- காலநிலை மாற்றம் தொடர்பாக கிளாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் (COP26) நிகர பூஜ்ஜிய மாசுபாட்டை 2070-க்குள் எட்டும் என்று இந்தியா உறுதியளித்தது. வளரும் நாடான இந்தியாவின் முடிவை உலக நாடுகள் பாராட்டின. இருப்பினும், உறுதியளித்த இலக்கை அடைவதற்கு அரசின் திட்டம் என்ன என்கிற கேள்விக்கு விடை தேடுவது அவசியமாகிறது.
- மக்கள்தொகை வளர்ச்சி, தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. இதன் விளைவாக, சுற்றுச்சூழல் மேலாண்மை குறியீட்டில் (2022) உலக அளவில் இந்தியா 169 இடத்தில் பின்தங்கியுள்ளது.
- உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, ஜி20 அமைப்பு நாடுகளில் உள்ள 20 மிகவும் மாசுபட்ட நகரங்களில், 13 நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெப்ப அலைகள், வெள்ளம், சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள், 321 நாள்களுக்கு இந்தியாவைக் கடுமையாக தாக்கியுள்ளன. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக நடப்பாண்டில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது. மேலும், உலகின் மூன்றாவது அதிக எரிசக்தியைப் பயன்படுத்தும் நாடாக 2030இல் இந்தியா உருவெடுக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
- கடந்த ஆண்டில், இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவையில் பெரும்பகுதி புதுப்பிக்க முடியாத (Non-Renewable) ஆற்றலால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது (88.46%). புதுப்பிக்கத்தக்க (Renewable) ஆற்றலின் பங்களிப்பு வெறும் 11.54 சதவீதம் மட்டுமே. மின் நுகர்வை எடுத்துக் கொண்டால், 1837.95TWh நுகர்வில், பெரும்பகுதி (1457.08TWh) புதுப்பிக்க முடியாத ஆற்றலில் இருந்தும் (79.3%), 380TWh புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்தும் (20.7%) பெறப் பட்டுள்ளது. இதன் விளைவாக, கார்பன் உமிழ்வு 2709.68 மில்லியன் டன் என்றும், இதன் மூலங்களாக நிலக்கரி (66.5%), பெட்ரோலிய எரிபொருள் (23%), பிற ஆதாரங்கள் (10.5%) உள்ளன.
- இந்தியாவில் நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருள் பயன்பாடு மட்டுமே 90% மாசுபாட்டிற்கு காரணமாகிறது. ஆகவே, மக்களின் பங்களிப்பைக் கொண்டு சூரிய மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது, மின் வாகனங்களின் மூலமாக எரிபொருளின் தேவையை எவ்வாறு குறைப்பது என்கிற திட்டமிடல் காலத்தின் தேவையாகிறது.
சூரிய மின்சக்தி
- சூரிய மின் ஆற்றல் வசதியை அமைப்பதற்கு ரூ.14,588 (1கி.வா.) முதல் ரூ.98,822 (10கி.வா.) வரை அரசு மானியமாக வழங்குகிறது. ஆனால், கடந்த ஆண்டில் புதுப்பிக்கத் தக்க மூலங்களில் பெறப்பட்ட 380.87 TWh ஆற்றலில், சூரிய மின்சக்தியின் பங்கு வெறும் 95.16TWh மட்டுமே (24.9%).
- சூரிய மின்சக்தி சாதனங்களுக்கு மானியம் வழங்கப்பட்ட போதிலும், மக்கள் ஏற்கத் தயங்குகின்றனர். இதற்கு, சூரிய மின்சக்தி சாதனத்தின் விலையே காரணம். சீனா 80 சதவீத சூரிய மின்சாதன உதிரிபாகங்களை உற்பத்தி செய்கின்றது. மாறாக, உதிரிபாகங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் பட்சத்தில், அதன் விலை கணிசமாக குறையக்கூடும். அதே வேளை, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை 2030-க்குள் உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
- இந்தியா, புதுப்பிக்க முடியாத ஆற்றலுக்கு ரூ.18,58,779 கோடி மானியமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ரூ.85,532 கோடியும் அளித்துள்ளது (2014-2022). இந்நிலையை முற்றிலுமாக மாற்றி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக மானியம் வழங்குவதன் மூலம், சூரிய மின்சக்தியை அதிகரிக்க முடியும்.
- குறைந்த - நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு மானியத்தை அதிகரிக்க வேண்டும். அதே வேளை, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு அவர்களின் மொத்த வருமானத்தில் நேரடி வரிவிலக்கு மட்டும் அளிக்க வேண்டும். இந்தியாவில் தனிநபர் மின் நுகர்வு 1,255 கி.வா. (2022). இவற்றை அடிப்படையாகக் கொண்டு, 1,255 கி.வா.-க்கு மிகையாக மின்சாரம் உயோகிப்பவர்களுக்கு, மூன்று ஆண்டு கால அவகாசத்தில் சூரிய மின்சக்திக்கு மாற அறிவுறுத்த வேண்டும்.
மின் வாகனங்கள்
- இந்தியாவில் 21 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், ஏழு கோடி நான்கு சக்கர வாகனங்களும் உள்ளன (2022). கடந்த 10 ஆண்டுகளில், புதிய வாகனங்களின் எண்ணிக்கை 1,14,951-ல் இருந்து 3,26,299-ஆக அதிகரித்துள்ளது. போக்குவரத்து மூலம் வெளியாகிற கார்பன் உமிழ்வு 312 முதல் 603 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது (2000-2022).
- மின் இருசக்கர வாகனங்களுக்கு நேரடியாக ரூ.15,000 மானியமும் (1 கி.வா.), மூன்று/நான்கு சக்கர வாகனங்களின் திறனுக்கு ஏற்ப ரூ.10,000 முதல் 1.5 லட்சம் வரை மானியமும் அரசு வழங்குகிறது. குறைந்த மின்சார திறன் கொண்ட 250 வாட் வாகனங்களுக்கு, சாலை வரி பதிவுச் செலவுகளை அரசு ரத்துசெய்துள்ளது.
- இருப்பினும், மின் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 5,44,643 ஆகவும், மூன்று/நான்கு வாகனங்கள் 54,252 ஆகவும் உள்ளது. இது மொத்த வாகன சதவீதத்தில் முறையே 0.26%, 0.07% மட்டுமே. மின் வாகனங்களின் விலை, பேட்டரி திறன், பழுது நீக்கும் வசதி போன்ற காரணங்களால் மின் வாகனங்களை மக்கள் பயன்படுத்தத் தயங்குகின்றனர்.
- மின் வாகனத்தின் விலை, எரிபொருள் வாகனங்களைவிட இரண்டு மடங்கு அதிகம். மின் வாகனத்தின் மொத்த விலையில், பேட்டரி விலை மட்டும் 50 சதவீதம். ஆகவே, பேட்டரி உற்பத்தி செலவினைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். உள்நாட்டில் பேட்டரி உற்பத்திக்கான செயல்திறன், உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி, மின் வாகனங்களின் விலையைக்குறைத்தால் மட்டுமே மக்களின் நம்பிக்கையை பெறமுடியும்.
- மின் வாகனங்கள் குறைந்த செலவில் இயங்கக்கூடியவை. பெட்ரோலிய எரிபொருள் இரு சக்கர வாகனத்தை இயக்க செலவு ரூ.2/கி.மீ ஆகும். அதே வேளை, மின் வாகனத்திற்கு வெறும் 10-15 பைசா மட்டுமே. இந்தியாவில், தனிநபர் பெட்ரோல் நுகர்வு ஆண்டுக்கு 207.1 லிட்டர். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 என்று கணக்கிட்டால், ஆண்டிற்கு மொத்த எரிபொருள் செலவு ரூ.20,710. பெட்ரோலிய எரிபொருள் செலவுடன் ஒப்பிடும்போது, மின் வாகனத்தின் கூடுதல் விலை, அதன் குறைந்த இயக்க செலவால் சமன் செய்யப்பட்டு விடுகிறது.
காடு வளர்ப்பு
- சூரிய மின்சக்தி, மின் வாகனங்கள் மட்டுமின்றி, காடு வளர்ப்பும் இன்றியமையாதது. வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சுவதன் மூலம், காலநிலை மாற்றத்தை தணிக்க காடுகள் உதவுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஒரு மரம் 21 கிலோ கார்பனை உறிஞ்சுகிறது. நாட்டில் உள்ள காடுகளைப் பராமரிக்க, மீட்டெடுக்க, மேம்படுத்த, ‘பசுமை இந்தியா’ திட்டத்தை அரசு கொண்டுவந்தது. இந்த இயக்கம், 5 மில்லியன் ஹெக்டரில் மரம் நடும் பணியை இலக்காகக் கொண்டு, அதில் இதுவரை 2.8% மட்டுமே எட்டியுள்ளது.
- இதற்குத் தீர்வாக, காடு வளர்ப்பில் மக்கள் மன்றங்களை இணைப்பது அவசியமாகிறது. பஞ்சாயத்து - நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி மன்றங்களைக் காடுகள் வளர்ப்பில் உள்படுத்த வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள், ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களைக் காடுகள் வளர்ப்பில் இணைத்துக்கொள்ளலாம். கூட்டு நடவடிக்கையின் வாயிலாக மட்டுமே காடுகளை வளர்க்க, பராமரிக்க, மீட்டெடுக்க முடியும். மேற் கண்டவற்றை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், மாசுபாடற்ற இந்தியா-2070இல் சாத்தியமே!
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2023)