TNPSC Thervupettagam

2024 பாஜக வெற்றி நிச்சயமில்லை

January 24 , 2024 216 days 199 0
  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி பாஜகவின் பயணம் தடுத்து நிறுத்த முடியாததாக மாறியிருப்பதாக பாஜகவைத் தொடர்ந்து எதிர்த்து எழுதிவந்த பத்திரிகைகள்கூட கூறத் தொடங்கியுள்ளன. அப்படியா?
  • அவ்வளவு எளிதான காரியம் அல்ல அது. ஏன் என்பதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன.

கோட்டையிலேயே ஓட்டை

  • மீண்டும் ஆட்சிக்கு வர இந்தி பேசும் மாநிலங்களையும் வழக்கமாக அது வெற்றிபெறும் குஜராத், மகாராஷ்டிரம், அசாம் போன்ற மாநிலங்களையும் மட்டுமே பாஜக நம்பியிருக்க முடியாது. வட மாநிலங்களில் எவ்வளவு வெற்றிபெற்றாலும் தென்னிந்திய மாநிலங்களில் அது பெரிய விளைவுகளை பாஜகவுக்கு சாதகமாக ஏற்படுத்தியதில்லை.
  • காங்கிரஸும் அதனுடன் கூட்டு வைத்துள்ள இதர கட்சிகளும், ‘பாஜக தென்னிந்தியக் கட்சி அல்லஎன்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உரத்துப் பேசுகின்றன. வடக்குதெற்கு பேதத்தை அவை தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
  • இந்தச் சூழலில், இந்தி பேசும் மாநிலங்களிலும் பிஹார் இந்த முறை பாஜகவுக்கு பெரிய சவாலான களமாக இருக்கும். தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) புத்துணர்வு பெற்றிருக்கிறது. ‘இந்தியாகூட்டணியின், ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் புறக்கணிக்கிறது பாஜகஎன்ற பிரச்சாரமும், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சமூக நீதியை வழங்க முடியும்என்ற வலியுறுத்தலும், பிற வட மாநிலங்களில் அதிக ஆதரவைப் பெறாவிட்டாலும் பிஹாரில் நிச்சயம் அவற்றுக்குப் பயன் இருக்கும்.
  • பிஹார் மாநிலத்தின் முற்பட்ட சாதியினர் பாஜகவைத் தொடர்ந்து ஆதரித்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இதர சாதியினர் தங்களுடைய ஆதரவை பாஜகவுக்கு எதிராகத் திருப்பி மவுனமாக ஒரு மாற்றத்துக்குக் காரணமாக இருப்பார்கள். 2019 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சியும் நிதீஷ் குமாரும் பாஜகவுடன் இணைந்திருந்தனர், இப்போது அந்த ஆதரவு பாஜகவுக்கு இல்லை.
  • வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக தொண்டர்கள் வேண்டுமென்றே கடுமையாக தாக்கப்பட்டு தேர்தல் வேலையைச் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டார்கள். திரிணமூல் காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகின்றன. இது வாக்காளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஊழலுக்காக தங்களுடைய கட்சித் தலைவர்கள் கைதாவது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களைக் கோபப்பட வைத்திருக்கிறது. எனவே அவர்கள் தேர்தல் வேலையில் மேலும் தீவிரம் காட்டவும் கூடும்.
  • அது மட்டுமின்றி, பாஜகவிலேயே மாநிலத் தலைவர்களுக்குள் மோதலும் உரசல்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. திரிணமூலுக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுவதற்குப் பதிலாக, ஆர்வமின்றியே இரண்டாம் நிலைத் தலைவர்களும் நிர்வாகிகளும் செயல்படுகின்றனர். எனவே பாஜகவின் விருப்பம் நிறைவேறுவது வங்கத்தில் எளிதல்ல.

கூட்டணியின் வலிமை

  • இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களை வலுவான அணியாக மாற்ற முடியாமல் ஒவ்வொரு கட்டத்திலும் தளர்ந்து தொய்வடைந்தாலும் ஒற்றுமையாக இருக்கின்றன. பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்தாக வேண்டிய கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டு அவை ஓரணியில் செயல்பட்டாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • இந்தக் கூட்டணி நிலைக்காது என்றுதான் அரசியல் விமர்சகர்கள் ஆரம்பத்தில் கருதினார்கள். கூட்டணிக்குள் ஒற்றுமையின்மை ஏற்படும் என்று பாஜக எதிர்பார்த்தால் ஏமாற்றம் மிஞ்சும்.

இந்துக்கள் எப்படியும் யோசிக்கலாம்

  • வாக்காளர்களில் இந்துக்கள் எப்போதுமே மத அடிப்படையில் ஒட்டுமொத்தாக வாக்களிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டுவதும் இல்லை.
  • அயோத்தியில் ராமருக்கக் கோவில் கட்டி முடித்து திறப்பு விழாவும் கண்டாயிற்று, இந்துத்துவக் கொள்கை மக்களிடையே பரவிவிட்டது, மோடி அரசின் நல்வாழ்வு திட்டங்களால் மக்கள் திருப்தி அடைந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், பாஜகவுக்கு நாம் போய் வாக்களித்துதான் அது வெல்ல வேண்டுமா என்றும்கூட பாஜக ஆதரவாளர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானோர் நினைக்கலாம். இது பாதிப்பை உண்டாக்கக் கூடும்.

சிறுபான்மையினரின் திரட்சி

  • மோடிக்கு ஆதரவு அதிகரிக்கிறது, மீண்டும் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிற தோற்றம் உருவாவதே சிறுபான்மை மக்கள் இனி காங்கிரஸ் பின்னால் உறுதிபட அணி திரள வழிவகுக்கலாம். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராவிட்டாலும் இந்த நேரத்தில் காங்கிரஸை விட்டு வேறு கட்சிகளை ஆதரித்து வாக்குகளைச் சிதறவிட்டால் அது பாஜகவுக்கே சாதகமாகிவிடும் என்று சிறுபான்மைச் சமூகத்தவர் நிச்சயம் முடிவெடுப்பார்கள்.
  • அந்தந்த மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் வலிமையுடன் இருக்கலாம். ஆனால் அவற்றை ஆதரித்தால் நாடாளுமன்றத்தில் தங்களுடைய வாக்குகளுக்குப் பயன் இருக்காது, எனவே வாக்குகளை வீணாக்காமல் காங்கிரஸுக்கே அளிக்க வேண்டும் என்று சிறுபான்மைச் சமூகத்தவர் ஒட்டுமொத்தமாக முடிவெடுக்கக் கூடும்.

பெரும்பான்மைக் குறி

  • 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அதற்குக் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் உத்திகளில் எதி்ர்க்கட்சி கூட்டணி இறங்கினாலே போதுமானது. அதைக் குறி வைத்து அவை இயங்கும்.
  • இத்தகு சூழலில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக உறுதியாக வென்றுவிடும் என்பதான தோற்றமே பாஜகவுக்கு எதிரானதாக அமையக் கூடும். ஏனென்றால், பாஜகவுக்குள்ளேயே மிதமிஞ்சிய தன்னம்பிக்கைக்கும் மெத்தனத்துக்கும் அது வித்திடலாம்!

நன்றி: அருஞ்சொல் (24 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories