TNPSC Thervupettagam

2023-24-ல் சவால்களை சமாளித்த இந்திய பொருளாதாரம்

April 1 , 2024 265 days 429 0
  • அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பானுக்கு அடுத்தபடியாக 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும் 2022, 2023 மற்றும் மார்ச் 31 உடன் நிறைந்த 2024 என கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக, பெரிய பொருளாதார நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வரிசையில், முதலிடத்தில் இருக்கிறது.

டாப் ஸ்கோரர்’

  • 2021-22 நிதி நிதியாண்டில், 9.1 சதவீத உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி. 2022-23ல் 7.2 % வளர்ச்சி. நேற்றோடு முடிந்த 2023-24-ல் (உத்தேசமாக) 7.6% வளர்ச்சி என்பது, நல்ல கணிசமான வளர்ச்சி என்றே சொல்லலாம்.
  • அது தவிர, ஒப்பீட்டு அடிப்படையில், சீனாவைவிடவும் இந்த வளர்ச்சி அதிகம் என்பதும், அதைக் காட்டிலும் முக்கியமாக, சமீப ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகமும், பெரும்பாலான தேசங்களும் சந்தித்துவரும் சவால்களுக்கு நடுவே, இந்தியா இந்நிலையில் இருப்பதும், தொடர்வதும் மகிழ்ச்சிதரும் ஒன்று.
  • உலக நாடுகள் பலவும் தொடர்ந்து பொருளாதார சிக்கல்களுக்கு இடையே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு மூன்று எதிர்பாராத மோசமான (பிளாக் ஸ்வான்) நிகழ்வுகளே காரணம்.

பிளாக் ஸ்வான்’ நிகழ்வுகள்

  • முதலாவது, லாக்டவுன்களால் சில பல மாதங்களுக்கு உலகை புரட்டிப் போட்டதோடு, முடக்கியும் வைத்திருந்த கரோனா வைரஸ் பரவல். அதன் பாதிப்பால் தடுமாறிப் போகாத நாடுகளே இல்லை. பல நாடுகள்அந்த தடுமாற்றத்திலிருந்து இன்னும் முழுவதுமாக மீளவில்லை. இந்தியாவில் அது பழைய கதை.
  • இரண்டாவது காரணம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலம் மிக்க ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்த போர் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ‘நேட்டோ’ நாடுகள் களத்தில் இறங்கியது. அதனால், 2 ஆண்டுகளாக தொடரும் போர். அது முடிவதற்குள்ளாகவே, பாலஸ்தீனம், இஸ்ரேல் மீது செய்த தாக்குதலும் அதனால் உண்டான மற்றொரு மோசமான போரும்.
  • இந்த இரு பெரும் யுத்தங்களால் மூலப்பொருள் வருகை பாதைகள் வெட்டுண்டன; அதனால் கச்சா எண்ணெய், மற்றும் உற்பத்திக்குத் தேவையான பல மூலப் பொருட்கள் கிடைக்காமல் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி தடைபட்டது. கச்சா எண்ணெய் உள்பட சில மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மொத்த ஐரோப்பாவும் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து சந்தை விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கியது.
  • மூன்றாவதாக, உலகின் மிகப்பெரும் பொருளாதரங்களான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர் அளவுகளுக்குச் சென்ற பணவீக்கம். அதைக் கட்டுப்படுத்த, பெடரல் ரிசர்வ் எடுத்த அதிரடி நடவடிக்கைகள். அதனால் நிதிச் சந்தைகளில் உண்டான பெரும் அதிர்வுகள். உதாரணத்துக்கு 40 ஆண்டாக இயங்கி வந்த அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிக்கான் வேலி பாங்க் ஒன்றுமில்லாமல் போனது.
  • இப்படியாக 2020 முதலே உலகின் பல்வேறு பெரும் சந்தைகளில், பொருளாதார சிக்கல்கள். அதனால் அதிர்வுகள். அப்படிப்பட்ட சவாலான சூழ்நிலைகளை சமாளித்து, இந்திய பொருளாதாரம் 7 மற்றும் அதற்கும் கூடுதலான சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. ‘மேக்ரோ எக்னாமிக் இண்டிகேட்டர்ஸ்’ ஜிடிபி வளர்ச்சி சரி.
  • அது தவிர, மார்ச் 31 உடன் முடிந்த 2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏனைய பொருளாதார விடயங்கள் எப்படியிருக்கின்றன? ஒட்டுமொத்த பொருளாதார சுட்டிகள் (மேக்ரோ எகனாமிக் இண்டிகேட்டர்ஸ்) என்ன தெரிவிக்கின்றன? தலைப்புச் செய்திகளாக பார்த்தால், இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு, ஆண்டின் தொடக்கத்தில் 82.15 ஆக இருந்தது, முடிவில் 83.33 ஆக, ஒரு ரூபாய் 15 காசு விழுந்திருக்கிறது. பெரிய மாற்றம் இல்லை.
  • ஒரு ஆண்டில் இந்தியாவுக்குள் வந்திருக்கிற அந்நிய நேரடி முதலீடு (FDI), 18 பில்லியன் டாலர்கள் (ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்). கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு. ரெமிட்டென்ஸ்சஸ் எனப்படும் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் தொகை, உலக வங்கியின் கணிப்புபடி, 2023-24ல் 135 பில்லியன் டாலர்கள் (ரூ.11.20 லட்சம் கோடி). இதிலும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்றவற்றை வாங்கும் அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FPI), 2023-24 ல் சுமார் 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சங்களை தொட்டிருக்கின்றன.
  • 2023-24 நிதியாண்டில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 29 சதவீதம் உயர்ந்துள்ளது. பரஸ்பர நிதிகள் வசமிருக்கும் நிதி அளவு ரூ.54 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அரசுக்கு கிடைக்கிற நேரடி மற்றும் மறைமுக வரி வருமானங்கள் முறையே 18% மற்றும் 10 % அதிகரித்திருக்கின்றன.
  • இந்தியா 2022-23ம் ஆண்டில் செய்த மொத்த ஏற்றுமதி, 776 பில்லியன் டாலர்கள். 2023-24ல் பிப்ரவரி மாதம் 11 % வளர்ச்சி என்றபோதிலும், ஆண்டுமுழுவதும் என்று பார்க் கையில், அதே 776 பில்லியன் அளவு இருக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். முழு விவரங்கள் இனிமேல் தான் வரும். இறக்குமதி செய்துகொள்ளும் நாடுகளில் பிரச்சினை இருந்தபோதும் குறையவில்லை.
  • ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான பற்றாக்குறையான கரண்ட் அக்கவுண்ட் டிபிசிட் (CAD), முதல் மூன்று காலாண்டுகளில் தொடர்ந்து குறைந்திருக்கிறது. 4-வது காலாண்டு தகவல் வரவேண்டும். மேற்சொன்னகாரணங்களால், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 642 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.

கடனும் பற்றாக்குறையும்

  • முந்தைய ஆண்டில் ரூ.155 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் தொகை, 2023-24 ல், ரூ.168 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 6.4% சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2023-24 நிதியாண்டில் 5.8% ஆக குறையும் எனத் தெரிகிறது.

கச்சா எண்ணெய், தங்கம்

  • ஏப்ரல் 23-ல் மாதம் 77 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, ஜூன் மாதம், 66 டாலராக குறைந்து, ஜூலை மாதம் 91 டாலருக்குப் பறந்து, மீண்டும் டிசம்பரில் 68 டாலர் என்கிற அளவுக்கு இறங்கி, மீண்டும் மெல்ல உயர்ந்து, சென்ற வாரம், மார்ச் 27 அன்று 81 டாலராக இருந்தது. 22 கேரட் தங்கம் விலை கிராம் ரூ.5700 லிருந்து 6,390 ஆக (29.3.24) அதிகரித்திருக்கிறது. ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கவலை தரும் சில புள்ளிவிவரங்கள்

  • விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருளாதார வளர்ச்சி 2023-24ல் குறைவாக இருக்கிறது. நிதியாண்டில் 1.8% மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் நகர்ப்புறங்களுக்கு, கிராமப்புறங்களுக்கு, 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்ற வரையறை மற்றும் ஆண்களுக்கு தனியாக பெண்களுக்கு தனியாக என்று பலவிவரங்கள் வெளியிடப்படுகின்றன. புரிந்து கொள்ள ஏதுவாக இல்லை. 2023-ம் ஆண்டு, வேலையில்லாதவர்கள் 3.1% என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவை யதார்த்த நிலையை காட்டுவதாக கொள்ளமுடியவில்லை.

வட்டி விகிதம்

  • முந்தைய ஆண்டில் 5.69 % ஆக இருந்த பணவீக்கம், முடிந்த ஆண்டில் 5.4 % ஆக குறைந்திருக்கிறது. இருந்த போதிலும் ரிசர்வ் வங்கி ஆண்டு முழுவதும் வட்டி விகிதத்தை தொடர்ந்து 6.5% ஆகவே மாற்றமின்றி வைத்திருக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் 23-24 நிதி ஆண்டு இந்தியாவைப் பொறுத்தவரை நன்றாகவே முடிந்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories