TNPSC Thervupettagam

4ஜி இலவசம்!!!

September 27 , 2017 2646 days 3286 0

4ஜி இலவசம்!!!

-------

மு. முருகானந்தம்
 

இந்தக் கட்டுரையை நீங்கள் உங்களது கையடக்கப் பேசியில் வாசித்துக் கொண்டிருக்கலாம். சாலை வசதியற்ற குக்கிராமத்திலோ மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களிலோ நீங்கள் வசிக்கக்கூடும். உங்களது அறிதிறன் பேசியில் (Smart Phone) கட்செவியஞ்சலும் (Whatsapp) சுட்டுரையும் (Twitter) தேர்வுப்பெட்டகமும் தொடர்ந்து அறிவிப்புகளை  வெளியிட்டுக் கொண்டிருக்கும். உங்களது அறிதிறன் பேசி 4ஜி வசதியுடன் வேண்டியவற்றை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறது. அந்த 4ஜி நுட்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோமா...?

தலைமுறைகள்
தொலைபேசி மனிதத் தொலைத் தொடர்பில் மாபெரும் மாற்றத்திற்கு வழிகோலியது. கிரஹாம்பெல், தான் கண்டுபிடித்த தொலைபேசியின் வழியே "ஹலோ" என்று சொன்ன சொல்லைத்தான் இன்று உலகமே சொல்லிக் கொண்டிருக்கிறது. முதலில் கம்பி வழியாகவே தொலைபேசிச் செய்திகள் கடத்தப்பட்டன. தொடர் சைகையைப் (Analog Signal) பயன்படுத்தி கம்பிகள் வழியாகச் செய்திகள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குக் கடத்தப்பட்டன. தரைவழித் தொலைபேசி இணைப்பு (Landline) முறையில் பி.எஸ்.என்.எல் வழங்கும் தொலைபேசி இணைப்புகள் தொடர் சைகையால் இயங்குகிறது. இவ்வாறான கம்பிவழி தொலைத்தெரடர்பு இன்று பல பரிணாமங்களைக் கடந்து கம்பியில்லா முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பரிணாம மாற்றங்களையே தலைமுறைகளாகக் (generations) குறிக்கிறோம். தற்போது வெகுவேகமாகப் பரவி வருவது 4-ஆம் தலைமுறை எனப்படும் 4th Generation (4G) ஆகும்.
நான்கு தலைமுறைகள்
முதல் தலைமுறைத் தொலைபேசிகள் தொடர் சைகையைப் பயன்படுத்தின. அழைப்புகளும் - குறுஞ்செய்திகளுமே (Calls & SMS) முதன்மையான தகவல்களாகப் பரிமாறப்பட்டன. இது 1G என்று பரவலாக அறியப்பட்டது. இதன் மேம்பட்ட வடிவமாக "இலக்க சைகை" (Digital Signal) உடன் 1991-ல் வெளிவந்தது தான் 2ஜி (2G) தொழில்நுட்பம். தொடர் சைகை Vs இலக்க சைகையின் வேறுபாடுகளும், இலக்க சைகையின் மேம்பட்ட நன்மைகளையும் நாம் பள்ளிப் பாடங்களில் கற்றிருப்போம். இலக்க சைகையானது தொலைத்தொடர்பினை அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றது. இம்முறையில் தகவலானது இலக்க சைகையாக குறிமாற்றப்பட்டு (Encryption) கடத்தப்பட்டது. முதன்முறையாகத் தரவுச் சேவை (Data service) / இணையத் தொடர்பு 2ஜி  வழியாக அலைபேசிகளை வந்தடைந்தது.
தொலைபேசி - அலைபேசி - அறிதிறன் பேசி என்று மாற்றங்கள் நிகழ்ந்த போது இணையத்தை தமது அறிதிறன் பேசியிலேயே பயன்படுத்துவது அதிகரித்தது. 2ஜி - யைத் தொடர்ந்து சில மேம்பாடுகளுடன் 2.5 ஜி, 2.75 ஜி நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. தொடர்ந்து 3G-யும் 4G-யும் அடுத்தடுத்து வெளிவந்துள்ளன.
அலைக்கற்றை ஒதுக்கீடு
வானொலி கேட்டதுண்டா?... "ரெயின்போ FM 102.4 இங்க எல்லாமே தூளு" என்ற விளம்பர வாசகத்தை கவனித்திருக்கிறீர்களா? இதில் சொல்லப்படும் 102.4 MHz என்பது வானொலியின் அலைவரிசை ஆகும். இதே போன்று வெவ்வேறு வானொலி நிலையங்கள் வேறுபட்ட அலைவரிசையில் தமது நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. இவை ரேடியோ அலைகள் என்றறியப்படும் மின்காந்த அலைகளாகும் (Electromagnetic Waves). இதே போன்றுதான் ஒவ்வொரு தகவல்தொடர்பு நிறுவனமும் (ஏர்செல் - எர்டெல் - பி.எஸ்.என்.எல்) ஒவ்வொரு அலைநீளத்தில் தமது தொடர்பினை ஏற்படுத்துகின்றன. இந்த அலை நீளத் தொகுப்பே அலைக்கற்றை  (ஸ்பெக்ட்ரம்) எனப்படும்.
மத்திய அரசானது தனது தொலைத் தொடர்புத் துறையின் மூலம் அலைக்கற்றையை ஏலம் விட்டு நிறுவனப் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கின்றது. 1994-ல் முதல் ஏலம் விடப்பட்டது. தொடர்ந்து புதிய நுட்பங்களுக்கேற்ப அலைவரிசைகள் ஏலம் விடப்பட்டு வருகின்றது. தற்போது 4 ஜி அலைக்கற்றைகள் பரவலான பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
4ஜி தொழில்நுட்பம்
மார்ச் 2008-ல் "பன்னாட்டுத் தொலைத் தொடர்புச் சங்கம் - ரேடியோ தொடர்புத் துறை" (International Telecom Union- Radio communication sector (ITU – R)) 4ஜி தொழில்நுட்பத்திற்கான வரையறையை வெளியிட்டது. இதன்படி இரயில் / கார் போன்று அதிவேகத்தில் செல்லும் போது 100 மெகாபைட்/நொடி என்ற வேகத்திலும் நிலையாக உள்ளபோது அல்லது நடக்கும் போது 1 ஜிகாபைட்/நொடி என்ற வேகத்திலும் தரவுப் பரிமாற்றம் நடைபெற வேண்டும்.
தொகைச் சொற்களாக கீழே கட்டத்தில் தரப்பட்டுள்ளவை அலைபேசித் தொலைத்தொடர்பில் தரவுப் பரிமாற்றம் குறித்த தொழில் நுட்பங்களாகும். இவை ஒவ்வொரு கட்டமாக மேம்பாடடைந்துள்ளன. ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல் பரிமாற்றத்திற்கு வழிகோலின.
சில தொகைச் சொற்கள்
GSM           - Global System for Mobiles.
CDMA   - Code Division Multiple Access
GPRS  - General Packet Radio Service
HSPA  - High Speed Pocket Access
LTE  - Long Term Evolution
UMTS  - Universal Mobile Telecommunication System
WCDMA  - Wide band CDMA
VoLTE  - Voice over Long Term Evolution
EDGE  - Enhanced Data Rate for GSM Evolution
Wi MAX  - Worldwide Interoperability for Microwave Access
EvDO  - Evolution Data Optimized
 
  • 1G ஆனது தொடர் சைகைகளைப் பயன்படுத்தியது.
  • 2G-ல் GSM நுட்பம் பயன்பட்டது. குறுஞ்செய்தியும் - இணைய வசதியும் நனவானது.
  • 5G ஆனது GSM+ GPRS- ஐப் பயன்படுத்தியது.
  • 3G - ஆனது HSPA- வைப் பயன்படுத்துகின்றது. இதுவே அகலக்கற்றை (Broadband) வசதியுடன் இணைய வசதியை அலைபேசி மூலம் பயன்படுத்த வழிவகுத்தது. நிகழ்நேர காணொளிக் காட்சிகள், காணொளி உரையாடல் போன்றவை 3ஜி நுட்பத்தின் மூலம் நடைமுறைச் சாத்தியமானது.
  • GSM முறையில் 3G ஆனது WCDMA அல்லது UMTS அல்லது HSPA மற்றும் HSPA+ தரவுப் பரிமாற்ற நுட்பங்களைப் பயன்படுத்தியது. CDMA முறையிலான 3G பரிமாற்றம் EvDO நுட்பத்தைப் பயன்படுத்தியது.
  • 4G ஆனது தற்போது பரவலாகப் பயன்படும் நவீனமாகும். இது LTE மற்றும் Wi MAX தொழில்நுட்பங்களின் மூலம் செயல்படுகிறது. VoLTE என்பது 4ஜி தலைமுறையில் குரல் செய்திகளை சிறுசிறு சிப்பங்களாக (Pockets) மாற்றி பரிமாற்றம் செய்வதைக் குறிக்கும். இம்முறையில் குரட்செய்தி தெளிவாக - துல்லியமாகப் பரிமாறப்படும்.
தலைமுறை - தரம் - ரேடியோ அலை
தொகைச் சொற்களாக நாம் கண்டவை அனைத்தும் தொலைத் தொடர்புத் துறையில் பயன்படுவனவாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தொடர்புடையவை. ஆனால் தலைமுறை (generation) - தரமுறை (Standard) - ரேடியோ அலை (Radio Wave) ஆகிய மூன்றும் வெவ்வேறு வகைகளாகும். நான்கு தலைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் GSM Vs CDMA Vs OFDMA குறித்து சில விசயங்களை தெரிந்து கொள்வது குழப்பத்தைத் தீர்க்க உதவும்.
GSM
இந்த வகைத் தரமுறையில் அலைபேசியும் அதிலுள்ள சிம் கார்டும் தனித்தனியாக இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். "மாப்பிள்ளை இவரு தான் ஆனால் இவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையது" என்பது GSM-க்கு நன்கு பொருந்தும். ஏனெனில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிம்கார்டு மூலமே நுகர்வோரை அடையாளம் காணுகின்றது. சட்டையைப் போன்று போனை நாம் மாற்றிக் கொள்ளலாம்.
அமெரிக்கா / இரஷ்யா தவிர்த்து உலகின் பெரும்பாலான நாடுகளில் இவ்வகை அலைபேசியையே பயன்படுத்துகிறோம். GSM முறையில் "நேரப் பிரிப்பு" (Time Division) பயன்படுத்தப்படுகிறது.
CDMA
இரண்டாம் உலகப் போரின்போது நாசிப் படைகள் தங்களது தொலைத்தொடர்பை ஒட்டுக்கேட்பதைத் தடுப்பதற்காக நேச நாடுகள் உருவாக்கியது CDMA தொழில்நுட்பமாகும். இதில் போன் - சிம் வேறுபாடு இல்லை. ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாற முழு போனையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்கா / இரஷ்யாவில் இந்த வகை அலைபேசிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் தகவலானது இலக்க முறையில் தனிக்குறியாகக் குறிமாற்றப்பட்டு பரிமாறப்படும். இந்த வகை பேசிகள் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஊர்தி அலைகளுடன் (Carrier Waves) நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.
OFDMA
இது முன்னர் கண்ட தொழில்நுட்பங்களின் மேம்பட்ட வடிவமாகும். 4G தலைமுறையின் LTE தரவுமுறை OFDMA ரேடியோ அலையையே பயன்படுத்துகிறது.
 
தலைமுறை தரவுமுறை ரேடியோ அலை
2G 2G 2G GPRS EDGE 1xRTT GSM GSM CDMA
3G 3G 3G 3G UMTS (CDMA) HSPA HSPA+ EvDO GSM GSM GSM CDMA
4G 4G 4G LTE LTE - A WiMAX OFDMA OFDMA OFDMA
  3G × 4G ஒரு ஒப்பீடு
காரணிகள் 3ஜி 4ஜி
தரவுப் பரிமாற்றம் சராசரி வேகம் 0.5 – 1.5 Mbps 2-12 Mbps
மாற்ற நுட்பம் (Switching Technique) சிப்ப மாற்றம் (Pocket Switching) சிப்ப மாற்றம் &  செய்தி மாற்றம்
பயன்படும் ரேடியோ நுட்பங்கள் GSM & CDMA OFDMA
தரவுமுறைகள் UMTS, HSPA LTE, WiMAX
உச்சபட்ச பதிவிறக்க வீதம் 100 Mbps 1 Gbps
அதிர்வெண் கற்றை 1.8 – 2.5 GHz 2 – 8 GHz
  4G -யின் மேன்மைகளும் குறைபாடுகளும் மேன்மைகள்
  1. அதிவேக தரவுப் பரிமாற்றம் காணொளிகள், நிகழ்நேர ஒளிப்படங்கள் போன்ற வசதிகளை தெளிவாகத் தடங்கலின்றி கண்டுகளிக்க வழிவகுத்துள்ளது.
  2. உச்சபட்ச தனியர் பாதுகாப்பு அம்சங்கள் குறிமாற்ற நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது.
  3. ஒரே இணைப்பை LTE / Wi – Fi / Mi - Fi மூலம் பலரோடு பகிர்ந்துக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.
  4. இணைய விளையாட்டு, காணொளிக் காட்சி கூட்டங்கள், பதிவேற்றிறக்கங்கள், போன்றவற்றை எளிதாக மேற்கொள்ள முடியும்.
  5. 4ஜி-யின் வருகை 3ஜி பயனாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் 4ஜி - க்கு மாற முடியாத பயனருக்கு 3ஜி-யின் முழுப்பயன் கிடைக்க வழியுண்டு.
குறைபாடுகள்
  1. ஒப்பீட்டளவில் கட்டணம் அதிகம். இந்திய நுகர்வோருக்குக் கூடுதலான சுமையாகும்.
  2. எல்லா இடங்களிலும் 4ஜி வசதி பரவவில்லை. 4ஜி சைகை இல்லாத இடங்களில் இந்த வகை சைகையைத் தேடி அலைபேசி அதிக மின்னாற்றலைச் செலவிடுவதோடு கதிர்வீச்சுப் பாதிப்பையும் உண்டாக்கும்.
  3. புதிய வசதிகளுடன் வரும் 4ஜி ஒரு விதத்தில் பழைய பேசிகளை மின் கழிவுகளாக மாற்றி விடும்.
இலவசம் !.. இலவசம் !

3ஜி வரையான தலைமுறைகளில் குரட்சேவையும் இணையச் சேவையும் தனித்தனியாகச் செயல்பட்டன. 4 ஜி - யில் VoLTE நுட்பத்தின் குரல் அழைப்புகள் இணையத் தரவுப் பரிமாற்றத்துடன் இணைக்கப்படுகிறது. அதாவது தரவிருப்பு (Data Balance) இருந்தால் போதும். குரல் அழைப்பிற்குத் தனியாகத் தொகை வேண்டுவதில்லை. இதன்மூலம் துல்லியமான குரல் சேவைகளுக்கு வழிபிறக்கும். இதனால் தான் கட்டணமின்றி அளவற்ற அழைப்புகளுடன் புதிய நிறுவனங்கள் புதுச்சேவைகளையும் அதற்குரிய பேசிகளையும் சந்தையில் களமிறக்கியுள்ளன. 1ஜி, 2ஜி, 2.5ஜி, 3ஜி, 4ஜி - LTE, 4ஜி - VoLTE  மேற்கொண்டு 5ஜி தலைமுறையும் வந்துவிடும். புதுப்புதுத் தலைமுறை வரவுகள் இலவசங்களாகவே இருக்குமா?... பொறுத்திருந்து பார்ப்போம்.!

-------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories