பிரபல உலகத் தலைவர்!
- இந்த ஆண்டும் தேர்தல்களில் பாஜகவுக்கு அதிக வெற்றிகள் தேடித்தந்த முகமாக இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர், யூடியூப் அலைவரிசையில் 2 கோடி பின்தொடர்வோரைக் கொண்ட முதல் உலகத் தலைவர் எனப் பல பெருமிதங்களைப் பெற்றார். மணிப்பூர் கலவரம் குறித்து நீண்ட மெளனம் காத்தார்; எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத் துறையை ஏவுகிறார், மக்கள் பிரச்சினைகளைப் பேச மறுக்கிறார் என நிறைய விமர்சனங்களும் இருந்தன.
கொள்கைப் ‘பிடிவாதக்காரர்’
- பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கியதில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் பங்கு முக்கியமானது. பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, பிற்படுத்தப்பட்டோர் அரசியலை மீண்டும் பேசுபொருளாக்கினார். இந்திக்கு ஆதரவான தனது பிடிவாதப் போக்கைப் பல முறை வெளிப்படுத்தினார்.
பதவியிழந்த வங்கப் புலி
- பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்துவந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தானியிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே முன்வைத்த குற்றச்சாட்டின்பேரில் பதவியிழந்தார். நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தன் தரப்பு விளக்கத்தை முழுமையாகக் கேட்கவில்லை எனக் குமுறியவர், உச்ச நீதிமன்றப் படியேறியிருக்கிறார்.
நம்பிக்கையளித்த நீதிபதி
- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 2023இல் 51,191 வழக்குகளுக்குத் தீர்வு கண்டது உச்ச நீதிமன்றம். மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் ஆளுநர்களுக்குக் கடிவாளம் போடும் தீர்ப்புகளை வழங்கிக் கவனம் ஈர்த்தார். பணமதிப்பு நீக்கம், 370ஆவது சட்டக்கூறு நீக்கம் தொடர்பான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வழங்குவதில் ஈடுபாடு காட்டினார். தன்பாலீர்ப்புத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என ஐந்து நபர் அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘தன்பாலீர்ப்பாளர்கள் உள்பட அனைவரும் தங்கள் வாழ்க்கையின் தார்மிகத் தரத்தைத் தீர்மானிக்க உரிமை பெற்றவர்கள்’ என அனைவரையும் உள்ளடக்கும் பார்வையை வெளிப்படுத்தினார்.
காங்கிரஸைக் கரையேற்றியவர்கள்
- 2022இல் தொடங்கிய ‘இந்திய ஒற்றுமை’ப் பயணத்தின் பாதி அறுவடை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்குக் கிடைத்தது. கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சிக்குவர உறுதுணையாய் இருந்தார். பெயரில் ‘மோடி’ என்னும் பின்னொட்டைக் கொண்டவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, எம்.பி. பதவியைச் சிறிதுகாலம் இழந்திருந்தார். கட்சியைப் பலப்படுத்துவதில் காங்கிரஸ் இந்நாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் பங்கு பெரிது. இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோரால் முன்மொழியப்பட்டாலும், “அதெல்லாம் வெற்றிக்குப் பின்னர்தான்” என்று மறுதலித்தார்.
கண்ணீர் சிந்திய வீராங்கனை
- இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி, பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, சக வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து போராடிய சாக்ஷி மாலிக், பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பின்னர் அவரது ஆதரவாளர்களே தலைவர் - உறுப்பினர் பதவிகளுக்கு வந்ததால் விரக்தியடைந்து, விளையாட்டிலிருந்தே கண்ணீருடன் விடைபெற்றார். பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதையும், வினேஷ் போகட் அர்ஜுனா விருதையும் திருப்பியளித்து எதிர்ப்பைக் காட்டினர். மல்யுத்தக் கூட்டமைப்பை இடைநீக்கம் செய்திருக்கிறது அரசு.
முதல்வரான முன்னாள் அதிகாரி
- ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்து மிசோரம் மாநிலத்தின் முதல்வராகியிருக்கிறார் லால்துஹோமா. 1980களில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக அதிரடி காட்டி மக்கள் மனதில் இடம்பெற்றவர். கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலவ வைத்தவர். 1984இல் காங்கிரஸில் இணைந்து எம்.பி. ஆனார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி இழந்த முதல் எம்.பி-யும் இவர்தான். 2017இல் தொடங்கப்பட்ட இவரது ‘ஸோரம் மக்கள் இயக்கம்’ கட்சி குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வந்தது கவனிக்கத்தக்கது.
அனுபவசாலியும் அசுர உழைப்பாளியும்
- கர்நாடகத்தில் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த டி.கே.சிவகுமாரைத் தவிர்த்துவிட்டு, சித்தராமையாவையே முதல்வராக்கியது கட்சித் தலைமை. 2006இல்தான் காங்கிரஸுக்கு வந்தார் என்றாலும்நீண்டகால அரசியல் அனுபவமும் செல்வாக்கும் கொண்டவர்; மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்; ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை போன்றவை காரணங்கள். இயல்பிலேயே போராட்டக்காரரான ரேவந்த் ரெட்டி, தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சிக்கு வர உழைத்தவர். எதிர்க்கட்சித் தலைவராக அவரது அசுர உழைப்பு, முதல்வர் பதவியைப் பெற்றுத் தந்தது.
முன்னாள் அமைச்சரின் சிறைவாசம்
- டெல்லியின் துணை முதல்வர், கல்வி அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்த மணீஷ் சிசோடியா, முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலின் தளபதியாகத் திகழ்ந்தவர். அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்காகப் புகழப்பட்டவர். கலால் வரிக் கொள்கை முறைகேட்டு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டவர், பின்னர் அமலாக்கத் துறையாலும் கைதுசெய்யப்பட்டார். இன்றுவரை பிணையில் வெளியில் வர முடியவில்லை.
தங்க நாயகன்
- ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஈட்டி எறிதலில் உலகின் மனதைக் கொய்தவர் நீரஜ் சோப்ரா. 2023இல் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றார். சீனாவின் ஹங்ஜோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2023)