TNPSC Thervupettagam

2024 - தொடரும் போராட்டங்கள்!

December 26 , 2024 32 days 63 0

2024 - தொடரும் போராட்டங்கள்!

  • மருத்துவத் துறையில் அதிக அளவிலான பெண்கள் ஈடுபட்டு வருவது, அவர்களின் குறிப்பிடத்தக்க சேவையையும் இந்தியா வளர்ந்த சமூகமாக உருவெடுத்து வருவதையும் நிரூபிக்கிறது - சமீபத்தில், ஆந்திரத்திலுள்ள மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசியபோது குறிப்பிட்ட வரிகள் இவை.
  • மருத்துவத் துறையில் அதிக அளவிலான பெண்கள் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், அதேவேளை பெண் மருத்துவர் ஒருவருக்கு நேர்ந்த அவலத்தின் விளைவாக இந்த ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகப் பெரியதாக மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கூறலாம்.
  • அத்தியாவசியப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களே பணிப் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தேசிய அளவில் இப்போராட்டம் பேசப்பட்டது.
  • ஆனால், இதற்கு முன்பு இருந்தே விவசாயிகள் தில்லி - ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மருத்துவர்கள் போராட்டத்தின் அளவுக்கு விவசாயிகள் போராட்டம் பேசப்பவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.

இவை மட்டுமா?

  • தில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ்தளத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததில் 3 மாணவர்கள் பலியானதால் நடந்த போராட்டம், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து அல்லாத பிற மதத்தினருக்கு மேற்கு வங்கத்தில் சிகிச்சை அளித்ததற்கு எதிராக நடந்த போராட்டம், சென்னையில் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவரை, மகன் கத்தியால் குத்திய சம்பவத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி, சமீபத்தில், வழக்கறிஞர் தாக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான போராட்டம், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அமித் ஷாவுக்கு எதிரான போராட்டம் என வரிசைகட்டலாம்.
  • போராட்டங்கள் எல்லாம் ஒரு முடிவை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், பல போராட்டங்கள் முடிவு முழுதாகக் கிடைக்கும் முன்பே (தற்காலிகத் தீர்வால்) நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. இதில், முக்கியமானதாக இந்த ஆண்டின் கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தைக் கூறலாம்.

பெண் மருத்துவர் கொலை

  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவமனையிலுள்ள கருத்தரங்கு கூடத்திலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
  • இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் காவல்துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். சாதாரண நபரால் மருத்துவமனை வளாகத்திலேயே எப்படி இத்தகைய கொடூரச் செயலை செய்ய முடியும்? என்று சக மருத்துவர்கள் எழுப்பிய கேள்வி, அம்மருத்துவமனை முதல்வர் (அப்போதைய முதல்வர்) சந்தீப் கோஷையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு காவல் துறையிடமிருந்து சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது.
  • ஆனால், சந்தீப் கோஷ் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டது, வேறு காரணத்துக்காக. மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் பணம் பெற்றதாக எழுந்த புகாரில்தான் ஆரம்பத்தில் கைதானார். அதற்கு பின்னர் நடந்த படிப்படியான விசாரணைகளின் பின்னரே, பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தீப் கோஷ் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • கொலையான பெண் மருத்துவரின் உடலை, மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு செல்ல சந்தீப் கோஷ் உத்தரவிட்டது; பலியான பெண் மருத்துவரை, அவரது பெற்றோர் காண வந்தபோது, அவர்களை சந்திக்காதது, கொலை நடந்த கருத்தரங்குக் கூடத்தில் தடயங்களை அழிக்கும் வகையில் வெளியாள்களை நுழைய அனுமதித்தது முதலான காரணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டது. இவை அனைத்துக்கும் உடந்தையாக இருந்ததாக தாலா காவல்நிலைய அதிகாரி அபிஜித் மண்டலும் கைது செய்யப்பட்டார்.
  • இந்த நடவடிக்கைகள் அடுத்தடுத்து நடந்ததற்கு காரணம் மருத்துவர்களின் போராட்டம் தீவிரமாக இருந்ததுதான்.
  • பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மட்டுமின்றி, மேற்கு வங்கத்தில் செயல்பட்ட பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசைக் கண்டித்து அக். 5 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இளநிலை மருத்துவர்கள் தொடங்கினர்.
  • சம்பவம் நடந்து சரியாக இரு மாதங்கள் கழித்து, அக். 8 ஆம் தேதி, கொலை நடந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேர் கூட்டாக ராஜிநாமா செய்தனர். இது மருத்துவர்கள் போராட்டத்தின் தீவிரத்தை அடுத்தக்ட்டத்திற்கு எடுத்துச்சென்றது.
  • இதற்கு அடுத்த நாள், அக். 9 ஆம் தேதி மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது அகில இந்திய மருத்துவ சங்கம்.
  • மருத்துவர்கள் ராஜிநாமா செய்ததால், நிலைமை மோசமடைவதை உணர்ந்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி, மருத்துவர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். அதுவரை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் மட்டுமே முகம் காட்டி வந்தனர். ஆனால், அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் பலன் தரவில்லை.
  • போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை முதல்வர் மமதா பானர்ஜி சந்தித்துப் பேசியதும் தொடர்ந்தது. ஆனால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என வேண்டுவதாக மட்டுமே முதல்வரின் கோரிக்கையாக இருந்தது என்பதே மருத்துவர்கள் கருத்து. அதனால் போராட்டம் தொடர்ந்தது. 16 நாள்கள்வரை மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்தது.

கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையும்

  • உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி வேண்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவமனை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை மருத்துவர்களின் கோரிக்கைகளாக இருந்தன. போராட்டக் குழுவின் மருத்துவப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளின் முழு விவரத்தை பேச்சுவார்த்தையின்போது முதல்வரிடம் முன்வைத்தனர். அக். 21 ஆம் தேதி நடந்த இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் நீடித்தது. இதில், சிலவற்றிற்கு மட்டுமே மமதா செவிசாய்த்தார்.
  • இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தான் 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததை மருத்துவர்களிடம் மமதா குறிப்பிட்டார். உண்ணாவிரதத்தின் தீவிரத்தை தான் உணர்ந்தவர் என்பதை மருத்துவர்களிடம் சுட்டிக்காட்டினார். உண்ணாவிரதத்தின் தீவிரம் தெரிந்ததால்தான், அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.
  • மருத்துவத் தேர்வு முறைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும், மருத்துவமனைகளில் மிரட்டல் கலாசாரம் இருக்காது, காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக மருத்துவர்களிடம் உறுதியளித்தார். இதனால், போராட்டத்தைக் கைவிட்டு பணியில் ஈடுபட மருத்துவர்கள் குழு முடிவு செய்தது.
  • மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தது. சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேட்டுடன் பாலியல் மற்றும் கொலை வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதே சமயம், தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டல் மீதும் வழக்கு பதியப்பட்டது.

முடியாத போராட்டம்

  • மருத்துவர்கள் பணிக்கு திரும்பியதால் மெல்ல மெல்ல கொல்கத்தா மருத்துவமனையில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், மீண்டும் மருத்துவர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
  • அதாவது, கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷ், அபிஜித் மண்டல் ஆகிய இருவர் மீதும் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால், ரூ. 2,000 பிணைப் பத்திரத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவா்களுக்கு சியால்டா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அழைக்கும்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனையும் விதித்தது.
  • நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மண்டல் வெளியே வருவார். ஆனால், நிதி முறைகேடு வழக்கு நிலுவையில் இருப்பதால் சந்தீப் கோஷுக்கு விடுதலை இல்லை. இருந்தாலும் நாடே கேள்வி எழுப்பிய பாலியல் வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது, ஆளும் திரிணமூல் அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்தது.
  • இருவரின் ஜாமீனைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனப் பேரணி நடத்தின. எதிர்க்கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மமதா அரசின் மீது காங்கிரஸ் சந்தேகக் கனைகளைத் தொடுத்தது. மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் மறைமுக புரிதல் இருப்பதாக பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்.
  • இதற்கு முக்கிய காரணம், ஜாமீன் வழங்குவதற்கு 3 நாள்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி வாதிட்டுவந்த சட்டக் குழுவின் மூத்த வழக்குரைஞர் பிருந்தா குரோவர், வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்ததுதான். சட்டக் குழுவுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், வழக்கில் இருந்து விலகுவதாக அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இவர் விலகிய 3வது நாள், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
  • இதோடு நிற்கவில்லை; மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர், வன்கொடுமை செய்யப்படுவதை எதிர்த்துப் போராடியதற்கான ஆதாரம் சம்பவ இடத்தில் இல்லை என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாக பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிபிஐ விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மறுவிசாரணைக்கு உத்தரவிடக்கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர்கள் நாடியுள்ளனர். இந்த வழக்கு 2025 ஜன. 2ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
  • இந்த ஆண்டின் மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக மாறிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து காட்டுகின்றன.
  • எளிய மக்களின் குரலாக நிற்பது நீதித்துறையின் தலையாய கடமை எனப்படுகிறது. வலிமையான பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக எளிய மனிதர்கள் மேற்கொள்ளும் சட்டப் போராட்டம் ஒவ்வொரு ஆண்டும், இல்லை, ஒவ்வொரு நாளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலானவற்றில் முடிவுதான் கிடைத்தபாடாக இல்லை. கிடைக்கும் முடிவுகளும் எளிய மனிதர்கள் பக்கம் இருப்பது அரிதுதான். பலியான 31 வயது பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் 2025 -லும் சட்டப் போராட்டத்தைத் தொடர வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.

நன்றி: தினமணி (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories