TNPSC Thervupettagam

9 சதவிகிதம் ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

January 6 , 2025 4 days 49 0

9 சதவிகிதம் ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

  • ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ இந்த பழமொழி, பொதுவாக மனித வாழ்க்கையில் எப்போதும் சிரமங்கள் இருந்தாலும், அதை எல்லாம் தாண்டி நீண்டகாலம் வாழ்வதை குறிப்பது ஆகும். இந்த பழமொழி 2024-ம் ஆண்டின் பங்குச் சந்தை நகர்வுக்கு நன்கு பொருந்தும். இந்திய பங்குச் சந்தைகள் 2024-ல் பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்தாலும், அவற்றை எல்லாம் தாக்குப்பிடித்து இன்னமும் வலிமை காட்டி வருகிறது.
  • தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஜனவரி 2024 தொடக்கத்தில் 21,700 ஆக இருந்தது. செப்டம்பர் மாதம் வரை வலிமை காட்டி 26,277 என்ற உச்ச புள்ளியை தொட்டது. இதன் மூலம் 21% ஏற்றம் கண்டது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்றதால் இறக்கம் கண்டது.
  • இதனால், கடந்த ஆண்டில் கடைசி நாளின்படி, சுமார் 9% ஏற்றத்தில் முடிந்தது. பொதுவாக பங்குச்சந்தையை நேரடியாக பாதிக்கக் கூடிய காரணிகள் என்று சொன்னால், அரசியல் சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை, தேர்தல் செயல்பாடுகள், நிறுவனங்களின் லாப நஷ்ட விவரம் போன்றவையாகும்.
  • இது சம்பந்தப்பட்ட சில முக்கிய காரணிகளை இப்போது பார்க்கலாம்.மக்களவைத் தேர்தல் 2024 இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் வெளியானது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. ஆனாலும், தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிச்சயமற்ற தன்மை நிலவியதால், இந்திய பங்குச்சந்தை ஒரே நாளில் 4% வீழ்ச்சியை சந்தித்தது.
  • எனினும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக 3-வது முறையாக ஆட்சியை அமைத்தது. கூட்டணி ஆட்சியாக இருந்தாலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொள்கைகளையே பாஜக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில், இந்திய பங்கு சந்தைகள் மீண்டும் முன்னேறத் தொடங்கியது.

யென் கேரி டிரேட்:

  • இதனிடையே, ஆகஸ்ட் மாதம் இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் ஒரு குறுகிய கால வீழ்ச்சியை கண்டது. ஜப்பான் நாடு அதன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக, வட்டி விகிதத்தை, கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற அளவில் வைத்திருந்தது. இதைப் பயன்படுத்தி பல நிதி நிறுவனங்கள், ஜப்பானின் யென் நாணயத்தில் கடன் வாங்கி, உலக நாடுகளின் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தன.
  • இந்த சூழலில் ஜப்பான் மத்திய வங்கி ஆகஸ்ட் மாதம் வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியது. இதனால், உலக நாணயங்களுக்கு இடையேயான மதிப்புகள் மளமளவென மாற ஆரம்பித்தன. பங்குச் சந்தையில் முதலீடு செய்த நிறுவனங்கள், அவற்றை விற்று, கடனை அடைக்க முற்பட்டன. இதுவும் ஒரு தற்காலிக சரிவாகவே இருந்தது. அதன் பின் ஜப்பான் அரசு, இனி உடனடியாக எந்த வட்டி விகிதம் உயர்வும் இருக்காது என்று அறிவித்ததால் பங்குச் சந்தைகள் நிலைகொண்டன.
  • நிப்டியும் சென்செக்ஸும் தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வந்தன. செப்டம்பர் இறுதியில் நிப்டி 26,277 என்ற உச்சத்தையும் சென்செக்ஸ் 85,978 என்ற உச்சத்தையும் எட்டின. இதன்மூலம் இந்திய பங்குச் சந்தைகள் ஓராண்டில் 25 சதவீதத்துக்கு மேல்் உயர்ந்து இருந்தன. பெரும்பாலான நிறுவன பங்குகளின் மதிப்பு கூடுதல் மதிப்பை (Overvalue) எட்டி உள்ளதாக கருத்து நிலவியது. இதனால் சந்தை எப்போது வேண்டுமானாலும் சரியலாம் என்று கருதப்பட்டது.

இரண்டாம் காலாண்டு முடிவுகள்:

  • இந்த சூழ்நிலையில்தான், ஜூலை முதல் செப்டம்பர் வரை முடிந்த இரண்டாம் காலாண்டு லாப நஷ்ட கணக்குகள் வெளியாயின. கடந்த சில காலாண்டுகளாக இந்தியா ஒரு பலமான வளர்ச்சிப் பாதையில் இருந்து கொண்டிருந்த நேரத்தில், 44% நிறுவனங்கள் சந்தை எதிர்பார்ப்பை விட குறைந்த லாபத்தையே ஈட்டின.
  • 41% நிறுவனங்கள் கூடுதல் லாபத்தை காட்டின. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் நுகர்வு குறைய ஆரம்பித்தது. இதனால் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜிடிபி)-யின் அளவும் குறைந்தது. இந்த சூழல், பங்குச் சந்தைக்கு நிச்சயமற்ற தன்மையை வலுப்படுத்தியது, அடுத்த இரண்டு, மூன்று காலாண்டுகளுக்கு இதுபோன்ற சிரமம் இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

அந்நிய நிறுவனங்கள்:

  • இந்த அச்சம் காரணமாகவும், கிடைத்த லாபத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற காரணத்தாலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த பங்குகளை தொடர்ந்து விற்கத் தொடங்கினர். சந்தையும் தொடர்ந்து விழ ஆரம்பித்தது. 2024-ல் நிகர அளவாக சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு பங்குகளை விற்று இருக்கிறார்கள்.
  • ஆனாலும், பெரும் வீழ்ச்சியில் இருந்து தப்பியதற்கு காரணம், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பாக பரஸ்பர நிதி நிறுவனங்கள் சுமார் ரூ.5.25 லட்சம் கோடி அளவுக்கு பங்குகளை வாங்கி தள்ளி இருக்கிறார்கள். இதற்கு காரணம் சிறுமுதலீட்டாளர்கள், SIP மூலமாக கடந்த ஆண்டில் சுமார் ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேலாக முதலீடு செய்துள்ளார்கள்.
  • கரோனா தாக்கத்துக்குப் பிறகு சீன பொருளாதார வளர்ச்சி குறைந்து, பங்குச் சந்தைகள் மந்தமாக இருந்தன. இதையடுத்து, அந்நாட்டு அரசு பொருளாதாரத்தை ஊக்குவிக்க சில சலுகைகளை அறிவித்தது. இதனால் அந்த நாட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இதுவும் இந்திய பங்குகளை விற்றதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

போர் பதற்றம்:

  • இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரேல், ஈரான் நாடுகள் பரஸ்பரம் குண்டு வீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தின. இது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் உலக பங்கு சந்தைகளும் சற்றே இறக்கத்தை கண்டன.

அமெரிக்க தேர்தல்:

  • நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் பலமான வெற்றியை பதிவு செய்து, அதிபராக தேர்வானார். இதனால் டாலர் மதிப்பு உயர்ந்தது. கிரிப்டோ கரன்சிகள் மதிப்பு உயர்ந்தது. ஆனால் இந்திய பங்கு சந்தைகள் இறங்கு முகமாகவே இருந்தன. காரணம், ட்ரம்ப்பின் கொள்கை, இந்திய பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
  • எனவே, இந்திய பங்கு சந்தைகள் கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வலிமையாக இருந்தாலும், கடைசி மூன்று மாதங்கள் வலிமை குன்றி காணப்பட்டது. இனி 2025-ம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைக்கு எப்படிப்பட்ட ஆண்டாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம். 2024 முடிவில் பங்குச்சந்தை சற்றே, சரிவுடன் காணப்பட்டாலும், ஜனவரி 2025, ஒரு புத்துணர்வை கொடுக்க ஆரம்பித்துள்ளது.
  • இதற்கான காரணம், டிசம்பர் மாத வாகன விற்பனையின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. பொதுவாக பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீளும்போது, முதலில் தலைகாட்டுவது வாகனத்துறைதான். எனவே வரக்கூடிய மூன்றாவது காலாண்டு முடிவுகள், எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கலாம் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளது.

பட்ஜெட் நிலவரம்:

  • வரும் பிப்ரவரி 1-ம் தேதி புதிய அரசின் முழுமையான பட்ஜெட் வெளியிடப்பட உள்ளது. இதில் மீண்டும் இந்தியாவின் உள்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மீட்டு எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் நீண்டகால முதலீட்டாளர்கள் பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எல்லா இறக்கங்களையும் தாண்டி, இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமுகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories