TNPSC Thervupettagam

2023 - கவனம்பெற்ற சிறார்கள்

December 27 , 2023 393 days 284 0

அதாரா பெரேஸ் சான்செஸ் - அதிக ஐ.கியூ. எண்

  • மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 11 வயது அதாரா பெரேஸ் சான்செஸ், நுண்ணறிவுச் (ஐ.கியூ.) சோதனையில் சாதனை படைத்திருக்கிறார். நுண்ணறிவில் சிறந்தவர்களாக அறியப்படும் ஐன்ஸ்டைன், ஸ்டீவன் ஹாக்கிங் ஆகியோரைவிட அதிகமான எண்களைப் (162 ஐ.கியூ.) பெற்றிருக்கிறார். அதாரா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மூன்று வயதில் கண்டறியப்பட்டது.
  • இருப்பினும் 5 வயதுக்குள் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். 10 வயதுக்குள் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடித்தார். 11 வயதில் மெக்சிகோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். படிப்பை முடித்தவுடன் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் பணியாற்ற விரும்புகிறார்.

லிசிபிரியா கங்குஜம் - சுற்றுச்சூழல் போராளி

  • இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் 12 வயது லிசிபிரியா கங்குஜம். இவர், துபாயில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராகக் கலந்துகொண்டார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, லிசிபிரியா திடீரென்று ஒரு பதாகையுடன் மேடையேறினார்.
  • புதைபடிம எரிவாயுக்களுக்குத் தடை விதியுங்கள், நம் பூமியைக் காப்பாற்றுங்கள்’ என்று முழக்கமிட்டார். உடனே அரங்கத்தில் கரவொலி எழுந்தது. இந்த நிகழ்வின் மூலம் லிசிபிரியா உலகத்தின் கவனத்தைப் பெற்றார்.

ஜப்சிம்ரன் கவுர் - 50 லட்சம் வென்றவர்

  • ஜலந்தரைச் சேர்ந்த ஜப்சிம்ரன் கவுர், கேந்திர வித்யாலயாவில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 2022 டிசம்பர் 14இல் ஒளிபரப்பான போட்டியில், 50 லட்சங்களை வென்றார்! தான் வென்ற பரிசுத் தொகையைப் பாட்டியின் மருத்துவச் செலவுக்கும் தன்னுடைய ஐஐடி படிப்புக்கும் செலவிட இருப்பதாகச் சொன்னார். போட்டி விதிகளின்படி இவருக்கு 18 வயது ஆன பிறகே பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

ஆதித்யா சுரேஷ் - இசைக் கலைஞர்

  • கேரளத்தைச் சேர்ந்த ஆதித்யா சுரேஷ், எலும்புகள் உடையும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இதுவரை 20 தடவை எலும்புகள் உடைந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் 3 வயதில் பாட ஆரம்பித்தார். 10 வயதில் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டார்.
  • இதுவரை 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். பதினோராம் வகுப்புப் படித்துவரும் ஆதித்யா சுரேஷுக்குக் கலை மற்றும் கலாச்சார பிரிவில் இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஆதித்ய பிரதாப் சிங் செளகான் - மைக்ரோபா தொழில்நுட்பம்

  • சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆதித்ய பிரதாப் சிங் செளகான், ‘மைக்ரோபா’ என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். இது குடிநீரில் கலந்துள்ள நுண்ஞெகிழியைக் கண்டறிந்து, வடிகட்டி, நல்ல நீராகக் கொடுக்கிறது. 12 வயதில் தன் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர் ஒருவர் நுண்ஞெகிழி ஆராய்ச்சியில் ஈடுபட்டதைப் பார்த்துத் தனக்கும் ஆர்வம் வந்ததாகச் சொல்கிறார் இவர்.
  • இரண்டு ஆண்டுகள் நுண்ஞெகிழி குறித்துப் படித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகு, கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, வெற்றியடைந்திருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஹர்சன் – நீச்சல்

  • தூத்துக்குடியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர் ஹர்ஷன், 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுவருகிறார். நீச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏழரை மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்தார். இதன் மூலம் குளோபல் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார்.

விஹான் தல்யா விகாஷ் - ஒளிப்படக் கலைஞர்

  • பெங்களூருவைச் சேர்ந்த 10 வயது விஹான், லண்டனில் நடைபெற்ற காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசை வென்றார். ‘ஒளிப்படக் கலையின் ஆஸ்கர்’ என்று கருதப்படும் இந்தப் போட்டியில் 10 வயதுக்கு உள்பட்டோரின் பிரிவில் விஹான் முதல் பரிசைப் பெற்றிருக்கிறார். 95 நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் ஒளிப்படக் கலைஞர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். அதில் வென்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார் விஹான்.

நன்றி: தி இந்து (27 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories