TNPSC Thervupettagam

2024 மக்களவைத் தேர்தல் மிக நீண்டது என நினைத்திருந்தால் தவறு!

May 28 , 2024 229 days 219 0
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனும் பெயர் பெற்ற இந்தியாவில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இது நாட்டிலேயே அதிக நாள்கள் நடைபெற்ற இரண்டாவது மக்களவைத் தேர்தலாகும்.
  • ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில் சுமார் 100 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். கிட்டத்தட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வெளியாக 44 நாள்கள் உள்ளன. பலரும். நாட்டிலேயே இவ்வளவு நீண்ட நாள்கள் மக்களவைத் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. இதுதான் இரண்டாவது மிக நீண்ட தேர்தல் காலம் என்பதுதான் உண்மை.
  • கடந்த 1951 - 52ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதுபோல கடந்த 1980ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலக்கட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 4 நாள்களில்.

மக்களவைத் தேர்தல்

  • இந்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல், சரியாக அறிவிப்பு வெளியாகி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை கணக்கிட்டால் 82 நாள்கள்.
  • ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே மாதத்தில் 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே உள்ளது. ஏன் இந்த முறை இத்தனை நாள்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது?
  • அதாவது, நாட்டிலேயே மிக அதிகமானோர் வாக்களிக்கும் தேர்தலாக இது அமைந்திருப்பதால், வாக்குப்பதிவுக்குத்தேவையான கருவிகள் அனைத்து மற்றும் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் திட்டம் போன்றவைதான் இத்தனை நாள்களுக்கு தேர்தல் நடத்தப்பட காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் காலநிலை, அரசு விடுமுறை, முக்கிய திருவிழா, தேர்வுகள் என அனைத்துக் காரணிகளையும் ஆராய்ந்தபிறகே தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டன என்கிறார்.
  • ஏழு கட்டங்களாக பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் தெரிந்துவிடும். இது நாட்டின் மிக நீண்ட தேர்தல் என்றால், முதல் தேர்தல் எத்தனை நாள்கள் நடந்திருக்கும்?
  • நாட்டின் மிக நீண்ட தேர்தல் 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை நடந்துள்ளது. 25 மாநிலங்களில் உள்ள 401 தொகுதிகளுக்கு, 489 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்துள்ளது.

ஒரு விரல் புரட்சி

  • தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளைக் காட்டிலும், அப்போது நடந்த தேர்தல் மிகவும் வேறுபட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளில் 314 தொகுதிகளுக்கு தலா ஒரு உறுப்பினரும், மற்ற 86 தொகுதிகளுக்கு தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் பொதுப் பிரிவிலும், மற்றொருவர் பட்டியலினத்தவராகவும் இருப்பார். ஒரே ஒரு தொகுதியிலிருந்து மூன்று உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிறது பிடிஐ தகவல்கள்.
  • இதுபோன்ற காரணத்தால், வாக்குப்பதிவுக்குத் தேவையான கருவிகள் உள்ளிட்டவை மற்றும் தேர்தல் நடத்துவதிலிருக்கும் சிக்கல்கள் காரணமாக அந்த காலத்தில் 68 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு ஹிமாசலில் வாக்குப்பதிவு நடந்துள்ளது, பிப்ரவரி மாதத்தில் இங்கு மோசமான வானிலை இருக்கும் என்பதால், முதலில் இங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
  • ஜம்மு - காஷ்மீர் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு 1952ல் பிப்ரவரி - மார்ச் வரை நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்-மீரில் 1967 வரை மக்களவைத் தேர்தல் நடத்தப்படவில்லை.
  • அதேவேளையில், இந்த நாள்கள் 1962 - 89ஆம் ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் வெறும் 4 முதல் 10 நாள்களுக்குள் தேர்தல் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை வெறும் நான்கு நாள்களில் தேர்தல் நடத்தப்பட்டு, இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
  • கடந்த 2004ஆம் ஆண்டில் நான்கு கட்டங்களாக கடந்த தேர்தல் 21 நாள்களிலும், 2009ஆம் ஆண்டு ஒரு மாதத்துக்கும் மேலாக 5 கட்டங்களாகவும், 2014ஆம் ஆண்டு 9 ஒட்டங்களாக நடத்தப்பட்டாலும் 36 நாள்களிலும் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு தேர்தல் 7 கட்டங்களாக 43 நாள்களில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி (28 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories