TNPSC Thervupettagam

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

December 31 , 2024 5 days 40 0

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

  • உலகம் முழுவதும் ‘தேர்தல்களின் ஆண்டு’ அழைக்கப்பட்ட நிகழாண்டில் இந்தியா மட்டுமின்றி, எங்கெங்கு காணினும் பிரசாரங்களும் பேரணிகளும் அணி வகுத்திருந்தன என்று கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள்.
  • இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஏற்பட்ட பலமுனைப் போட்டிகள் என ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்த பரபரப்பும் பதற்றமும் இறுதி வரை ஓய்ந்தபாடில்லை.

பாஜக ஆதிக்கத்தில் அருணாச்சல்

  • அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து ஜூன் 4 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அருணாச்சலம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
  • அதில், கூடுதலாக 36 இடங்களில் வென்றது உள்பட மொத்தம் 46 இடங்களில் வென்ற பெமா காண்டு தலைமையிலான பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள், 59 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் அருணாச்சலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டன. 19 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ் 5.56 சதவீத வாக்குகள் மட்டும் பெற்று மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

சிக்கிமிடம் சிக்கிய தேசிய கட்சிகள்

  • சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. ரெனாக், சோரெங் இரு தொகுதிகளிலும் சிக்கிம் முதல்வரும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவருமான பிரேம் சிங் தமாங் அபார வெற்றிபெற்றார். அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய் நாம்ச்சி - சிங்கிதாங் தொகுதியில் வென்று மறுநாளே பதவியை ராஜிநாமா செய்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
  • இதனால், நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரேம் சிங் தமாங்கின் மகன் ஆதித்யா கோலே வெற்றிபெற்று அசத்தினார்.
  • சிக்கிமின் முன்னாள் முதல்வரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சித் தலைவருமான பவன்குமார் சாம்லிங், போக்லோக் கம்ராங் மற்றும் நாம்செய்பங் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
  • 1994 முதல் 2019 வரை 25 ஆண்டுகள் முதல்வராகவும், 39 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும் இருந்த பவன்குமார் சாம்லிங்கிக்கு இது பெருத்த இடியாகவே அமைந்தது.
  • முன்னாள் முதல்வருக்கு மட்டுமல்ல இந்த நிலைமை நாட்டை ஆளும், ஏற்கனவே ஆண்ட தேசிய கட்சிகளும் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங்கின் வலையில் சிக்கிச் சின்னாபின்னமாகின.
  • இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நோட்டாவைவிடவும் குறைவான வாக்குகளையே பெற்றது. காங்கிரஸ் மட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜக, தான் போட்டியிட்ட 31 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பெரும்பாலான வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.

ஜெகனுக்கு ‘டாடா’ காட்டிய ஆந்திரம்

  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கியதில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் , ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம்போய், நீங்கள் ‘ஒரு கிங்மேக்கராக’ மாறப் போகிறீர்கள் என்று யாராவது கூறியிருந்தால் அவரேகூட அதை மறுத்திருப்பார்.
  • சந்திரபாபு நாயுடுவின் கைது அவருக்கு மீண்டும் முதல்வர் பதவியைப் பெற்றுக்கொடுத்தது என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள். அவரின் கைதைக் கண்டித்து ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அவருக்கு ஆதரவாக அப்போது ஜனசேனை தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் களத்தில் குதித்தார்.
  • சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சென்ற ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பவன் கல்யாண் விஜயவாடா சென்றால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறையினர் அளித்த கடிதத்தை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனுமஞ்சிப்பள்ளியில் பவன் கல்யாணின் வாகனங்கள் மீண்டும் நிறுத்தப்பட்டன.
  • மங்களகிரிக்கு நடந்து செல்ல முடிவு செய்த பவன் கல்யாணை காவல்துறையினர் தடுத்ததால், அவரும் அவரது ஆதரவாளர்களும் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • அப்போது பவன் கல்யாண் கூறிய “டாடா.. ஜெகன்..!” என்ற வசனம் மிகவும் பிரபலமானது. மேலும், ஜெகன் மோகன் ரெட்டி மீதான வெறுப்பு, ஆந்திரத்தில் போதிய வேலைவாய்ப்பின்மை போன்றவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்க முதன்மைக் காரணங்களாக அமைந்தன.
  • இதன் தொடர்ச்சியாக, மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்ட வாக்குப் பதிவுடன் ஆந்திரப் பிரதேசத்துக்கு பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டது.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனை, பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில், பேரவைக்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135, கூட்டணி கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 8 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆட்சியிலிருந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி, வெறும் 11 இடங்களை மட்டுமே பெற்றுப் படுதோல்வியைச் சந்தித்தது.
  • 1995 முதல் 2004 வரை அவர் முதல்வராக பதவி வகித்த சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வர் அரியணையைப் பிடித்ததுடன், பவன் கல்யாணுக்குத் துணை முதல்வர் பதவியும் கிடைத்தது.
  • மக்களவைக்கான 25 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 16, கூட்டணி கட்சிகளான ஜனசேனை 2, பாஜக 3 இடங்களிலும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 4 இடங்களிலும் வெற்றிபெற்றன.
  • மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகவே கூட்டணிக் கட்சிகளை நம்பியே ஆட்சியை அமைத்திருக்கிறது; சந்திரபாபு நாயுடுவின் பங்கு அதிகமாகவே இருக்கிறது.

ஒடிசாவில் மலர்ந்த தாமரை!

  • ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 பேரவைத் தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக (மே 13, 20, 25, ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • இந்தப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே தீருவோம்.. என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்த பாஜக மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் கலந்துகொண்ட பிரசாரத்தில் ‘மண்ணின் மகன்தான் உங்களை ஆளப் போகிறார்’ எனக் கூறி வாக்கு சேகரித்தனர்.
  • தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று பாஜக நினைத்திருந்தாலும், முதல்வர் வேட்பாளர் யாரையும் முன்னதாக அறிவிக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்த நவீன் பட்நாயக்தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
  • நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், ஓய்வுபெற்ற ஆட்சியரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான விகே. பாண்டியன் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் [நவீன் பட்நாயக் தோல்வி அடைந்ததும் விகே. பாண்டியன் முழு நேர அரசியலில் இருந்து விலகியது வேறொரு கதை!].
  • இதனையே ஒரு ஆயுதமாக பயன்படுத்திய பாஜக அங்கு மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
  • பாஜக வெற்றி..! ஆனால், யார் முதல்வராக தேர்தெடுக்கப்படுவார் என்ற பரபரப்புடன் ஒருவாரம் கழித்து முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டது. அவர் கியோஞ்சா் தொகுதி எம்எல்ஏவும், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவருமான மோகன் சரண் மாஜீ.
  • இதுபற்றி மாஜீ மனைவி அவரது மனைவி பிரியங்கா, “எனது கணவர் முதல்வராவார் என கடைசி நிமிடம் வரை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தோம்” என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமே!
  • 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு அப்போதிருந்தே அரசு குடியிருப்பு எதுவும் இல்லை, சொந்த வீட்டிலேயே ஆட்சி நடத்தி வந்தார். இதனால், பாஜகவின் புதிய முதல்வருக்காக அதிகாரிகள் அரசு குடியிருப்பை தேடியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜார்க்கண்ட்

  • ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜனவரி 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்கட்சியில் ஏற்பட்ட எதிர்ப்பால் ஹேமந்த் சோரனின் உறவினரும், ஜேகேஎம் கட்சியின் விசுவாசியுமான சம்பயி சோரன் முதல்வராக பதவியேற்றார்.
  • பின்னர் ஜூன் 28 ஆம் தேதி விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க, பதவிபோன விரக்தியில் கட்சியில் இருந்து விலகிய சம்பயி பாஜகவில் இணைந்தார்.
  • பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், உள்ளடக்கிய கூட்டணி, 81 தொகுதிகளில் 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
  • பாஜக சார்பில் முதல்வராகிவிடுவோம் என்ற கணிப்பில் களமிறங்கிய சம்பயி சோரன் தலைமையிலான பாஜக, ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் (1 தொகுதியில் மட்டும் வெற்றி) கூட்டணியுடன் வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
  • ஹேமந்த் சோரனின் வெற்றிக்கு ஜெய்ராம் மஹதோவின் பங்கும் அளப்பரியது என்ற கூற வேண்டும்.

யார் இந்த ஜெய்ராம் மஹதோ?... கேள்விப்பட்டதே இல்லையே..!

  • ஹேமந்த் சோரனை போட்டியாகப் பார்த்த பாஜக, வெறும் 29 வயதான சின்னப் பையன் நமக்கு கடும் நெருக்கடியாக இருப்பான் என்று கனவிலும் நினைத்திருக்காது.
  • ஆம்.. ஜார்க்கண்ட் லோக் தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி தலைவரும், ஜார்க்கண்ட் புலி என்று அழைக்கப்படுபவருமான ஜெய்ராம் மஹதோ 71 தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை களத்தில் இறக்கினார்.
  • அதில், அவர் போட்டியிட்ட டும்ரி தொகுதி ஒன்றில் மட்டும் வெற்றிபெற்றாலும், மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது அவரது கட்சி.
  • பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்க்கண்ட்டில், குறிப்பாக தன்பாத், கிரிதி, ராம்கர், ராஞ்சி மற்றும் பொகாரோ போன்ற குர்மி சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜகவின் அரசியல் ஆதிக்கத்தை சீர்குலைத்தது ஜெய்ராம் மஹதோவின் கட்சி.
  • இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளைப் பிரித்து ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் ஆசையில் மண்ணைப் போட்டுவிட்டனர்.
  • 70 பேரவைத் தொகுதிகளை இழந்தாலும், முடிவில் 10-12% வாக்காளர்களைக் கொண்ட குர்மி சமூகம், ஜெய்ராமுக்கு ஓட்டு அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மகாயுதியின் பிடியில் மகராஷ்டிரம்

  • 2019 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பல்வேறு சிக்கல்கள் ஆட்சி, அதிகார மோதல், கூட்டணித் தாவல்கள் பல குளறுபடிகளை ஏற்படுத்தியது. முதல்வராக பதவியேற்ற மூன்று நாள்களில் ராஜிநாமா என ஃபட்னவீஸ் பல சறுக்கல்களைச் சந்தித்தார். போதிய எம்எல்ஏக்கள் ஆதரவில்லாததால் துணை முதல்வராக பொறுப்பேற்க ஃபட்னவீஸ் அறிவுறுத்தப்பட்டாா்.
  • இருப்பினும், 5 ஆண்டுகள் பொறுமை காத்த ஃபட்னவீஸ் தனிப் பெரும்பான்மையுடன் முதல்வர் அரியணையைப் பிடித்தர். 288 தொகுதிகளில் 132 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
  • பாஜக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை- துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி 231 இடங்களைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சியான மகாவிகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே வென்றது. பாஜகவுக்கு அடுத்து சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றன.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

  • அஜீத் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் கடைசி நேரத்தில் கூட்டணி மாறுவார்களாக என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ. 1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்தது யாரும் எதிர்பாராதது.

ஹரியாணாவில் ‘ஹாட்ரிக்’ அடித்த பாஜக!

  • தலா 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் பேரவைகளில் ஹரியாணாவில் ஒரே கட்டமாகவும், ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும் தோ்தல்கள் நடத்தப்பட்டன.
  • ஹரியாணாவில் ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆஸாத் சமாஜ் கட்சி கூட்டணி, ஆம் ஆத்மி என பலமுனைப் போட்டி நிலவியது.
  • தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றே அனைவரும் ஆருடம் கூறினர்.
  • இதற்கு வேளாண் திட்டங்கள், அக்னிபத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பக் கொண்டுவருதல், வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையும் முதன்மை காரணமாக பார்க்கப்பட்டது.
  • ஏன்.. ரூ.15,000 சம்பளத்துக்காக குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்ததும் அதற்கு ஓர் சான்று!.
  • [இதற்கிடையேதான், அரசியலும் ஆக்டிங் போலதான் என்று ஒரு டிரையல் பார்த்து, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராகவும் கருத்துக் கூறிய மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யான கங்கனாவுக்கு கன்னத்திலேயே ஒன்று விழுந்தது!].
  • முன்னாள் முதல்வரான பூபேந்தர் ஹுட்டா, முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான குமாரி ஷெல்ஜா இருவருக்கும் இடையேயான உள்கட்சி மோதல், தொகுதி பிரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவை காங்கிரஸின் கனவுகள் கை நழுவிப் போகின. மேலும், ஹரியாணாவில் போட்டியிட்ட இதர கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் காங்கிரஸ் வாக்குகளை பிரிப்பவர்களாகவே இருந்தனர்.
  • ஹரியாணா முடிவுகளில் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுமார் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் வெற்றி கைநழுவி போனது சோகத்தின் உச்சம்!
  • ஒருவேளை ஆம் ஆத்மி - காங்கிரஸுடன் கைகோத்து நின்றிருந்தால் ஆட்சியைப் பிடித்திருந்திருக்கலாம்.
  • ஜாட் உள்ளிட்ட உயர்குடி மக்களுடன் சேர்த்து இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் தன்பக்கம் இழுத்த பாஜக 48 இடங்களுடன் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைத் தக்கவைத்தது.
  • காங்கிரஸ் 37 இடங்களுடன் 2-வது இடமும் பெற்றது. சுயேச்சை வேட்பாளா்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனா்.
  • இந்தியா கூட்டணியில் இருந்து விலகி தனியாக 90 இடங்களிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மியால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது சோகங்கள்!
  • பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 100 கிராம் எடையில் பதக்கத்தை தவறவிட்ட வினேஷ் போகத், தான் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதன்பின்னர் காங்கிரஸில் இணைந்த அவர், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஜூலானா தொகுதியில் வெற்றிபெற்று, விளையாட்டு மட்டுமல்ல அரசியலிலும் சாதிக்கமுடியும் என்று நிரூபித்து காட்டினார்.

பாஜகவுக்கு வெற்றிகரமான தோல்வி!

  • ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட பேரவைத் தோ்தல் என்பதாலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகான முதல் பேரவைத் தோ்தல் என்பதாலும் அதன் முடிவுகள் குறித்து பெரும் எதிா்பாா்ப்பு நிலவியது.
  • காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டிருந்தன. பலமுனை பிரசாரங்கள் மேற்கொண்டு பல்வேறு வியூகங்களை வகுத்த பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.
  • பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது.
  • காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைவிடக் குறைந்தது.
  • பாஜகவை பொறுத்தவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் தோல்வியை சந்தித்தாலும், ஜம்மு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. பாஜக 43 தொகுதிகளில் 29-லும், தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இருப்பினும் வாக்கு சதவீத அடிப்படையில் மொத்தமாக பாஜக 25%, தேசிய மாநாடு கட்சி 23% பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டில்!

  • 2024 ஆம் ஆண்டு முழுவதுமே நடந்த தேர்தல்களின் அதிர்வுகளுடன் 2025 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்துவைக்க உள்ளோம். ஆண்டுத் தொடக்கத்தில் தில்லியிலும், இறுதியில் பிகாரிலும் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.
  • தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, இந்தியா கூட்டணிக்கு ‘டாடா’ காட்டிவிட்டு தில்லி முன்னாள் முதல்வர் கேஜரிவால், வரிசையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆரம்பித்து ஒரு முன்னோட்டத்தை காட்டியிருக்கிறார்.
  • யாராக இருந்தாலும் நேருக்கு நேர் மோதிப் பார்த்து விடுவோம் என பாஜக, காங்கிரஸ் இரு கட்சியினரும் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
  • எப்படியும் 2025 ஆம் ஆண்டு தேர்தல் களத்திலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது!

நன்றி: தினமணி (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories