2024 புக்கர் விருது: சமந்தா ஹார்வேயின் ‘ஆர்பிட்டல்’
- புக்கர் விருதின் 55 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாகக் குறும்பட்டியலில் இந்த ஆண்டு ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்பட்டது. ஆறு போட்டியாளர்களில் ஒருவர்தான் ஆண். மற்றவர்களெல்லாம் பெண்கள். அவர்களில் ஒருவர்தான் பிரித்தானிய நாவலாசிரியை சமந்தா ஹார்வே (Samantha Harvey). புக்கர் விருதைப் பெற்றுள்ள ‘சுற்றுப்பாதை’ (Orbital) எனும் நாவலை கரோனா காலத்தில் அவர் எழுதத் தொடங்கியிருக்கிறார். 2023ஆம் ஆண்டு அது வெளிவந்திருக்கிறது.
கால, இடப் பரிமாணங்கள்
- இதை ஒரு குறு நாவல் என்று சொல்லலாம். வெறும் 136 பக்கங்கள் மட்டுமே கொண்டது. கதை நிகழ்கின்ற இடம் ஒரு சர்வதேச விண்வெளி நிலையம். கதை நிகழ்கின்ற கால அளவு 24 மணி நேரம். ஒன்பது மாத ஆய்வுத் திட்டத்தில் ஒரு நாள் நிகழ்வு மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கதை பூமிக்கு மேல் 250 மைல் உயரத்தில், அக்டோபர் மாதம் ஒன்றில் ஒரு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
- மொத்தம் 24 மணி நேரம். 16 சூரியோதயத்தையும் 16 சூரிய அஸ்தமனத்தையும் பார்க்க முடிகிறது. மணிக்கு 17,500 மைல் வேகத்தில் அந்த நிலையம் பூமியைச் சுற்றிச்சுற்றி வருகிறது. அதில் ஆறு ஆய்வாளர்கள் (4 ஆண்கள், 2 பெண்கள்) ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்களில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் இருவரும் இருக்கின்றனர்.
- இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒரு நடனக் குழுபோல் கூட்டாகச் செயல்படுகிறார்கள். ஆண்டன் விண்கலத்தின் இதயம். பியெட்ரொ அதன் மூளை. ரொமான் அதன் கரங்கள். ஷவுன் அதன் ஆத்மா. இட்சீ அதன் மனசாட்சி. நெல் அதன் சுவாசம்.
- ‘இவர்கள் என்ன செய்கிறார்கள்? வேறு எங்கும் போகாமல் ஏன் சுற்றிச்சுற்றி வருகிறார்கள் என்று வேற்றுக் கோள் மனிதர்கள் இவர்களைப் பார்த்துக் கேட்கக்கூடும். பூமி என்பதுதான் அனைத்துக்குமான விடை... பூமி ஒரு தாய். அவள் தன் பிள்ளைகள் திரும்பிவருவதற்குக் காத்திருக்கிறாள். அவர்கள் நிறையக் கதைகளோடு திரும்பிவருவார்கள்... அவர்களது கண்கள் கண்ட காட்சிகளைச் சொல்ல இயலாது’ என இந்த நாவலின் விவரிப்பு சொல்கிறது.
பயணத்தின் நோக்கம்
- விண்வெளிப் பயணத்தினால் மனித உடலில் ஏற்படும் பல்வேறு இயற்கை மாற்றங்களையும், உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் ஆராய்வதுதான் அவர்களுடைய நோக்கமாகும். தசை இழப்புகளை அறிவதற்கு இட்சீயும் நெல்லும் சில சுண்டெலிகளை ஆய்வுசெய்கிறார்கள். வெளிச்சமும் புவியீர்ப்பு விசையும் குறையும்போது செடிகளின் வேர்கள் என்னவாகின்றன என்பதை ஷாவுன் ஆய்வு செய்கிறான்.
- விண்கலத்தில் இருக்கும்போது விண்வெளி ஆய்வாளர்களுக்குப் பூமியில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் நினைவுகள் வந்துவந்து போகின்றன. ஜப்பானிய வீராங்கனை இட்சீ, தன் வயதான தாயார் இறந்துவிட்டதை அறிகிறாள். அவள் முகம் மாறிவிட்டது. அந்தச் செய்தி கிடைத்ததிலிருந்து அவளும் மற்றவர்களும் பூமியைப் பார்த்தனர். அவர்கள் எல்லோர் மனதிலும் ஒரு சொல் இருந்தது.
பூமியின் காட்சிகள்
- இப்படியெல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது விண்வெளி ஆய்வாளர்கள் ஆலோசனை மேற்கொள்வதற்கும் பூமியின் அழகிய காட்சிகளைப் பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கிக் கொள்கிறார்கள். ‘ஒரு கண்டத்தின் ஓரத்தில் வெளிச்சம் மங்கலாகின்றது. மேகக் கூட்டங்களின் நிழல்களாலும் சூரியனின் பிரதிபலிப்பாலும் கடல் தட்டையாகவும் செம்பு நிறத்திலும் இருந்தது.
- ஆசியா கண்டம் வந்துவிட்டுப் போய்விட்டது. ஆஸ்திரேலியா பிளாட்டின நிறத்திற்கு மாறியது. எல்லாமே ஒளியிழந்து கொண்டிருந்தன. சற்றுமுன்தான் பொழுது விடிந்ததால் பூமியின் தொடுவானத்தைக் கிழித்துக்கொண்டு ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டு மறைந்தன. பூமியின் வலுவான ஓரங்களை இருள் தின்றுகொண்டிருந்தது. ஊதா நிறத்தில் இருந்த கோள் தெளிவற்ற நிலைக்குப் போய்க்கொண்டிருந்தது. இதற்கிடையில் பிரம்மாண்டமான சூறாவளி ஒன்று ஃபிலிப்பைன்ஸ் நோக்கி நகர்வதாகச் செய்திவருகிறது’ - இதெல்லாம் அந்த விவரிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
- எடை அற்று, கால மாற்றம் அற்று ஒருவிதக் கனவு உலகில் சஞ்சரிக்கின்ற ஆறு ஆய்வாளர்களும் பூமியோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இதனால் சில அதிசயமான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பதினாறாவது சுற்றில் வரும் செய்தி: மனிதன் எத்தனை மின்னல் தாக்குதல்களைச் சமாளிக்க முடியும் என்கிற சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது தெரியுமா?
- இதுவரை அது ஏழாக இருந்தது. சென்ற வாரம் ஒரு சீனாக்காரர் எட்டுவரை தாங்கி இருக்கிறார். சாதனைகளை முறியடிப்பதற்காக மனிதர்கள் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள்! மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களில் எண்பத்து நான்கு சதவிகிதத்தினர் ஆண்கள்தான் என்கிறது அந்தச் செய்தி.
- இது வெறும் கற்பனையால் எழுதப்பட்ட நாவலல்ல. இதற்குத் தேவையான ஆதாரங்கள் நாஸா (NASA), ஈஸா (European Space Agency) போன்ற நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டவை.
- நாவலில் மனித இனம் குறித்துத் தத்துவச் சிந்தனைகள் எழுகின்றன: இது மனிதர்களாகிய நம்மைச் சுமக்கிறது. இதில் நாம் மேலும் மேலும் பெரிய தொலைநோக்குக் கண்ணாடிகளைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறோம். வியந்து உற்றுநோக்குகிறோம். அப்படி நோக்கும்போது என்ன தெரிகிறது? நாமெல்லாம் ஏதோ ஓர் ஓரங்கட்டப்பட்ட இடத்தில் இருக்கிறோம். பிரபஞ்சத்தில் மையம் எதுவுமில்லை. எல்லாம் ஒரு தறிகெட்ட சுழற்சியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
- இதுபோன்ற சிறப்புகள் இருப்பினும், இலக்கியத் திறனாய்வாளர்கள் இதனை ஒரு நாவல் என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். இடம், காலம், பேசுபொருள் எல்லாம் வரையறுக்கப்பட்டிருந்தாலும் இதில் வரும் கதாபாத்திரங்களின் தனித்தன்மை வரையறுக்கப்படவில்லை.
- கடைசியில், 136ஆம் பக்கத்தில் திடீரென இருபத்து நான்கு மணி நேரம் முடிகிறது. பதினாறாவது சுற்றும் முடிகிறது. கதையும் முடிகிறது. இருப்பினும் வாசகர்கள் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. புக்கர் விருது பெறுவதற்கு முன்னரே இந்த நாவலின் விற்பனை அமோகமாக இருந்திருக்கிறது. இந்த நாவல் இங்கிலாந்தில் இதற்கு முன் புக்கர் விருது பெற்ற நாவல்களின் விற்பனையைவிட மூன்று மடங்கு அதிகம் விற்பனையாகி இருந்ததென்று சொல்லப்படுகிறது.
- எப்படி இருப்பினும் அறிவியல் அடிப்படையில் பூமியின் வேறொரு அழகான முகத்தை எடுத்துக் காட்டியிருப்பது வாசகர்களுக்கு ஓர் அற்புதமான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 11 – 2024)