TNPSC Thervupettagam

5ஜி விடுக்கும் எச்சரிக்கை!

May 31 , 2019 1999 days 1091 0
  • சீனாவில் பணிபுரியும் எனது அமெரிக்கத் தொழிலதிப நண்பர், “டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கர்களுக்கு வாய்த்த அமெரிக்க அதிபர் அல்ல; சீனாவுக்கு வாய்த்த அமெரிக்க அதிபர்” என்று கூறினார். சீனா கைமீறிச்சென்ற பிறகு அதைக் கட்டுப்படுத்துவதைவிட, இப்போதே அதை அடக்கி வைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் உள்ளுணர்வு சரியானதே. இரு நாடுகளும் இந்தத் தருணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • 1970-களின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வணிக உறவு மீண்டும் தொடங்கியது. 2001-ல் உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) சீனாவும் சேர அனுமதித்த பிறகு, மிகப் பெரும் வணிக கேந்திரமாக அது உருவெடுத்தது. வளரும் நாடு என்ற பட்டியலில் இருந்ததால் ஏராளமான சலுகைகள் அதற்குக் கிடைத்தன.
இது வணிகச் சண்டை அல்ல; போர்!
  • இரண்டின் சந்தையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும்போது எப்படி 21-வது நூற்றாண்டின் ஒரே தொழில் துறையில் இரண்டும் ஆதிக்கம் செலுத்தப்போகின்றன என்பது இனிதான் புலப்படும். இது சாதாரண வணிகச் சண்டை அல்ல; மிகப் பெரிய போர். இந்தப் போர் சுமுகமாக முடிய வேண்டும் என்றால், விடலைப் பையனைப் போல சீனாவை ட்விட்டரில் சீண்டும் வேலையை ட்ரம்ப் நிறுத்த வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, ‘வளரும் நாடு’ என்ற போர்வையில் அனுபவித்த சலுகைகளைத் தொடர முடியாது என்ற உண்மையை சீன அதிபர் ஜி ஜின்பிங் உணர வேண்டும். ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எங்களுக்குக் கட்டளையிட முடியாது’ என்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் அமர்ந்து பேசி, சேதமில்லா வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்ள வேண்டும்.
  • சீனாவுடனான அமெரிக்க உறவு 1970-களில் நிலையாகவும் கட்டுக்குள்ளும் இருந்தது. சீனாவிடமிருந்து பொம்மைகள், டி சர்ட்டுகள், டென்னிஸ் ஷூக்கள், இயந்திரங்களுக்கான கைக்கருவிகள், சூரியஒளி விசைப்பலகைகள் போன்றவற்றை வாங்கினோம். பதிலுக்கு சோயாமொச்சை, மாட்டிறைச்சி, போயிங் விமானங்கள் ஆகியவற்றை சீனர்கள் வாங்கினர். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் உலகின் அடுத்த பெரிய வல்லரசாக சீனா உருவெடுக்க அமெரிக்கா உதவியது. அதற்குப் பிறகுதான் அமெரிக்காவால் புறக்கணிக்க முடியாத மாற்றங்கள் சீனாவில் ஏற்பட்டன.
  • முதலாவதாக, ‘சீனாவில் தயாரிப்போம்-2025’ என்ற கொள்கையை சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார். சீனாவின் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் தங்களை நவீனப்படுத்திக்கொள்ள ஏராளமான மானியங்கள் அளிக்கப்பட்டன. சூப்பர் கம்ப்யூட்டர், ரோபாட்டுகள், 3-டி பிரிண்டிங், முகத்தை வைத்தே அடையாளம் காணும் மென்பொருள், செயற்கை நுண்ணறிவு, மின்சார கார்கள், ஓட்டுநர் இல்லா வாகனங்கள், 5ஜி வயர்லெஸ், நவீன மைக்ரோ சிப் ஆகியவற்றின் தயாரிப்பில் சீனா வேகம் காட்டியது. நடுத்தரக் குடும்பங்கள் அதிகமுள்ள நாடு என்ற பட்டியலிலிருந்து மேலே வரவும், உயர் தொழில்நுட்பத்துக்காக மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெறவும் சீனாவுக்கு இதுதான் இயல்பான வழியாக இருந்தது. ஆனால், இந்தப் புதிய தொழிற்சாலைகள் அனைத்துமே அமெரிக்காவின் மிகச் சிறந்த நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டியிட்டன.
  • இதன் விளைவாக, சீன அரசு 1970 முதல் தனது தொழில்களுக்கு வழங்கிய மானியம், காப்பு வரி, வர்த்தக விதித் தில்லுமுல்லு, கட்டாயப்படுத்தி தொழில்நுட்பங்களைப் பெறும் சூழ்ச்சி, அறிவுசார் சொத்துரிமைகளைக் களவாடும் போக்கு என எல்லாமே பெரிய ஆபத்தாக உருவெடுத்தன.
இது வியாபார சாமர்த்தியமா?
  • முறையான வர்த்தகத்தில் இருதரப்புக்கும் வெற்றிதான். ஆனால், ஒரு தரப்பு கடுமையாக உழைத்து ஒரு பொருளை உருவாக்கும்போது, இன்னொரு தரப்பு அந்த உத்திகளைத் திருடி விற்றால் சீர்கேடாகத்தான் முடியும். பொம்மைகளையும் சூரியஒளி விசைப்பலகைகளையும் தயாரிக்கும்போது ஏதாவது தில்லுமுல்லுகளைச் சீனா செய்தது என்றாலும் போகட்டும் என்று விட்டுவிடலாம்; ஆனால், எஃப் 35 ரக போர் விமானங்கள், 5ஜி தகவல்தொடர்புச் சாதனங்கள் விஷயத்தில் ஏமாற்றினால் அதை வியாபார சாமர்த்தியம் என்று பாராட்டி விட்டுவிட முடியுமா என்ன? “எவையெல்லாம் நம்மை வலுவான நாடாகவும் செழிப்பான நாடாகவும் மாற்றுகின்றனவோ, அவையே நம்மைத் தாக்குதலுக்கு இலக்காகவும் மாற்றுகின்றன” என்ற ஜான் ஆர்கில்லாவின் கூற்றை நினைவில்கொள்ள வேண்டும்.
  • 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவின் ‘வாவ்வே’ (Huawei) நிறுவனம் தயாரிக்கும் சாதனம், தரவுகளையும் குரலையும் அதிவிரைவாக மாற்றும் ஆற்றல் பெற்றது. இது வெறும் தகவல்தொடர்புச் சாதனம் மட்டுமல்ல; உளவு வேலைக்கும் ஏற்றது. சீனச் சட்டப்படி அந்நாட்டு உளவு நிறுவனங்கள், ‘இதைப் பயன்படுத்துவோர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் தங்களுக்கு வேண்டும்’ என்று கேட்டால், உபயோகிப்பாளருக்குத் தெரியாமலேயே அவற்றைப் பெறக்கூடிய ஆபத்து இருக்கிறது. ‘வாவ்வே’ நிறுவனத்தின் ‘சாட்பாட்’ உங்கள் இல்லத்தில் இருக்குமென்றால், உங்களுக்குத் தெரியாமலேயே சீனாவின் ராணுவ உளவுப் பிரிவுக்குத் தகவல்களை நீங்கள் கொடுத்துக்கொண்டிருப்பீர்கள்.
  • அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம்தான் ‘வாவ்வே’வுக்கு சிப்புகளையும் மென்பொருளையும் தருகிறது. ஆனால், சீனாவில் ‘வாவ்வே’ நிறுவனத்துக்கு இணையாக வெளிநாட்டுச் சாதனங்கள் போட்டிபோட முடியாதபடிக்கு சீன அரசு தடுத்துவிட்டது. ‘வாவ்வே’ வேகமாகவும் அபரிமிதமாகவும் வளர வேண்டும் என்ற நோக்கில் சீனா இந்த நடவடிக்கையை எடுத்தது. இதில் அடுத்த தலைமுறைச் சாதனங்கள் அனைத்தும் தன்னால், தன் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படுபவையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.
அதிகரிக்கும் நம்பிக்கையின்மை
  • சீனாவிடமிருந்து டென்னிஸ் ஷூக்களையும் பொம்மைகளையும் அமெரிக்கா வாங்கும்போதும், அமெரிக்காவிலிருந்து சீனர்கள் சோயாபீன்ஸ், போயிங்குகளை வாங்கும்போதும் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளா, மாவோயிஸ்ட்டுகளா, சோஷலிஸ்ட்டுகளா, மோசடிப் பேர்வழிகளா என்று யாரும் கவலைப்பட்டதில்லை. ஆனால், ‘வாவ்வே’ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் வணிகத்தின் முதுகெலும்பாக உருவெடுக்கும்போது அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தகவல்தொடர்பு, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி என்று எல்லா துறைகளிலும் இது பயன்படுத்தப்படப்போகிறது. இங்கு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அத்துடன் சட்டம் முக்கியம், நம்பிக்கை முக்கியம். ஒரு நாட்டின் பயன்பாட்டில் 5ஜி தொழில்நுட்பம் ஊறிவிட்டால் அதை நீக்கிவிட்டு இன்னொன்றை அந்த இடத்துக்குக் கொண்டுவருவது எளிதல்ல.
  • அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நம்பிக்கையின்மை அதிகமாகிறது. பல தசாப்தங்களாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவின் மோசடியைச் சகித்துக்கொண்டன. ஒருவேளை, பணக்கார நாடாக சீனா மாறினால் அரசியல்ரீதியாகவும் அது வெளிப்படையான நாடாகும் என்று அவை எதிர்பார்த்தன. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதற்கான வாய்ப்புகள் இருந்தன.
  • சீனா உயர் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துகிறது. முகத்தை வைத்தே ஒருவரை அடையாளம் காண்பதன் மூலம் சர்வாதிகாரரீதியாக மக்களைக் கட்டுப்படுத்தும் கலையில் தேர்ச்சிபெற்றுவருகிறது. இச்சூழலில் அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கிடையே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழியைக் காண வேண்டும். இல்லாவிட்டால் சீனா, அமெரிக்கா இரு நாடுகளுமே செல்வ வளத்தை இழக்க நேரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories