TNPSC Thervupettagam

5ஜி சோதனையில் ஹாவை நிறுவனத்துக்கு அனுமதி

January 10 , 2020 1832 days 934 0
  • தற்போதைய 4ஜி தொழில்நுட்பத்திலிருந்து நாம் 5ஜி தொழில் நுட்பத்துக்கு நம்மை மேம்படுத்திக் கொண்டாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • நடைபெற இருக்கும் 5ஜி அலைக்கற்றை கட்டமைப்புக்கான சோதனைகளில் பங்குபெற சர்வதேச தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பம்

  • இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை, அதற்கான கருவிகளை வழங்குவதற்கு உலகிலுள்ள பல முன்னோடித் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
  • அந்த நிறுவனங்களின் பட்டியலில் சீனப் பன்னாட்டு நிறுவனமான ஹாவை'யும் இருந்தது. அப்போதே, ஹாவை' நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற பரவலான கருத்து முன்வைக்கப்பட்டது.

விஜயராகவன் குழு

  • மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவன் தலைமையில் இது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
  • 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, சோதனைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.
  • விண்ணப்பித்திருக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் சோதனையில் பங்குபெற அனுமதி வழங்கலாம் என்று பரிந்துரைத்த விஜயராகவன் குழு, ஹாவை' சீன நிறுவனத்தை மட்டும் அதில் சேர்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.
  • அந்தப் பரிந்துரையைப் புறந்தள்ளி இப்போது ஹாவை' நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஹாவை டெக்னாலஜிஸ் நிறுவனம்

  • ஹாவை டெக்னாலஜிஸ்' என்பது சீனப் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம்.
  • சீனாவிலுள்ள ஷென்செல் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஹாவை', தகவல் தொலைத்தொடர்பு உபகரணங்களையும், மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) பொருள்களையும்அறிதிறன் பேசிகளையும்  தயாரிக்கும் நிறுவனம்.
  • 1987-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை உருவாக்கி செயல்படுத்திக் கொடுப்பதுடன், ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்குகிறது.
  • சீனாவில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் செயல்படும்  ஹாவை டெக்னாலஜிஸ்' நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
  • உலகிலுள்ள 170 நாடுகளில் தனது பொருள்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் இந்த நிறுவனம், உலகின் மிகப்பெரிய தகவல் தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர் என்பதுடன், சாம்சங்'குக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய அறிதிறன்பேசித் தயாரிப்பு நிறுவனமும்கூட.
  • கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 121.72 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8.67 லட்சம் கோடி).

அனுமதி மறுத்ததன் காரணங்கள்

  • உலகின் மிகப் பெரிய தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹாவைநிறுவனத்தை 5ஜி அலைக்கற்றை கட்டமைப்பு சோதனைக்கு, இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் குழு பரிந்துரைத்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
  • மிக முக்கியமான காரணம், தேசப் பாதுகாப்பு.
  • ஹாவை' நிறுவனத்தை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது என்பது, கூடாரத்தில் ஒட்டகத்தை நுழைய அனுமதிப்பதற்கு ஒப்பானது' என்று அரசியல் விமர்சகர்கள் கருதுவதில் அர்த்தம் இருக்கிறது.
  • சீனாவைப் பொருத்தவரை, அந்த நாட்டு அரசுக்கும், அந்த நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு கிடையாது.
  • எல்லா சீன நிறுவனங்களும் அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.
  • ஹாவை' நிறுவனமும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்துடனும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டது.
  • 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்குவதையும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அனுமதி வழங்குவதையும் பொருளாதாரம் சார்ந்த அல்லது தொழில்நுட்பம் சார்ந்த முடிவாக மட்டுமே கருதக் கூடாது.
  • இதில் இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது.  எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்தியாவின் உற்பத்திக் கட்டமைப்பின் முதுகெலும்பாக 5ஜி தொழில்நுட்பம் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • இந்தியாவின் அனைத்துத் தொழில் நிறுவனங்களும், தகவல் கட்டமைப்பும், ஏன் ராணுவப் பாதுகாப்புக் கட்டமைப்பும்  எண்ம தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமையும் நிலையில், 5ஜி அலைக்கற்றைக் கட்டமைப்பை சீன நிறுவனம் இயக்க அனுமதிப்பது என்பது, தெரிந்தே விபரீதத்தை வரவழைத்துக் கொள்வதாக அமையும்.
  • டோக்காலாமில் நடந்தது போன்ற மோதல் சூழல் வருங்காலத்தில் உருவாகுமானால், ஹாவைநிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் ஒட்டுமொத்தத் தகவல் தொலைத்தொடர்பையும், தொழில்துறை இயக்கங்களையும்  சீனாவால் முடக்கிவிட முடியும்.
  • இந்திய அரசின் அமைப்புகள் குறித்தும், இந்தியர்கள் குறித்துமான ரகசியங்களையும் ஊடுருவி பாகிஸ்தானுக்கு ஹாவைநிறுவனத்தின் உதவியுடன் வழங்க முடியும்.
  • ஹாவைதொலைத்தொடர்பு வலையில் சிக்கியிருக்கும் பல நாடுகள், இப்போது அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றன.
  • பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதிக்கும் இந்த விஷயத்தில் சர்வதேச ஒப்பந்தங்களைக் காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!
  • இவ்வளவு பிரச்னைகளும், பிரிவினைகளும் இருந்தும்  ஹாவை' நிறுவனத்தை 5ஜி அலைக்கற்றைக் கட்டமைப்புக்கான சோதனையில் பங்குபெற மத்திய அரசு அனுமதித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது!

நன்றி : தினமணி (10-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories