TNPSC Thervupettagam

2023 தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

December 15 , 2023 341 days 264 0
  • தேர்தல் முடிவுகளை ஆய்வுசெய்கிறவர்கள் கிரிக்கெட் ஆட்ட வர்ணனையைக் கவனமாகக் கேட்க வேண்டும். தேர்தல் முடிவுகளை ஆராயும்போது அடிப்படையாக செய்யும் முட்டாள்தனங்களிலிருந்து அவர்களை அது காப்பாற்றும். விளையாட்டைத் தீவிரமாக அணுகும் எந்த விமர்சகரும் வென்ற அணி மட்டை வீச்சு, பந்து வீச்சு, களத்தில் பந்துகளைத் தடுப்பது, தலைமைத்துவம், அதிர்ஷ்டம் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியது என்று ஒருபோதும் ஒரேயடியாகப் புகழ மாட்டார். வெகு அபூர்வமான போட்டிகளில் அப்படி நிகழ்ந்தால் மட்டுமே கூறுவார்கள், அதற்கும் வாய்ப்பில்லை.
  • ஊடகங்களில் நடைபெறும் தேர்தல் விவாதங்களைப் பார்த்தால் பெரும்பாலும் வென்ற அணி அல்லது கட்சி எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்டதாக விதந்தோதுவதே விமர்சகர்களின் பணியாக இருக்கிறது. வெற்றியாளனின் ஈட்டி பாதாளம் மட்டும் பாயும் என்று இதைக் கருதலாம். எந்தக் கட்சி வெற்றிபெற்றிருந்தாலும் அது சிறந்த நிர்வாகத்தைத் தந்திருக்க வேண்டும், அதன் திட்டங்கள் மிகச் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும், அதன் தலைவர் எல்லா வகைகளிலும் சிறந்தவராகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பேரிலேயே கருத்து தெரிவிக்கின்றனர்.
  • ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியால்தான் ஆளுங்கட்சி தோற்றது என்று ஒரே வாக்கியத்தில் எல்லாவற்றையும் விளக்கிவிட்டதாகக் கருதுகின்றனர். வென்றவர் மிகச் சிறந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார், அவருடைய வியூகங்கள் எல்லாமே மிகச் சிறப்பாக செயல்பட்டன, தோற்றவர் கையாண்ட உத்திகள் அனைத்துமே தோற்றுவிட்டன என்ற எண்ணமே விதைக்கப்படுகிறது.
  • தேர்தலில் இறுதி முடிவு என்பது பல்வேறு அம்சங்களால் ஏற்படுவது, அவற்றில் பல வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடியவை, வென்றவர் சில அம்சங்களில் தோற்றிருப்பார், தோற்றவர் சில துறைகளில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டிருப்பார் என்பதையே எண்ணாமல் தேர்தல் விமர்சகர்கள் பேசுகின்றனர்.

கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி

  • வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட களேபரம் ஓய்ந்துவிட்ட, தேர்தல் முடிவுகள் எல்லா கோணங்களிலும் அலசி ஆராயப்படுகின்றன. ‘லோக்நீதி -சிஎஸ்டிஎஸ்’ அமைப்பின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகளின் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. வாக்களித்தவர்களை நேருக்கு நேர் வீடுகளிலேயே சந்தித்து கேள்விகள் கேட்டும் வாக்காளர் பட்டியலிலிருந்து இங்கொருவர் – அங்கொருவர் என்று வகைக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து பேட்டி கண்டும் இந்தக் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
  • சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநில நிலவரம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விரிவாகப் பிரசுரமானது. இந்தத் தேர்தல் தொடர்பாக மக்களிடையே நிலவும் சில மாயையான கட்டுக்கதைகளை உடைப்போம், எந்த அம்சமெல்லாம் கை  கொடுக்கவில்லை என்பதையும் வெளிக்கொண்டுவருவோம்.

ஆட்சிக்கு எதிரோ, ஆதரவோ இல்லை

  • முதலாவதாக, இந்தத் தேர்தல் ஆட்சியிலிருக்கும் அரசு நீடிக்க வேண்டுமா – வேண்டாமா என்பதாக இல்லை, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், ஆளும் முதல்வருக்கு எதிராக கொழுந்துவிட்டு எரிந்த கோபத்தால் ஏற்பட்ட விளைவுகளும் அல்ல.
  • ஆளுங்கட்சி தோல்வியுற்ற எந்த மாநிலத்திலும், தேர்தல் முடிவுக்கு மூலக் காரணமாக அந்தந்த மாநில அரசு இல்லை. சமீப காலத்தில் நடந்த பேரவை பொதுத் தேர்தல்களில் மீண்டும் வெற்றிபெற்ற (உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா உள்ளிட்டவை) மாநில அரசுகளைவிட இப்போது தோற்ற மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்பட்டதாகவே மக்கள் கருதியுள்ளனர்.
  • அரசின் செயல்பாடு திருப்தி என்று மிகக் குறைவான சதவீதம் பேரால் சொல்லப்பட்டதுதான் மத்திய பிரதேச அரசு, ஆனால் அதிக வாக்குகள் – தொகுதிகள் வித்தியாசத்தில் அதுதான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. பதவி வகித்த நான்கு முதல்வர்களுமே களத்தில் அவர்களுக்கு முக்கிய போட்டியாளராக இருந்த அரசியல் தலைவரைவிட மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர்களாகவே இருந்தனர்.
  • எனவே, தேர்தல் வெற்றிக்குக் காரணம் ஆட்சிக்கு ஆதரவு என்றோ எதிர்ப்பு என்றோ பொத்தாம் பொதுவாக விளக்கிவிட முடியாது. மூன்று அம்சங்கள் இங்கு முக்கியம். முதலாவது, எல்லோருக்கும் பயன் தரும் திட்டங்களைவிட குறிப்பிட்ட சமூகங்களுக்காக அமல்படுத்தப்படும் திட்டங்களால் ஆளுங்கட்சிக்குச் சாதகம் ஏற்படுகிறது. மக்களிடையே மிகவும் பிரபலமான இரண்டு திட்டங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.
  • தெலங்கானாவில் அமல் செய்யப்பட்ட ‘ரயத்து பந்து’ திட்டத்தால் 80% விவசாயிகள் பலன் அடைந்தனர், ராஜஸ்தானில் அமலான சிரஞ்சீவி ஸ்வாஸ்த்ய பீமா யோஜனாவால் 58% மக்கள் பயன் அடைந்தனர். சிரஞ்சீவி திட்டத்தால் பயன் அடைந்தவர்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு 4% மட்டுமே ஆதரவு அதிகமாக இருந்தது, ரயத்து பந்து திட்டப் பயனாளிகள் இடையே காங்கிரஸைவிட 2 புள்ளிகள் பின்தங்கியே இருந்தது பாரத் ராஷ்ட்ர  சமிதி (பிஆர்எஸ்).  

பிரச்சாரத்தின் முக்கியத்துவம்

  • இரண்டாவதாக, அரசின் திட்டங்களைத் தங்களுடைய கட்சி கொண்டுவந்த திட்டம் என்று பிரச்சாரம் செய்வதும் முக்கியமாக இருக்கிறது.
  • ராஜஸ்தானில் அசோக் கெலாட் மேற்கொண்ட பல திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடியின் கொடைகள் என்றே அம்மாநில வாக்காளர்கள் கருதியுள்ளனர். அரசு திட்டத்தைத் தங்களுடைய கட்சி திட்டமாகப் பிரச்சாரம் செய்து ஆதரவைக் குவிப்பதில் காங்கிரஸைவிட பாரதிய ஜனதா பல மடங்கு முன்னணியில் இருந்தது. மத்திய பிரதேசத்தின் லட்லி பெஹன் யோஜனா பயனாளிகள் இடையே காங்கிரஸைவிட பாஜக 6% முன்னணியில் இருந்தது.

வரவிருக்கும் காலத்தின் முக்கியத்துவம்

  • மூன்றாவதாக கடந்த காலத்தில் என்னென்ன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று நினைவுகூர்ந்து பார்ப்பதைவிட, அடுத்து ஆட்சிக்கு வர விரும்புகிறவரில் யார், என்னென்ன தருவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று பார்க்கும் ஆவல் அதிகரித்துவருகிறது.
  • முந்தைய ஆட்சியில் ஒருவர் நன்மைகள் அதிகம் செய்திருந்தாலும் அடுத்து அதை யார் மேலும் சிறப்பாகச் செய்யக்கூடும் என்று பார்க்கும் விருப்பம் வாக்காளர்களிடையே அதிகரித்துவருகிறது.  ராஜஸ்தானிலும் தெலங்கானாவிலும் பெரும்பாலான வாக்காளர்கள், ஆமாம் அவர் நன்றாகத்தான் ஆண்டார், ஆனால் இது மாறுதலுக்கான நேரம் என்றே கருதினர்.

வென்றவரின் பிரச்சாரம்?

  • வென்ற கட்சி நன்றாகப் பிரச்சாரம் செய்திருக்கும், தேர்தல் வேலைகளையும் நன்றாக செய்திருக்கும் என்ற சோம்பேறித்தனமான ஊகமும் பொய் என்று இத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. பாரதிய ஜனதா அமைப்புரீதியாக வலிமையான கட்சி, பிரச்சாரங்களை நன்கு செய்கிறது, தேர்தல் செலவுக்கான நிதியைப் பெறுவதிலும் மற்ற கட்சிகளைவிட முன்னிலை வகிக்கிறது, வாக்குச் சாவடி நிர்வாகத்திலும் அது சிறந்து விளங்குகிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இவையெல்லாம் தேர்தல் களத்தில் நிலையான அம்சங்களாகிவிட்டன.
  • ஒப்பீட்டளவில் ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் வாக்குகளைச் சேகரிப்பதிலும் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் கடந்த தேர்தல்களைவிட இந்த முறை நன்றாகவே செயல்பட்டது காங்கிரஸ். பாஜகவைவிட ராஜஸ்தானிலும், பாஜக – பிஆர்எஸ்ஸைவிட தெலங்கானாவிலும் சமூக ஊடகங்கள் மூலம் வாக்காளர்களைக் கவர்வதிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதிலும் நன்றாக செயல்பட்ட து காங்கிரஸ்.

கோஷ்டி பூசலும் பண பலமும்

  • கோஷ்டிப் பூசல் என்பது ஒரு கட்சிக்குள் மட்டுமே நிரந்தரமான அம்சம் என்று தவறாகப் புரிந்துகொண்டு, தோல்விக்கு அதையும் ஒரு காரணமாக காட்டுவது வழக்கமாக இருக்கிறது. தெளிவான வியூகத்தோடும், கவனக் குவிப்புடனும் மத்திய பிரதேசத்தில் தேர்தல் வேலைகளைச் செய்த பாஜக, ராஜஸ்தானில் அப்படிச் செய்யவில்லை, அங்கே காங்கிரஸைவிட பாஜகவுக்குள்தான் கோஷ்டிப் பூசல் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸாரிடம் குழு மனப்பான்மை குறைவாகவும் ஒருங்கிணைந்த செயல்பாடு அதிகமாகவும் இருந்தது.
  • இறுதியாக, தேர்தலில் வெல்வதற்குப் பண பலம் அவசியம் என்றாலும் அது மட்டுமே போதாது என்பதை தெலங்கானா தேர்தல் முடிவு உணர்த்துகிறது. பண பலத்தில் பாரதிய ராஷ்டிர சமிதிக்கு நிகராக யாருமே அங்கு இல்லை என்றாலும் அதன் கோட்டை என்று கருதப்பட்ட இடங்களிலேயே அது பலமாக தோற்றிருக்கிறது.
  • அனைவராலும் அதிகம் கவனிக்கப்படாத சில காரணங்களால்தான் இந்தி பேசும் மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது, தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களைவிட இந்தக் காரணங்கள் குறித்துத்தான் எதிர்க்கட்சிகள் அதிகம் கவலைப்பட வேண்டும்.

வர்க்க, சாதி மாறுதல்கள்

  • ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் கட்சிகளின் சமூக அடிப்படை ஆதரவு மாறியிருக்கிறது, சத்தீஸ்கரில் அது வெகு வெளிப்படையாக இடம்பெயர்ந்திருக்கிறது. தெலங்கானா ஆட்சி மாற்றத்துக்குக் காரணம் சாதியோ, சமூகமோ அல்ல. மத்திய பிரதேசத்தில் அனைவரும் கருதுவதைப் போல பெண் வாக்காளர்களுடைய ஆதரவால் பாஜக வென்றுவிடவில்லை. இந்த முறை வாக்களிக்க வந்த மகளிரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிடவில்லை. லோக்நீதி சர்வே இந்த மாயையை உடைத்துவிட்டது. பெண்களைவிட ஆண்களிடையே பாஜகவுக்குக் காங்கிரஸைவிட அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற வாக்காளர்களிடையேயும் அதிக வேறுபாடுகள் இல்லை: நகர்ப்புறங்களில் காங்கிரஸைவிட பாஜகவுக்கு ஆதரவு சற்றுதான் அதிகம்.
  • இந்த மூன்று மாநிலங்களிலுமே பொருளாதார அடிப்படையிலான உழைக்கும் வர்க்கத்திடையேயும் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையேயும் காங்கிரஸ் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், முஸ்லிம்கள், பொதுவான ஏழைகளிடையே பாஜகவைவிட காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றது உண்மை என்றாலும், சமூகப் படிநிலையில் முக்கோணத்தின் கீழ் பாதியாக இருக்கும் அவர்களிடையே காங்கிரஸ் ஆதரவை வலுப்படுத்திக்கொள்ளவில்லை.
  • முஸ்லிம்களிடையே காங்கிரஸுக்கு வாக்குகள் ஒட்டுமொத்தமாக குவிந்திருக்கிறது, மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் இதற்கும் மேல் முஸ்லிம்களுடைய ஆதரவு பெருக வாய்ப்பில்லாத வகையில் உச்சபட்ச ஆதரவு காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கிறது, ஆனால் தெலங்கானாவில் இல்லை.
  • இந்துக்களில் முற்பட்ட சாதியினர் விஷயத்திலும் அப்படியே, தெலங்கானாவில்கூட முற்பட்ட சாதி இந்துக்களில் அதிகம் பேர் பாஜகவையே ஆதரித்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் மக்களிடையே காங்கிரஸிக்கு ஆதரவு ராஜஸ்தானில் அதிகம், தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிக்கு இணையான அளவில் ஆதரவு, மத்திய பிரதேசத்தில் பாஜகவைவிட அதிக ஆதரவு.
  • பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் வாக்குகளிலும் காங்கிரஸுக்கே அதிகம் ஆதரவு. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் ஆதிவாசிகளுடைய புதிய அரசியல் உத்தி காரணமாக, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டுக்குமே வாக்குகள் குறைந்துள்ளன. ராஜஸ்தானைத் தவிர பிற மாநிலங்களில் ஏழைகளுக்கிடையே தனக்குள்ள செல்வாக்கை காங்கிரஸால் மேலும் அதிகப்படுத்திக் கொள்ள முடியவில்லை, ராஜஸ்தானில் ஆதரவு குறையவில்லை ஆனால் சத்தீஸ்கரில்தான் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது, ஏழைகளும் ஆதிவாசிகளும் இந்த முறை பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
  • மிக முக்கியமானதொரு மாற்றம் – காங்கிரஸுக்கு அதிக கவலையை அளிக்கக்கூடிய அம்சம் – மூன்று இந்தி மாநிலங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) வாக்காளர்களிடையே பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது, இந்த மூன்று மாநிலங்களிலுமே மண்டல் அரசியல் பெரிய அளவில் செல்வாக்கை ஏற்படுத்தியதில்லை. மக்கள்தொகை அதிகமுள்ள இந்தச் சமூகங்களிடையே  காங்கிரஸைவிட பாஜகவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது, நாடு முழுவதும் உள்ள சராசரி ஆதரவைவிட இங்கு பாஜகவுக்கு ஆதரவு அதிகம்.
  • எல்லா மாநிலங்களிலுமே கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக தனக்கு ஆதரவைப் பெருக்கிக்கொண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்குக் காங்கிரஸ் ஆதரவு தந்திருந்தும், அதன் முதல்வர்களில் இருவர் ஓபிசி பிரிவைச் சேரந்தவர்கள் என்றபோதிலும் அந்தச் சமூகத்தின் முழு ஆதரவு காங்கிரஸுக்குக் கிட்டவில்லை. மண்டல் ஆதரவாளர்களைத் தன்வசம் ஈர்ப்பதில் காங்கிரஸ் பின்பற்றும் பிஹார் மாதிரியைவிட, பாஜக பின்பற்றும் உத்தி நன்றாக கைக்கொடுக்கிறது.
  • இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலேயே இதுவரை அதிகம் கவனிக்கப்படாத பிரிவுகளை அடையாளம் கண்டு அடையாளமாக சில சலுகைகளைச் செய்துவிட்டு, முற்பட்ட சாதி ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக அவர்களையும் கொண்டுவருவதில் காங்கிரஸைவிட பாஜக சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

கசப்பான கவலை

  • காங்கிரஸ் கட்சிக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் முடிவு கசப்பான கவலைகளை அளித்துள்ளது. யாருக்கு – எதற்கு வாக்களிப்பது என்பதில் வாக்காளர்களிடையே பொதுவான மாற்றமும் இடப்பெயர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. 1970களிலும், 1980களிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில்கூட தங்களுடைய பிரதமருக்கான தேர்தல் என்ற பாவனையில் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
  • 1990களிலும் 2000களிலும் மக்களவைத் தேர்தலில்கூட தங்களுடைய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அது என்ற பாவனையில் வாக்களித்தனர். அதற்குப் பிறகு மக்கள் சட்டப்பேரவைக்கு ஒரு மாதிரியாகவும் மக்களவைக்கு வேறு மாதிரியாகவும் ஒரே தேர்தலில் வாக்களிக்கத் தொடங்கினர். மாநிலத் தேர்தல் எது, தேசிய அளவிலான தேர்தல் எது என்ற புரிதல் நன்கு வளர்ந்திருந்தது.

மோடியின் தாக்கம் உண்மை

  • உத்தர பிரதேசத்தில் 2022இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அந்த நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அரசின் செயல்பாட்டைப் பொருத்து மாநில அரசுக்கு வாக்களிக்கத் தொடங்கினர். இதற்குத் திட்டவட்டமான ஆதாரங்கள், தரவுகள் கிடைக்காவிட்டாலும் அது மோடியின் விளைவு என்று கூறப்பட்டது. லோக்நீதி -சிஎஸ்டிஎஸ் சர்வே தரவுகள் இதைத் தெரிவிக்கின்றன. மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுவதாகவே கூறினாலும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு மக்கள் அதிக ஆதரவு தெரிவித்தனர். பிரதமர் மோடிக்காகவே பாஜகவுக்கு வாக்களித்ததாக பலரும் கூறியுள்ளனர்.
  • இந்த இரண்டு காரணங்கள் – சமூகப் பிணைப்பு – அரசியல் களத்தில் தேசிய அரசுகள் பற்றிய உணர்வுகள் அதிகரிப்பது ஆகியவை காரணமாக பாஜகவின் வாக்கு வங்கி பெருகியிருக்கிறது. பாஜகவின் சித்தாந்தத் தொகுப்புகளிலும் உரிய மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இதன் காரணமாகவே ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் பாஜகவால் அதிக வெற்றிபெற முடிந்திருக்கிறது. இந்த மவுனமான மாற்றத்தால்தான் பாஜக அரசு மீது இருந்த அயர்ச்சியான அதிருப்தி, கடைசி நேரத்தில் மறைந்து பாஜகவுக்கு, அமோக வெற்றியைக் கொடுத்திருக்க வைத்திருக்கிறது. இது ஏன் என்று யாராலும் கூற முடியவில்லை.
  • தெலங்கானாவில் காங்கிரஸ் அடைந்திருக்கும் பெருவெற்றி, மூன்று மாநிலங்களில் தவிர்த்திருக்கக்கூடிய தோல்வியைப் பெற்றதால் – பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. மக்களவை இடங்கள் அடிப்படையில் பார்த்தால் மாற்ற முடியாத முடிவுகளோ – இழப்புகளோ அல்ல. இதே பாணியில்தான் மக்களவை பொதுத் தேர்தலிலும் கிடைக்கும் என்று வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், 2019இல் ஓரிடம்கூட பெற முடியாத காங்கிரஸுக்கு 22 இடங்கள் நிச்சயம் கிடைக்கும்.
  • அதேசமயம் இந்தத் தேர்தல் முடிவுகள், சமூக அடுக்குகளில் ஏற்பட்டுவரும் ஆழமான இடப்பெயர்வுகளையும், புதுவகை அணி சேர்க்கைகளையும் புதிய சமூகப் பிணைப்புகளையும் காட்டுவது காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கவலைகளை ஏற்படுத்தி, மீண்டும் பொது உத்தி வகுக்க அமர்ந்து பேசுவது அவசியம் என்பதை உணர்த்துகிறது.

நன்றி: அருஞ்சொல் (15 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories