கத்திரிக்காயை நம்பலாமா?
- மரபணு மாற்ற காய்கறிகள் தொடர்பான சர்ச்சைகள் உலகெங்கும் நீண்டுகொண்டிருக்க வங்கதேசத்தில் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் சக்கைபோடு போட்டுவருகிறது. 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது வெறும் 20 விவசாயிகள்தான் இந்த வகை கத்திரிக்காய்களைப் பயிரிட்டனர்;
- இந்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை 27 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்; அதாவது, மொத்த கத்திரிக்காய் விவசாயிகளில் இந்த எண்ணிக்கை 18%. இவ்வகையான கத்திரிக்காயில் பழத் துளைப்பான், குருத்துத் துளைப்பான் போன்றவற்றைக் கொல்லும் புரதம் சுரக்கிறது என்றும், பூச்சிக்கொல்லி அடிக்கும் தேவை பல மடங்கு குறைவு என்றும், விளைவாகவே விவசாயிகள் இதை நோக்கி நகருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
- ஆனால், மரபணு மாற்ற பயிர்களால் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் தீங்கு ஏதும் விளையுமா என்பது குறித்த முழுப் புரிதல் உருவாகாமல் இந்த வகை கத்திரிக்காய்களை மக்களிடம் பரவலாக்குவது ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் செயல்பட்டாளர்கள். அரசாங்கம் தெளிவாக்கினால் நல்லது!
பாதுகாப்பான கல்வி எப்போது?
- குஜராத்தின் சூரத் நகரில் மே 24 அன்று ஒரு தனிப்பயிற்சி வகுப்பில் தீப்பிடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனிப்பயிற்சி மையங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. பல மாநிலங்களிலும் திடீர் சோதனைகள், சட்ட நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.
- தமிழகத்திலும் முறையான அனுமதி பெறாத தனிப்பயிற்சி மையங்களின் எண்ணிக்கைக்குக் குறைவே இல்லை. முறையான அனுமதி பெற்று நடக்கும் பல மையங்களிலும்கூட புகையறிவிப்பான், தீ அலாரம், தீயணைப்பான் போன்றவையெல்லாம் இல்லை என்ற பெற்றோர்களின் கவலைக் குரல்கள் கேட்கின்றன. இங்கே நடவடிக்கை எப்போது?
நதிகளைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தி
- பூலான் தேவியை நினைவூட்டும் சம்பல் நதியானது மத்திய பிரதேசத்தில் யமுனாவில் பிரிந்து ராஜஸ்தானில் பாய்கிறது. ராஜஸ்தானின் ஒரே வற்றாநதியான சம்பல் படுகைதான் அம்மாநிலத்தின் செழுமையான பகுதி. வறட்சியான ராஜஸ்தானின் பெருமையாக அந்த நதி கருதப்படுகிறது.
- அப்பெருமிதத்தை வெளிப்படுத்தவும், நீர்நிலைகளைச் சிதைக்கும் அடாவடிகளைக் கட்டுப்படுத்தி நதியைப் பாதுகாக்கவும் நதிக்கரையோரப் பகுதிகளைச் சுற்றுலா மையமாக்கத் திட்டமிட்டிருக்கிறது அம்மாநில அரசு. ஒருபுறம், சுற்றுலா வருமானம்; மறுபுறம், நீர்நிலைப் பாதுகாப்பு. தமிழ்நாட்டிலும்கூட இப்படியான பல்நோக்குத் திட்டங்களை அரசு முன்னெடுக்கலாம்.
- ஒரு உடனடி உதாரணம், வீராணம் பகுதி. நதிக்கரைகளைச் சுற்றுலா மையமாக்குவது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வேறு வளர்ச்சிப்பணிகளுக்குப் பயன்படுத்தும் சாத்தியங்களும் உருவாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29-05-2019)