம் அதன் இதயம் போன்ற லித்தியம்-அயன் (Li-ion) பேட்டரி. அதனால் எழும் பிரச்னை ஒன்றல்ல, இரண்டு. பேட்டரி உற்பத்தியின் போது அதிக கார்பன் பயன்பாடு மற்றும் பேட்டரியின் வாழ்நாள் முடியும்போது.
  • 1991 ஆம் ஆண்டு சோனி கார்ப்பரேஷனால் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, லி-அயன் பேட்டரிகள்தான் ஸ்மார்ட்ஃபோன் முதல் கார் வரை அனைத்தையும் இயக்குகின்றன. 
  • இந்தியா தனது மொத்த லித்திய தேவைக்கும் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.  இது பூமியில் ஹைட்ரஜன், ஹீலியத்திற்குப் பிறகு அதிகமாகக் காணப்பட்டாலும் எளிதில் எடுக்க முடியாது. லித்தியத்தை பிரித்தெடுக்கும் செயல்முறைக்கு 10 முதல் 24 மாதங்கள் வரை எடுக்கும்.
  • ஒவ்வொரு டன் லித்தியத்தையும் வெளியே எடுக்க, தலா 5,00,000 லிட்டர் நன்னீர் தேவைப்படுகிறது, நன்னீர் கஞ்சி போல குமிழியாக சுரங்கங்களில் செலுத்தப்படுகிறது, அது ஆவியாக திறந்த நிலையில் விடப்படும். ஆனால் விந்தையாக, இந்த சுரங்கங்கள் அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி போன்ற வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைந்துள்ளன. ஆவியாதல் முடிந்ததும் லித்தியம் வெட்டியெடுக்கப்படுகிறது. ஆனால், அதன் எச்சத்தில் உள்ள நச்சுப் புகை மற்றும் கழிவுகள் தானாக அழிய பல நூற்றாண்டுகள் எடுக்கும். இது பூமியில் ஊடுருவி, நிலத்தடி நீர், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.
  • லித்தியம் குறைவாகக் கிடைப்பதால், அது மின் வாகனங்களின் விலையை கூட்டுகிறது. இது குறித்து எலான் மஸ்க், எக்ஸ் பக்கத்தில், "லித்தியத்தின் விலை பைத்தியக்காரத்தனமான நிலைக்கு சென்றுவிட்டது. டெஸ்லா நேரடியாக சுரங்கத்துக்குச் சென்றால்தான் செலவுகளை குறைக்க முடியும்" என பதிவிட்டிருந்தார்.
  • மின் வாகன பேட்டரியை மறுசுழற்சி செய்ய முடியுமா என ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், தற்போதுவரை பேட்டரிகள் நிலத்தில்தான் வீசப்படுகின்றன. வழக்கமாக காலாவதியான பேட்டரிகள் முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய முறையில் அகற்றப்பட வேண்டும். ஆனால், அவர்களும் அதனை சரியாக கையாள்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
  • மறுபுறம், மின் வாகனங்கள் ஒரு கார்பன் மாசுபடுத்தியும் கூட. ஒரு யூனிட் ஆற்றலை உற்பத்தி செய்ய 150 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. இது ஒரு மணிநேர பேட்டரி ஆயுளுக்குத்தான் உதவும். இவ்வாறு கணக்கிட்டால், பெட்ரோல் அல்லது டீசல் கார் ஒட்டுமொத்தமாக வெளியிடுவது 7-10 டன் கார்பன்டை ஆக்ஸைடு மட்டுமே, இதுவே மின் வாகனம் என்றால் 16-19 டன் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. 
  • மற்றொரு தகவல் என்னவென்றால், உலகெங்கிலும் மின் கட்டமைப்புகளுக்கான எரிபொருளாக இருக்கும் நிலக்கரி பற்றியது. மின்சாரம் தயாரிப்பில் நிலக்கரி ஒரு முக்கிய காரணி, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் நிலக்கரி மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இதுவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லை. 
  • இதுமட்டுமா, சாதாரண வாகனங்களைக் காட்டிலும் மின் வாகனங்களின் டயர்கள் அதிக எடைகொண்டவை. இதுவும் மக்காக் குப்பைதான். மண்ணில் நுழைந்து மனிதனைக் கொல்லும் சாபக்கேடு. 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/12/23/e_car_opt.jpg?w=640&dpr=1.3

சார்ஜர் நிலையங்கள்

  • நாடு முழுக்க 7,000 சார்ஜர் நிலையங்கள் உள்ளன. சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சார்ஜ் அமைப்பை ஏற்படுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே, வருங்காலத்தில் மின் வாகன தயாரிப்புக்கு ஏற்ப சார்ஜ் வசதியையும் அதிகரிக்க வேண்டும். இன்று வீடு அல்லது அலுவலகத்தில் தனியாக சார்ஜ் நிலையம் அமைக்க ரூ.1.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் செலவாகும்.

தீப்பற்றுதல்

  • பாட்டரிகளின் தொழில்நுட்ப குறைபாட்டால் தீப்பற்றும் அபாயம் ஏற்படுகிறது. பாதுகாப்பைத்தானே பலரும் கருத்தில்கொள்வார்கள். சில பேட்டரி வாகனங்கள் தீப்பற்றி எரிகின்றன. காரணம் கண்டறியப்படாமல் உள்ளது. கடந்த காலங்களில் பல மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த காரணங்கள் மற்றும் அரிதான கோளாறுகளால் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன. மின் வாகனங்களை வாங்கியவர்களும் கூட.

ஹைப்ரிட் வாகனம்

  • பெட்ரோல், டீசல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் வகையில் புதிய வாகன தயாரிப்புக்கான ஆய்வுகள் நடக்கின்றன. இதில், ஜப்பானும் சீனாவும் சபாஷ் சரியான போட்டி என்ற அளவில் இருக்கிறார்கள். இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஹைப்ரிட் கார் விற்பனை மின் வாகனங்களை விஞ்சியுள்ளது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் 'வாகன்' தரவுகள் தெரிவிக்கின்றன.
  • ஜனவரி முதல் இந்தியாவில் விற்பனையான 2,66,465 ஹைப்ரிட் கார்களுடன் ஒப்பிடும்போது இ-கார்கள் விற்பனை 64,097மட்டுமே. ஒரு வழியை மாற்ற நடுவழியே சிறந்ததாக உள்ளது.
  • ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2035-க்குள் புதிய பெட்ரோல், டீசல் கார் விற்பனையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல், 2030-க்குள் முழு இ-கார்களை அறிமுகப்படுத்த வால்வோ முடிவெடுத்துள்ளது.
  • மின் வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் மின்வாகன விற்பனை இந்த ஆண்டு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச தூய்மை போக்குவரத்து கவுன்சிலின்படி, பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் மட்டுமே பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில் பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளன என்பதே.
  • தொழில்நுட்பங்கள் மேம்படும் போது, ​​மின் வாகனங்களில் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு மேலும் குறையும். “இந்திய போக்குவரத்துத் துறையானது மொத்த கார்பன் வெளியேற்றத்தில் 14 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆற்றல் மற்றும் தொழில்களுக்கு அடுத்த இடத்தில் போக்குவரத்து உள்ளது. போக்குவரத்துத் துறை மூலம் கார்பனேற்றத்தைக் குறைப்பதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று மின் வாகனங்கள் என்கிறார் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற நிர்வாகப் பிரிவின் இணை இயக்குநர் ஷெரீப் கமர். 
  • மேலோட்டமாகச் சொன்னால் மின் வாகனம் காற்று மாசை குறைக்க உதவும், தேசிய அளவில் என்றால், இது நாட்டின் எரிபொருள் தேவையைக் குறைத்து அதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி கட்டணங்களை குறைக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது.
  • மின் வாகனம், இ-பைக், இ-கார் வாங்குவது சரியா? தவறா? என்பது அவரவர் வசதி மற்றும் மனப்பாங்கைப் பொருத்தது. அதிலிருக்கும் சாதக-பாதகங்களை இங்கே அலசி ஆராய்ந்திருக்கிறோம். இதன் மூலம் வெறும் கண்மூடித்தனமாக காற்றுமாசுபாடு என்ற ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்கும் மின் வாகன விளம்பரங்கள், அனைத்து தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தினால், நாடும், வாகனத்தை வாங்குவோரும் பாதுகாக்கப் படுவார்கள் என்பதே பொதுவான கருத்து.

நன்றி: தினமணி (27 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories