புல்லட் பயணம்
--------
மாணிக்கவள்ளி கண்ணதாசன்
வெளிநாட்டிற்குச் சென்று வந்தோர் புல்லட் ரயிலில் பயணம் செய்ததைப் பெருமையாக பேசுவதைக் கேட்டிருப்போம். நாமும் பெருமூச்சு விட்டிருப்போம்! இனி கவலையேயில்லை… புல்லட் ரயில் பயணம் நம் ஊரிலும் வர இருக்கின்றது!அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்தினை நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்களும் தொடங்கி வைத்தார்கள்.
1964 ஆம் ஆண்டு முதன் முதலாக ஜப்பானில் புல்லட் ரயில் தொடங்கப்பட்டது. உலகில் இப்போது 15 நாடுகள் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மேலும், ஐரோப்பாவிலும் சீனாவிலும் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது போன்ற அதிவேக ரயில்களால் பொருளாதாரத்தில் மட்டும் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கனவுத் திட்டம் இது. அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட 508 கிலோ மீட்டர் தொலைவை ஏழு மணி நேரத்திற்கு மாறாக மூன்று மணி நேரத்தில் கடந்து விட முடியும். ஆம்! நம்முடைய நீண்ட காலக் கனவு விரைவில் நிறைவேற இருக்கின்றது. ஜப்பான் நமக்கு 88000 கோடியை 0.1 வட்டி வீதத்தில் நமக்கு வழங்கி புல்லட் ரயில் திட்டத்தினை நிறைவேற்ற மாபெரும் உதவியினை நமக்கு அளித்துள்ளது.
புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியாவில் 4000 பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. மேலும், பயிற்சி அளிக்கப்படுவதற்காக வதோதராவில் பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. அது எல்லாம் சரி! புல்லட் ரயில் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று கேட்கின்றீர்களா? 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இடையிலான மொத்த ரயில் நிலையங்கள் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பரூச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சார், விரார், தானே ஆகியன ஆகும். புல்லட் ரயிலின் அதிக பட்ச வேகம் மணிக்கு 350 கி.மீ ஆகும். அது மட்டுமல்லாமல் அதிக பட்ச இயக்க வேகம் 320 கி.மீ ஆகும். குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றால் 2.07 மணி நேரத்தில் கடந்து விடும். அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்லும் பட்சத்தில் 2.58 மணி நேரம் ஆகும்.
மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இடையே உள்ள இரயில் நிலையங்களில் ஒவ்வொரு ரயில் நிலையத்தினையும் கடக்க 165 நொடிகளே ஆகும் என கூறப்படுகின்றது. இதற்காக மும்பையின் போய்சர் ரயில் நிலையத்திலிருந்து பிகேசி ரயில் நிலையம் வரை 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.
புல்லட் இரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நிறைய இடங்கள் ஆக்கிரமிக்கப்படுமே என்று அச்சப்பட வேண்டாம். 92 சதவீத பாதைகள் மேம்பாலங்களாகவும் 6 சதவிகித இரயில் பாதைகள் சுரங்கங்களிலும் அமைக்கப்பட உள்ளதால் அந்தக் கவலை அர்த்தமற்றது. இந்தத் திட்டத்திற்காக ரயில்வேத் துறைக்கு 825 ஹெக்டேர் மட்டுமே தேவைப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
திட்டத் தொடக்கத்தில் தினமும் 35 புல்லட் ரயில்களை இயக்க இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும், 2050 ம் ஆண்டில் 105 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. எதையுமே எடுத்த உடனேயே பெரிய அளவில் செய்ய முடியாது அல்லவா! இந்த புல்லட் ரயிலில் எத்தனைப் பெட்டிகள் இருக்கும் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம்! முதலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 750 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 16 பெட்டிகளாகவும் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 1250 ஆகவும் இருக்கும்.
அது எல்லாம் இருக்கட்டும். கட்டணம் சொன்னால் காதில் ரத்தம் வருமா என்று சிலர் கேட்கலாம் அதெல்லாம் இல்லை! ராஜதானி விரைவு ரயிலின் 2 ஆம் நிலை குளிர் வசதிப் பெட்டியின் கட்டணத்திற்கு இணையாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த புல்லட் ரயிலானது உயர் வகுப்பு , சாதாரண வகுப்பு என்று இரு வகுப்புகளை மட்டுமே கொண்டிருக்கும். தொடக்கத்தில் ஆண்டுக்கு 1.6 கோடி பேர் புல்லட் ரயிலில் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2050 ஆம் ஆண்டில் தினமும் 1.6 லட்சம் பேர் இந்த ரயிலைப் பயன்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிவிரைவு ரயில் திட்டம் ரயில்வேத் துறையை நவீனப்படுத்த வல்லது. இதனால் இந்தியாவின் மேற்குப்பகுதியில் தொழில் வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் முதல் ரயிலை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறக்க முடியாது. 1853 ல் மும்பைக்கும் தானேக்கும் இடையில் உள்ள 34 கி.மீ தூரத்தை அந்த ரயில் ஒரு மணி நேரத்தில் கடந்தது. 2017 ல் கூட இந்தியாவின் ரயில்வேயின் வேகம் இரட்டிப்பாக மட்டுமே ஆகி இருக்கின்றது. மேலும், இந்தியாவின் அதிவேக ரயிலான தேஜஸ் ஒரு மணி நேரத்துக்கு 160 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்கின்றது. அரசின் இப்போதைய புல்லட் ரயில் திட்டம் நிறைவடைந்தால் 2022 ல் அதை விட இரட்டிப்பு வேகத்தில் புல்லட் இரயில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இந்த புல்லட் ரயிலில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நம் நாட்டில் வருடத்திற்கு 2.30 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் பயணம் தாமதமாகும் என்று விமானத்தில் பறக்க நினைப்போரையும், புல்லட் ரயிலில் பயணம் செய்து விரைவில் வீட்டிற்குச் செல்வோமே என்று நினைப்போரையும் புல்லட் ரயில் வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அந்த வழித்தடத்தில் ஏறக்குறைய 40 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கணிக்கப்படுகின்றது.
இந்தியாவுடன் புல்லட் ரயில் திட்டத் தொழில்நுட்பத்தினை ஜப்பான் பகிர்ந்து கொள்ள இருக்கின்றது. இதன் மூலமாக ஜப்பான் தன்னுடைய முக்கியத்துவத்தினை உலகில் நிலை நாட்டியிருக்கின்றது. ஏனென்றால் தாய்லாந்தும் இந்தோனேஷியாவும் ஜப்பானிடம் உதவி வேண்டாமல் சீனாவிடம் புல்லட் ரயில் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக் கொண்டது. இந்தியாவிற்கு உதவுவதற்கு அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
எந்த ஒரு திட்டத்திற்கும் விமர்சனங்கள் எழாமல் இருக்க முடியாது. அதற்கு புல்லட் ரயில் திட்டமும் விதி விலக்கல்ல. அதிவேகமாகச் செல்ல இருக்கின்றோம் என்று ஆசைப்பட இருக்கின்ற இத்தருணத்தில் ரயில் விபத்துக்களும் நம்மை மிரட்டாமல் இல்லை.
சமீபத்தில் மும்பையில் ரயில் நிலைய நடைபாதை இடிந்த விபத்தில் பலர் இறந்தனர். இதன் பின்னர் இந்த புல்லட் ரயில் திட்டம் மிகவும் அதிகளவில் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. பெரும்பாலான ரயில் விபத்துகள் மனிதத் தவறுகளாலேயே நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தோமானால் ரயில்வே ஊழியர்களின் பற்றாக்குறைதான். மத்திய அரசு இக்குறைதனைப் போக்கிடவும் நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
தண்டவாளங்களையும், பாலங்களையும் மேம்படுத்திச் செப்பனிட வேண்டிய சூழ்நிலையிலேயே நாம் இன்னும் இருக்கின்றோம். ரயில்வேத் துறையினை நவீனப்படுத்த அதிக முதலீடு தேவைப்படுகின்றது. உயர்தரக் கட்டமைப்பு வசதியினை மேம்படுத்த இந்திய அரசாங்கம் என்ன வழிமுறைகளைக் கையாளும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு.
என்னதான் தூய்மை இந்தியா போன்றத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வு முழுமையாக வரப்பெற்றுள்ளதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். எப்படியும் நம்முடைய மக்கள் பயணித்து முடித்தவுடன் அந்த இடம் மீண்டும் பயணிக்கத் தகுதியற்றதாக இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! இருபது மணி நேர பயண நேரத்திற்குப் பின் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய 4 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகின்றது.
இன்றும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நம்மால் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என்பது உண்மையிலும் உண்மை. மேலும் ரயில்களின் தாமதமான வருகை மற்றும் புறப்படுதலில் தாமதம், இரயில் சேவையில் தாமதம் ஆகிய செயல்கள் பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில்தான் உள்ளன.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட புல்லட் ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களாக புல்லட் ரயில்களை இயக்கி வருகின்ற சீனாவும் புல்லட் ரயில்களின் இயக்கத்தில் நஷ்டத்தினையே சந்தித்து வருகின்றது என்று விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
நமது நாட்டில் இன்றைய மக்களுக்கு குறைந்த செலவில் நிறைந்த சேவையே முதற்கண் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஏறக்குறைய ஆண்டுக்கு 100 கோடி பேர் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புல்லட் ரயிலை விட மெட்ரோ ரயில் திட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் தற்போதைய தேவை என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புதுமையானத் திட்டங்களை விட புத்திசாலித்தனமானத் திட்டங்களே நமக்குத் தேவை என்று இத்திட்டத்தினை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர். மேலும், பயனிகளின் பாதுகாப்பையும் அடிப்படைவசதிகளையும் முதலில் அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.
அதன்படி பாதுகாப்பான ரயில் பயணங்களே புல்லட் ரயில் திட்ட பயணத்திற்கு மேன்மையளிக்கும். இந்தியா உலகில் வல்லரசாவதற்கு வழி வகுக்கும். பாதுகாப்பாய் பவனி வருவோம். பாரில் நாட்டை உயர்த்துவோம்.
-------------