TNPSC Thervupettagam

70 மணி நேர வேலை அவசியமா

January 21 , 2024 220 days 208 0
  • அது 2014ஆம் ஆண்டு. சென்னையில் ஒரு புத்தக விழாவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விழாவின் முக்கிய விருந்தினர் அவர்.
  • அவரை நண்பர் சுகாவின் வழியே தொடர்புகொள்ள இன்னொரு நண்பர் வினோத் உதவினார். “எங்கே வர வேண்டும்?” எனக் கேட்டேன். ஏனெனில், சந்திக்கும் நாள் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி. இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை என்பது கோலிவுட் விடுமுறை நாள். பிரசாத் ஸ்டுடியோவுக்கு வரவும் எனச் செய்தி வந்தது. அங்கே, அவர் சுறுசுறுப்பாக, இயக்குநர் சந்திரசேகருடன் பணி செய்துகொண்டிருந்தார். 70 வயதில், ஞாயிறு காலை 6:30 மணிக்கு நான் வேலை செய்வேனா எனக் கேட்டுக்கொண்டேன். ஏதேனும் காரணத்தினால், மனச்சோர்வு அடைகையில், அந்த நாளை நினைவுபடுத்திக்கொள்வேன்.
  • இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மான் இதற்கு நேரெதிர். அவர் பின்னிரவில்தான் பணிபுரிவார். இருவருமே தமிழ்த் திரையுலகின் பெருமிதங்கள். கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். இதற்கு நேரெதிராகச் சில உதாரணங்கள் உள்ளன.
  • கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனின் கார், திங்கள் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் நுழையும். மாலை 5:30 மணிக்குக் கிளம்பிவிடும். சனி ஞாயிறு அலுவலகம் வர மாட்டார். பறவைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். பறவைகளுடனும், நண்பர்களுடனும் வார இறுதியைச் செலவுசெய்வார். நான் அங்கே பணிபுரிந்த 10 ஆண்டுகளில் 1-2 முறையே இந்த விதியைத் தாண்டி அவர் அலுவலகத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
  • இந்தியாவின் வெற்றிகரமான முதல்வர்களுள் ஒருவரான நவீன் பட்நாயக் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்கிறார். மாலை ஐந்து மணிக்கு மேல் ஒருவரும் அவரைச் சந்திக்க முடியாது. எல்லாமே வெற்றிகரமான உதாரணங்கள். அப்படியானால், அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, “அனைவரும் 70 மணி நேரம் பணிசெய்ய வேண்டும்எனச் சொன்னது எந்த அளவுக்குச் சரி?

உலகின் மனநிலை

  • நான் 1990ஆம் ஆண்டில், மேலாண்மை முடித்து, உதவி விற்பனை மேலாளராகப் பணியில் சேர்ந்தேன். எங்கள் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியுடன் மார்க்கெட் பணிக்குச் செல்வேன். காலை 8 மணி தொடங்கி மதியம் 4 மணிவரை பணி இருக்கும். 35-40 கடைகளுக்குச் சென்று ஆர்டர்கள் எடுக்கும் வேலை. மதியம் 4 மணிக்குப் பணி முடிந்து மதிய உணவுக்கு அமர்கையில் அப்பாடா என இருக்கும். எனக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி வேலை. ஆனால், அதைத் தினமும் செய்யும் மனிதரிடம் போய், மாலை 7 மணிவரை வேலை செய்தால் தினமும் 60 கடைகளில் ஆர்டர் எடுக்க முடியும் எனச் சொல்ல முடியுமா எனில், முடியாது என்பதே பதிலாக இருக்கும்.
  • தொழிற்சாலைகளில், உடல் உழைப்பு வேலைகளில், 8 மணி நேரம் என்பதே அதீதமானது. அதைத் தாண்டி வேலையைத் தொடர்கையில், உடற்சோர்வும், செயல்திறன் குறைவும் ஏற்படுகிறது என்பதே நிருபிக்கப்பட்ட உண்மை.
  • கொரிய, ஜப்பானிய நிறுவனங்களில் அதீத உழைப்பு என்பது ஒரு சமயக் கடமைபோல (religious ritual) செய்யப்படுகிறது. வன்கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். நிறுவனத்தையும், உழைப்பையும் தவிர உலகில் வேறு ஒன்றுமே இல்லை என்னும் ஒரு வாழ்க்கைமுறை. நிறுவனங்களில், சாகும் வரை பணியாற்றலாம். அந்தச் சமூகங்களின் உழைப்பாளர் செயல்திறனை உலகம் போற்றிய ஒரு காலம் உண்டு. மிக எளிதாக இந்தப் பணிகளை இன்னும் சில ஆண்டுகளில் ரோபோட்கள் எடுத்துக்கொள்ளும்.
  • ஆனால், உலகின் மற்ற முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய நாடுகளில், ஐந்து நாட்களே அதீதம் என்னும் மனநிலை உள்ளது. பல நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் பணி என்னும் குரல் கேட்கிறது.

சர்ச்சைப் பேச்சு

  • அண்மையில் நாரயண மூர்த்தி அனைவரும் வாரம் 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்னும் குரலை எழுப்பியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதற்கான விளக்கத்தை இன்னொரு நேர்காணலில் காண நேர்ந்தது.
  • அதில் அவர் பேசும்போது இரண்டு விஷயங்களைச் சொல்கிறார். இந்தியாவில் உழவர்களும், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல மற்றவர்களும் உழைக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு, தான் காலை 6:30 மணிக்குச் சென்றால், இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவேன். திரும்பிய பின்னர், குடும்பத்துடன் வெளியே சென்று உணவருந்திவிட்டு வருவோம் என்பதையும் சொல்கிறார். இவர் தினமும் 10-12 மணி நேரப் பணியில் இருக்கையில் வீட்டையும் குழந்தைகளையும் யார் கவனித்துக்கொண்டார்கள் என்பதைச் சொல்லவில்லை. விடை ஒன்றும் ரகசியமல்ல.
  • இரண்டாவது, அதை யாராவது விமரிசிக்க வேண்டுமெனில், என்னைவிட, தம் துறையில் வெற்றிபெற்றவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார்.
  • இதில் நகைச்சுவை என்னவெனில், சில பல பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாராயண மூர்த்திதான் அலுவலகத்தில் இருந்து சரியான நேரத்துக்கு வீடு செல்ல வேண்டும் என ஒரு காலத்தில் சொல்லியிருந்தார். பணி மற்றும் வாழ்க்கை இவை இரண்டையும் இன்றைய இளைஞர்கள் சமமாகக் கருத வேண்டும் என்பது அவர் சொன்னதன் சாராம்சம். அது தொடர்பாக நண்பர்களுடன் விவாதித்தது நினைவிருக்கிறது.

காலவதியாகும் கருதுகோள்

  • இதில் 70 மணி நேர வேலை என்பது காலாவதியாகிக்கொண்டிருக்கும் ஒரு கருதுகோள். ஒருவர் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார் என்பதல்ல. குறுகிய காலத்தில், எவ்வளவு செயல்களைச் செய்து முடித்து, நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாட்டிற்கு உதவுகிறார் என்பதே இன்றைய அளவீடாக உள்ளது.
  • இன்றும் மருத்துவர்கள் தொழில்முனைவோர்கள் போன்றவர்கள் தொடர்ந்து அதிக நேரம் பணிபுரிகிறார்கள். தொழில்முனைவோருக்குத் தொழிலில் கிடைக்கும் பலன்களும், சிலருக்குத் தாம் செய்யும் பணியில் கிடைக்கும் இன்பமும் அவர்களைபசிநோக்காமல், கண் துஞ்சாமல்’, பணிபுரியும் மனநிலையைக் கொடுக்கிறது. ஆனால், மொத்த சமூகமும் இந்த மனநிலை கொண்டதல்ல. பெரும்பாலானவர்கள், பணியில் ஈடுபாட்டுடனும், செயல்திறனுடனும் இருந்தாலும், அதைத் தாண்டிய உலகமும் தேவை என வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அதுவே, ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கான அடையாளம்.
  • சில ஐஐடி மாணவர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. ஐஐடி நேர்முகத் தேர்வில் தாங்கள் பெற்ற அகில இந்திய ரேங்கை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வார்கள். ராணுவத்தில் அதிகாரிகள், தாங்கள் பெற்ற மெடல்களைக் குத்திக்கொண்டிருப்பதுபோல. நாராயண மூர்த்தியின் பேச்சும் அப்படி, அவரது வெற்றியை முன்வைத்துப் பேசுவதாக உள்ளது.
  • நாராயண மூர்த்தியின் சாதனையும், பங்களிப்பும் இந்திய நாட்டுக்கு மிக முக்கியமான ஒன்று. கல்வியினால் பெற்ற தொழில்நுட்ப அறிவை முன்வைத்து, சேவைத் துறையில் மிக முக்கியமான நிறுவனத்தை உருவாக்கி நிறுத்துதல் பெரும் சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை.
  • ஆனால், மென்பொருள் துறையில், எந்த இந்திய நிறுவனமும் ஒரு உலகளாவிய வணிகச் சின்னத்தை உருவாக்கி நிலைநிறுத்தவில்லை. உலகில் பல நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பத் துறை அல்லது அத்துறையில் தேவைப்படும் சேவைகளை இந்திய தொழில்நுட்பர்களைப் பயன்படுத்தி சேவைகளை வழங்கும் பணியை மேற்கொண்டு, திறம்படச் செயல்பட்டு பெரும் நிறுவனங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள்.

இந்திய மென்பொருள் துறை செய்ய வேண்டியது

  • இந்தியாவில் வணிகச் சின்னங்களை உருவாக்கும் முயற்சிகள் நடந்தன. நிறுவனத்தின் மொத்தச் செயல்பாடுகளையும் (விற்பனை, உற்பத்தி, மனித வளம், நிதி நிர்வாகம்) இணைக்கும் ஒரு மென்பொருளை (ERP – Enterprise Resource Planning) தமிழ்நாட்டில் உள்ள ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் முயன்றது. ஆனால், எஸ்ஏபி (SAP) என்னும் பெரும் நிறுவனத்தின் முன் அதனால் போட்டியிட முடியவில்லை. சமூக ஊடகங்களில், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாக்ராம் என்னும் புத்தாக்கங்கள் வந்ததுபோல இந்தியாவில் இருந்து எந்தவொரு பெருநிறுவனமும் எழவில்லை. ஃப்ளிப்கார்ட் போன்ற நகல் முயற்சிகள் வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களால் விழுங்கப்பட்டுவிட்டன.
  • சிறு சிறு வணிகச் சின்னங்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும், உலகளாவிய வணிகச் சின்னங்களை, நிறுவனங்களை உருவாக்க முடியுமா என்பதே இன்று இந்திய மென்பொருள் நிறுவனங்கள் முன்னால் உள்ள சவால். அதை இலக்காக வைத்து வணிகச் செயல்பாடுகளை திட்டமிட வேண்டியதே இந்திய மென்பொருள் துறையின் அடுத்த பெரும் நகர்வாக இருக்க முடியும்.
  • மென்பொருள் துறையின் மிக முக்கியமான செல்வம் என்பது மனித வளம். இந்திய மென்பொருள் துறை தனது அடுத்த இலக்காக உலகில் பெரும் வணிகச் சின்னங்களை உருவாக்குதலை மேற்கொள்ள வேண்டுமெனில், இந்த மனித வளம் படைப்பாற்றலுடனும் (Creativity), புத்தாக்க சிந்தனையுடனும் (Innovation) செயல்படும் அளவுக்கு இந்திய நிறுவனங்களில் வாய்ப்புகளும் (opportunities) தேவையான வசதிகளும் (Resources) கிடைக்கும் வழிகளைச் சிந்திக்க வேண்டும்.
  • இதுவே மென்பொருள் துறையில் பெரும் வெற்றிபெற்ற ஒரு தொழில்முனைவோரின் தொலைநோக்குச் சிந்தனையாக இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து, 70 மணி நேர வேலை என 90களில் காலாவதியாகத் தொடங்கிய ஒரு கருதுகோளை முன்வைத்திருக்கிறார். மென்பொருள் சமூகத்தின்பூமர் அங்கிள்ஆக வெளிப்பட்டிருப்பது சோகம்தான்.

நன்றி: அருஞ்சொல் (21 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories