2024 - பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும்
- புலரும் பொழுதுகள் எல்லாம் பெண்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்துகிறபோதுதான் அது அனைவருக்குமான விடியலாக இருக்கும். அப்படியொரு நாளை நோக்கிய பயணத்தில் 2024 இல் பெண்கள் சந்தித்தவையும் சாதித்தவையும் அதிகம். அவற்றில் சில இவை:
நீதி வென்றது:
- குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002இல் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது பில்கிஸ் பானு என்கிற 19 வயதுப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து 2024 ஜனவரி 8 அன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு குஜராத் அரசு முடிவெடுத்தது சட்டத்துக்குப் புறம்பானது என நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் பூயான் அமர்வு தெரிவித்தது.
குற்றத்துக்குத் தண்டனை:
- தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது தமிழகத்தின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் 2021 பிப்ரவரியில் புகார் அளித்தார். இந்த வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி எனக் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிப்ரவரி 12, 2024 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.
சமத்துவ ஒலிம்பிக்:
- பெண்களுக்கு இடமே இல்லாத முதல் ஒலிம்பிக்கில் தொடங்கி 2024இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பங்கேற்கும் நிலையை ஒலிம்பிக் போட்டிகள் எட்டியிருப்பது பாலினச் சமத்துவத்தை நோக்கிய பயணத்தின் முக்கியமான மைல்கல். #Genderequalolympic என்கிற ஹேஷ்டேகுடன் இந்தப் போட்டியைச் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.
பெண்கள் முன்னிலை:
- கேரளம், தெலங்கானா, ஹரியாணா, அசாம் உள்ளிட்ட 26 இந்திய மாநிலங்களில் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளில் ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என உயர்கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பு (2021-2022) முடிவுகள் தெரிவித்தன. கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர் - மாணவர் விகிதம் போன்றவை இதைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
பெண்கள் ஸ்பெஷல்!
- சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்தது பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதோடு, பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படச் சாத்தியமுள்ள கர்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘கால்சென்டர்கள்’ அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
திருநருக்கு உயர்கல்வி:
- திருநர் சமூகத்தினரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் எனத் தமிழக அரசு அறிவித்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிப்பதற்காகத் தமிழகத்தின் முக்கியமான ‘சிப்காட்’ வளாகங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் தனியார் உதவியோடு அமைக்கப்பட விருப்பதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது.
கவனம் ஈர்த்த 4பி இயக்கம்:
- பெண் வெறுப்புக்கு எதிராக 2019இல் ‘4பி’ இயக்கம் தென்கொரியாவில் உருவானது. காதல், திருமணம், குழந்தை, உடலுறவு ஆகிய நான்குக்கும் பெண்கள் தயாராக இல்லை என்பதே ‘4பி’ (4 B - No to biyeonae, bihon, bisekseu, bichulsan) இயக்கத்தின் அடிப்படை. ‘4பி’ இயக்கம் தென் கொரியப் பெண்களின் உரிமைக் குரலாக மாறியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்வியைத் தொடர்ந்து, ஒரு பெண்ணை அதிபராக ஏற்க மறுக்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிராக அமெரிக்காவிலும் ‘4பி’ இயக்கம் பரவியது.
பாடம் சொன்ன படங்கள்:
- 2024 மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பிறகு ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ (தொலைந்துபோன பெண்கள்) திரைப்படம், பெண்களின் லட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் குடும்ப அமைப்பும் சமூகமும் எந்த அளவுக்கு மதிப்பளிக்கின்றன என்பதைத் தொட்டுச்சென்றது.
- மறதி நோயால் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அன்றாட வேலைகளை மறக்கத் தொடங்கும் 42 வயதுப் பெண்ணைப் பற்றிய ‘Three of us’ இந்திப் படம், பெண்ணின் அக உணர்வைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியது.
- ‘ஆண்கள் எல்லாரும் உத்தமர்தானா?’ என்கிற கேள்வியின் விரிவுதான் ‘ஆட்டம்’ மலையாளத் திரைப்படம். 12 ஆண்கள் கொண்ட நாடக் குழு தனக்குப் பாதுகாப்பான ஓர் இடம் என்று நினைக்கிற பெண்ணின் நம்பிக்கை ஓர் இரவில் தகர்ந்துபோகிறது. அந்தக் குழுவினர் அதைக் கையாளும் விதத்தில் ஆண் மனதின் முகமூடிகள் விலகுகின்றன.
கேள்விக்குள்ளான பாதுகாப்பு:
- மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 31 வயது மருத்துவர் ஒருவர் 2024 ஆகஸ்ட் 9 அன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களின் பணியிடப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது.
- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் சீண்டல், உத்தராகண்டைச் சேர்ந்த செவிலி ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது போன்றவையும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 வயது மாணவி ஒருவர் போலி என்.சி.சி. பயிற்சியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதும் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மூன்று சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதும் குழந்தைகளின் பாதுகாப்பில் நாம் எந்த அளவுக்கு அசட்டையாக இருக்கிறோம் என்பதைக் காட்டின.
மாதவிடாய் விடுப்பு சர்ச்சை:
- பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கக் கோரிய பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 12 – 2024)