TNPSC Thervupettagam

90 மணி நேர வேலை: கூடிப்பேசி முடிவெடுக்கலாம்!

January 11 , 2025 7 hrs 0 min 14 0
  • இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று சொன்ன கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (L&T) தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
  • அவர் தனது நிறுவனத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வைக்க முடியாததற்கு வருந்துகிறேன். ஞாயிறன்றும் உங்களை வேலை செய்ய வைத்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். வீட்டில் ஓய்வு எடுப்பதால் நாட்டுக்கு என்ன லாபம்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம்தான் பார்ப்பீர்கள்? உங்கள் மனைவி உங்கள் முகத்தை எவ்வளவு நேரம்தான் பார்ப்பார்? அலுவலகம் சென்று வேலை செய்யுங்கள். சீனா வளர்ந்ததற்கு அவர்கள் 90 மணி நேரம் வேலைபார்ப்பதுதான் காரணம். அமெரிக்கர்கள் 50 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். விரைவில் அமெரிக்காவையே சீனா மிஞ்சும்’’ என்று பேசியுள்ளார்.
  • அவரது கருத்துக்கு தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இளைஞர்கள் தற்போது பார்க்கும் 48 மணி நேர வேலை போதாது என்ற மனநிலை தொழிலதிபர்கள் மத்தியில் உருவாகியுள்ளதையே நாராயணமூர்த்தி மற்றும் சுப்ரமணியன் போன்றோரின் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.
  • தொழிலதிபர் கவுதம் அதானி இதுகுறித்து பேசும்போது, ‘‘தினமும் எட்டு மணி நேரம் குடும்பத்தில் செலவழித்தால் மனைவி வீட்டை விட்டு ஓடிவிடுவார். பணி – வாழ்க்கை சமநிலை என்பது அவரவருக்கு வேறுபடும். சிலர் வீட்டில் 4 மணி நேரம் இருந்தால் மகிழ்ச்சியடைவர்; சிலர் 8 மணி நேரம் இருந்தால் மகிழ்ச்சியடைவர். உங்களுடைய விருப்பத்தை என்மீது திணிக்க கூடாது. பணி – வாழ்க்கை சமநிலை அளவு அவரவர் முடிவாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளது சிந்திக்க வேண்டிய முக்கியமான கருத்தாகும்.
  • வேலை செய்யும் காலஅளவு பொதுவாக 48 மணி நேரம் என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும், சில நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப வேலை நேரத்தை நிர்ணயித்துள்ளன. உலக அளவில் சராசரியாக 40 முதல் 44 மணி நேரமாக இருந்து வருகிறது.
  • வேலை நேரம் என்பது விவாதத்துக்கு வந்துவிட்ட நிலையில், நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவை என்றால் ஆக்கப்பூர்வமாக யோசித்து நல்ல முடிவெடுப்பதில் தவறில்லை. விருப்பமுள்ள தொழிலாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கலாம். அவர்களுக்கு சம்பளத்துக்கு மேல் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் முடிவெடுக்கலாம்.
  • தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள், அரசு தரப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து பேசி, கூடுதல் வேலை நேரத்தை முடிவு செய்வதென்றால், அதற்கு பொருத்தமான சன்மானம், உடல் மற்றும் மனநல பாதுகாப்பு அம்சங்களுடன் முடிவெடுப்பதில் தவறில்லை. அதேநேரம் தொடக்கத்தில் சலுகை அளித்து வேலைவாங்குவதுபோல ஆரம்பித்து மெல்ல மெல்ல கூடுதல் நேரத்தை கட்டாயமாக்கும் சூழலை எக்காரணம் கொண்டும் உருவாக்கி விடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories