TNPSC Thervupettagam

99 கசையடிகளிலிருந்து ஐ.நா. வரை!

November 10 , 2024 67 days 100 0

99 கசையடிகளிலிருந்து ஐ.நா. வரை!

  • ‘’கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’’ என்ற வாசகம் திருவாசகமாக இல்லாவிடினும், நம்மில் பலரது செவியேறி மிகப் பழக்கமான ஒரு வாசகமாகியிருக்கிறதல்லவா? காலம் கி.மு. 2250 எனப் பெரும்பான்மையாக வரலாறு பொருத்தப்படும் பாபிலோனின் முதல் வம்சத்து ஆறாவது மன்னர், ஹமுராபி. அவர் தனது பேரரசின் மக்களுக்கான நடத்தை விதிகளாகத் தொகுத்து நடைமுறைப்படுத்திய, 282 சட்ட உள்பிரிவுகள் கொண்ட, ஹமுராபி சட்டத் தொகுப்பில் (Code of Hammurabi) காணப்படும் இரண்டு உள்பிரிவுகளின் (196; 200) எளிமைப்படுத்தப்பட்ட வாசகம்தான் அது.
  • மிகப் பழங்காலத்துச் சட்டத்தொகுப்பான ஹமுராபி சட்டங்கள் அதி கடுமையான காட்டுமிராண்டித்தனமானவை (Barbaric), என்றும் பழிதீர்க்கும் (Retribution) வகையானது என்றும் இழிபெயர் பெற்றுள்ளதை அறிவோம்.
  • பற்பல நூறாண்டுகள் கடந்தும் நில்லாது சுழலும் உலகில், ‘புதுயுகம்’, ‘அறிவியல் உலகம்’, ‘உலகெலாம் மனித உரிமைகளின் மகத்துவம் மலர்ந்து உணரப்பட்டு வருங் காலம்’ என்றல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொண்டு வாழ்ந்து வருகின்ற இந்தக் காலத்திலும், ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற வகைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நாடுகளும் இருப்பதைக் கண்டு இதயம் கனக்கிறது.
  • "ஹமீத், எஸ்" எனக் குறியீடாக அடையாளப்படுத்தப்படும் ஒரு இளைஞரது இடது கண் மற்றும் வலது காது அறுவை (சிகிச்சை?!) செய்யப்பட்டு அகற்றி எறியப்பட்டது. ஏன்? இந்த ‘’ஹமீத், எஸ்" என்பவர், 2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில், மற்றொரு நபர் மீது அமிலம் வீசியதால், பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது இடது கண், வலது காதை இழந்தாராம்!
  • இதேபோல, 2009-ல் மற்றொரு மனிதர் மீது அமிலம் வீசி அவருடைய பார்வைத்திறனைப் பாதிக்கச் செய்ததற்காக, மார்ச் 2015-ல் ஒரு நபர் வலுக்கட்டாயமாக விழியிழக்கச் செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை அரசு தெரிவிக்கவில்லை.
  • 26 ஜூன் 2015-ல் மஷாத், மத்திய சிறைச்சாலையில் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரின் இரண்டு கைகளையும் அதிகாரிகள் வெட்டி எடுத்துள்ளனர் (நம்ம ஊரில் வழுக்கி விழுந்ததால் தேவைப்படும் மாவுக்கட்டு மட்டுந்தான்!).
  • இதே ஆண்டில், ரமலான் நோன்பு நோற்காத குற்றத்திற்காக அம்மாதத்தின் முதல் 15 நாள்களில் 480-க்கும் மேற்பட்டோருக்குப் பொதுவெளியில் கசையடி!
  • இவையெல்லாம் ‘சும்மா, ‘ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற வகையான (random) சாம்பிள்கள்தான்! இவ்வகைப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலாக 2015 ஆம் ஆண்டுக்கு மட்டுமே ஐ.நா. அவையின் 26 பக்கப் பட்டியல் பொது வெளியில் இருக்கிறது. மேற்சொன்ன செய்திகள் யாவும் அந்த அறிக்கையில் இருப்பவைதான்.
  • ஐ.நா. அமைப்பின் மனித உரிமைக்கான கவுன்ஸிலின் வேண்டுகோளின்படி, மாலத் தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த நிபுணருமான அகமது ஷஹீத் தலைமையிலான குழு தகவல்களை சேகரித்துச் சரிபார்த்து நடுநிலையான ஒரு அறிக்கையை 2015-ல் வழங்கியது. இவ்விஷயத்தில் குறிப்பிட உரிய செய்தி யாதெனில், 2011 முதல் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளராகச் (Special Rapporteur) சிறப்பாக, சீரிய நடுநிலையோடு செயல்பட்டுவந்த அகமது ஷஹீத் மட்டுமல்ல, ஐ.நா.வின் பணிகளுக்காக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் யாரையும் 2005 முதலே தன் நாட்டிற்குள் நுழையவிடாமல் தொடர்ந்து அந்நாட்டரசு தடுத்து வருகிறது.
  • அந்நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்து அகமது ஷஹீத் அளித்த மேற்படி ஐந்தாவது அறிக்கையைச் சுட்டிக்காட்டி - நாம் முன்னர் கண்ட ‘சாம்பிள்’ விஷயங்கள் குறித்து - தமது தரப்புக் கருத்துகளை அளிக்குமாறு அந்நாட்டு அரசைக் கேட்டுக்கொண்டதற்கு, அதிகார முழுமை கொண்ட அறிக்கையாக அந்நாட்டரசு அளித்திருக்கும் பதிலில்தான் கீழுள்ளவாறு விநோதமாக விளக்கப்பட்டிருக்கிறது.
  • முன் குறிப்பிடப்பட்ட யாவும், ‘’புதிய குற்றங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காகவும், குற்றம் செய்து பிடிபட்டு, அதற்குப் பின் அவர்களுக்கு ஏற்படப்போகும் (தேவையற்ற!) சிறைவாசங்களுக்கு மாற்றாகவும் முன்கூட்டிச் செயல்படுத்தப்படும் எச்சரிப்பு ஏற்பாடுகள் (Warnings to prospective crime-doers)’’ என்கிறது அரசு. மேலும் இவற்றைத் "சித்திரவதைகள்" என்று யாரும் தவறாகக் கருதிவிடக்கூடாதாம்! அந்நாட்டரசு கூறுகிறது.
  • அள்ளக் குறையாத ‘அமுத சுரபி’ (?) போல, ஆண்டுக்காண்டு இந்த வகை ‘கிசாஸ்’ (Qisas) அல்லது "பழிதீர்ப்புத் தண்டனைகளும்’’ (“retribution-in-kind” punishment) அவற்றின் வெவ்வேறு வெளிப்பாடுகளும் தீர்ந்தபாடில்லை. பின்வரும் செய்திகளும்கூட, உறுதி செய்யப்பட்டுள்ள கூடுதல் தகவல்களாக நமக்குக் கிடைத்திருப்பனவற்றில் கொஞ்சம்தான்.
  • 17 செப்டம்பர் 2022 முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ( 8 பிப்ரவரி 2023 வரை) போராட்டங்களை ஆதரித்ததற்காக அல்லது அவற்றில் பங்கேற்றதற்காக இருபதாயிரத்திற்கு மேற்பட்ட சாதாரணக் குடிமக்கள் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறையில் உள்ளனர்.
  • கிடைத்திருக்கும் தகவல்களை ஒரு மேலாட்டமாகப் பார்த்தோமானால், 2014 ஆம் ஆண்டில் 753, 2015-ல் 877, 2022 ஆம் ஆண்டில் தூக்குத் தண்டனை 582 பேர்களுக்குத்தான் கிடைத்தது. அந்த ஆண்டு எண்ணிக்கைக் குறைபாட்டை ஈடுசெய்நோக்கில், 10 சிறுமிகள் உட்பட 44 சின்னஞ்சிறு குழந்தைகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2023-ல் 834 நபர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த எண்ணிக்கைகள் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 75 சதவீதம் அதிகமாம்! (சபாஷ், சரியான வளர்ச்சி!).
  • வெளிப்படையான அரசாங்க நடவடிக்கைகள், நீதிமன்றச் செயல்முறைகள், உரிய, நியாயமான விசாரணைகளுக்கான உரிமைகள் வேண்டி நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 2022-ல் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த நான்கு தூக்குத் தண்டனைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேருக்கு (போனஸாக) மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
  • உலகிலேயே அதிக அளவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தூக்கிலிடப்படுவது நிகழும் நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் முயற்சியில் இந்நாடு தோற்பதேயில்லை. இது போக, உலக ரெக்கார்டு ஒன்றையும் இந்த நாடு விடாமல் தொடர்ந்து தன் வசமே வைத்து வருகிறது. அது, உலக நாடுகள் முழுவதிலும் தூக்கிலிடப்படுகிறவர்களின் மொத்த எண்ணிக்கையில் 74 சதவீதம் இந்த நாட்டில்தான் என்பதே! (உலகிற் சிறந்த தூக்குத்தூக்கி!).
  • பல விசாரணைகளில் சித்திரவதை செய்து நிர்ப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நீதிமன்றங்களால் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டில் ‘ஈர்க்கிடைப்படா’த் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுவரும் மோசமான நடவடிக்கைகள், அதீத தண்டனைகள் முதலிய அனைத்துமே, பன்னாட்டுச் சாசனமாகியுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR ) 7-வது பிரிவுக்கும் மற்றும் பல பிரிவுகளுக்கும் முற்றிலும் எதிர்நிலையில் நிற்கின்றன. இதனை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் குழு நீண்டகாலமாகத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது, வெளிப்படையாகவே கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது. அசைவதில்லையே அந்நாடு, ஈரான்!
  • ஹமுராபி மரபு தொடர்கிறது, கிசாஸ் (Qisas) என்ற பெயரில். இக்கட்டுரை வடிவாகிக்கொண்டிருக்கும் நாளில், அந்நாட்டில் மதச் சிறுபான்மையாளனான, 23 வயது, யூத இளைஞனொருவனைத் தூக்கிலிட்ட துயரைச் செய்தித் தாள்கள் தாங்கி வந்திருக்கின்றன. 2022 ஆம் ஆண்டில், அந்த இளைஞனுக்கும் இன்னொருவருக்கும் நடைபெற்ற தகராறில், எதிரவர் இறக்க நேர்ந்து விட்டதால், இறந்தவரது குடும்பத்தினர் உறுதியாக கிசாஸ் (Qisas) வலியுறுத்தியதால் இத்தண்டனை.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் 142 நாடுகளின் நிலவரங்களை 2014 ஆம் ஆண்டில் ஆராய்ந்து ஐ.நா. அமைப்பொன்று பட்டியலிட்டிருப்பதில் மேற்கண்ட ‘சிறப்புகள்’ பல பெற்றிருக்கும் ஈரான் நாடு 137 ஆவது இடத்தில் அமர்ந்திருக்கிறது.
  • ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்டுள்ளன என்பது உலகறிந்த தகவல். உலகின் பிற பகுதிகளில் வாழும் பெண்களைவிட மிகவும் வித்தியாசமான கடுஞ்சிரமங்களை ஈரானிலும் அருகிலுள்ள இஸ்லாமிய சர்வாதிகார நாடுகளிலும் பெண்கள் அனுபவிக்கிறார்கள். ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இங்கு பாடினார்.
  • ஆனால், பெண்ணாக பிறந்தது, இருப்பது (‘For the crime of born as a girl’) ஒரு 'குற்றம்' என்ற கருத்தடிப்படையிலேயே ஈரான் போன்ற நாடுகளில் செயல்பாடுகள் நிகழ்கின்றன. குறிப்பாக, ஈரானில் பெண்கள் மீதான அரசாங்க அடக்குமுறையின் ஒரு பகுதியாகப் பெண்களுக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன, இத்தகு கடுஞ்சட்டங்கள் உண்மையாகவே குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளவாறு உள்ளனவா என்றால், இல்லையே!
  • ஈரானின் அதி உயர் தலைவராக அயத்துல்லா அலி கமேனி பொறுப்புக்கு வந்த பின்தான் பெண்கள் ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கினார். ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
  • இவ்வாண்டு (2024 ஜூலை மாதத்தில்), தலைநகர் தெஹ்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாகக் காவல்துறைக்கு அநாமதேயத் தகவல் எட்டியதைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருந்தது தெரிய வந்ததையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு சீல் வைத்து மூடியுள்ளது. இரண்டொரு நாள்களுக்கு முன் (7, நவம்பர் 2024) தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கட்டாய ஹிஜாப்புக்கு எதிர்ப்புக் காட்டும் வகையில், சாலையில் ‘ஆடை களைதல்’ நிகழ்வு நடத்திய செயலும், அதனைத் தொடர்ந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவி மாயமாகியிருப்பதும் ஊடகப் பரபரப்பாகியுள்ளது.
  • ‘’ஈரானில் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு கணவன் விரும்பவில்லை என்றால், அவன் தன் மனைவி வேலைக்குச் செல்வதையோ, படிப்பதையோ, வெளிநாட்டுக்குப் பயணிப்பதையோ இங்கு நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்படி தடுக்கலாம். பெண், ஆணின் சொத்து,’’ என்று இங்கே நாம் சந்திக்கவிருக்கும் கவிஞர் ஆணித்தரமாகவும் கவலையோடும் தெரிவிக்கிறார்.
  • ‘’ஆண் - பெண் சமமல்ல ஈரானில்; பெண் இரண்டாம் நிலைதான் எப்போதும். அவள் பின் தப்பாமல் தொடரும் சமூக, அரசாங்கக் கண்காணிப்புகள்; நடத்தைகளுக்கான தணிக்கைத் (Censor), துன்புறுத்தல்கள்; இவற்றோடு, பாலினம் காரணமாகவே பெண்கள் வெறுப்புப் பேச்சுக்கு உள்படுபவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்கிறார் அப்பெண் கவிஞர்.
  • இவ்வாறெல்லாம் பெண்களை ஈரான் நாடு தொடர்ந்து நடத்தும் பெரும் பாதக நிலைமைகளைக் கண்டு கவலையுற்ற ஐ.நா.வின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான பெண்கள் உரிமை அமைப்பு டிசம்பர் 2022-ல் ஒரு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதன் மூலம் பெண்கள் உரிமைக்கான ஆணைக் குழுவில் இருந்து முதல்முறையாக நீக்கப்பட்ட ஒரு நாடு எனும் இழிபெருமையும் ஈரானுக்குக் கிடைத்திருக்கிறது.
  • இத்தகைய கருஞ்சூழல்கள் கவ்விக் கிடக்கும் ஈரான் நாட்டில் ஃபதேமே எக்தேசரி, (Fateme Ekhtesari) என்ற இந்நாட்டுப் பெண் கவிஞருக்கு (பிறந்த ஆண்டு 1986), அவரது கவிதையால் ஏற்படுத்தப்பட்ட இன்னல்கள், தண்டனைகள் என்னவெனக் காண்போம்... வாங்க.
  • மருத்துவத் துறையில் ‘மிட்ஒய்ஃப்’ (Midwife) படிப்பும் பயிற்சியும் பெற்றுப் பணிபுரிபவராக இருந்தாலும், பாரசீக (Persian) மொழி மீது பேரன்பும் ஈர்ப்பும் கொண்டு மொழி, இலக்கியத் துறையிலும் பின்னர் பயின்று பட்டம் பெற்றுள்ளார் எக்தேசரி. ‘மத்தளத்திற்கு இருபக்கமும் அடி’ என்பதிற்கிணங்க, ஈரான் நாட்டில் எக்தேசரிக்குப் பெண் எனுங் குற்றமும் அவரது கவிதைதான் குற்றம் என்பதும் சேர்ந்து இரட்டை இடியாக இறங்கியது அவர் வாழ்வில்.
  • எண்ணெய்நிறை ஈரான், எக்தேசரிக்கு ஏன் ‘இன்னல்நிறை’ ஈரானாக மாறியது?
  • பெண்களுக்கான அடிப்படை உரிமைகளனைத்தும் நசுக்கப்பட்டு வரும் ஈரானில் அவர் மனித உரிமை, பெண்களுரிமை பாடும் கவிஞராக இருந்தது முதன்மைக் காரணம். அவர் தன்னைப் பற்றிக் கூறியிருப்பதில் இருந்து சில செய்திகளைப் பார்ப்போம். ‘நான் ஃபதேமே எக்தேசரி, ஒரு ஈரானிய கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஆர்வலர், என் எழுத்துப் பயணம் சமூகம் தொடர்பான தளங்களில் உள்ளார்ந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் நிறைந்தது. (இது போதாதா ஈரானில்?)
  • ஒரு மருத்துவச்சியின் பின்னணியுடன், சொற்களின் உலகில் என்னை நான் புதிதாய்க் கண்டுவருகிறேன். இன்றுவரை பத்து வெளியீடுகளுடன் பல்வேறு இலக்கிய வகைகளை உள்ளடக்கிய படைப்புகளைத் தொடர்ந்து வடிவமைத்து வருகிறேன். எனது இலக்கியத் தேடலின் மையம் "பின்நவீனத்துவ கஸல்" என்று அழைக்கப்படும் ஈரானிய இலக்கிய இயக்கம் ஆகும். இந்த இயக்கம் பாலியல், மதம், பாலினம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நடந்து வரும் போராட்டங்கள் பற்றிய பேசுபொருள்கள் பொதிந்ததாகும். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இசைத் தொகுப்புகளாகவும் மாற்றப்பட்டுவரும் எனது கவிதைகள், மனித அனுபவத்தின் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துரையாடல்களைச் செழுமையாக வளர்க்க முயல்கின்றன.
  • எழுதுவதைத் தாண்டி, நான் செயல்பாட்டை விரும்புகிறேன், எனது எழுத்துகளில் பெண்களின் பிரச்சினைகளைப் பெரிதும் பேசுகிறேன். பாலினப் பாகுபாடு மற்றும் குடும்ப வன்முறைக்குத் தொடர்ந்து எனது கவிதைகள் மூலம் சவால் விடுகிறேன். இவற்றால்தான் 2015-ல் ஈரானில் நான் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கருதுகிறேன்.
  • எனது முதல் கவிதைத் தொகுப்பு (Yek bahse feministi ghabl az pokkhtane sibzaminiha, 2010 Feminist discussions before cooking potatoes, உருளைக்கிழங்கு வேகும்போது ஒரு பெண்ணிய விவாதம்). நூலை வெளியிட அனுமதி வேண்டி, ஈரானிய தணிக்கைக் குழுவிடம் நூற்பிரதியைத் தாக்கல் செய்தேன். என் நாட்டுத் தணிக்கையின் தீவிரம் எனக்குத் தெரியுமாதலால், அவர்கள் என்னென்ன சொற்கள், வார்த்தைகளிருந்தால் ஆட்சேபம் தெரிவித்து அனுமதி மறுப்பார்கள் என்று யூகித்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ‘சுதந்திரம்’, ‘காதல்’, ‘முத்தம்’, ‘தழுவுதல்’, ‘மார்பு’, ‘நிர்வாணம்’ போன்ற பல சொற்களை அச்சிடாமல் அவற்றின் இடத்தில் ...... ...... புள்ளிகளை வைத்தேன். இயந்திரத்தனமாகத் தணிக்கை செய்யும் அரசுத் தணிக்கையாளர்களுக்கு இலக்கியம் புரிந்தால்தானே ... ... புள்ளியுள்ள இடங்களில் என்ன சொற்கள் வரும் என யூகம் செய்ய முடியும்? அவ்வளவு இலக்கிய அறிவற்ற அலுவலர்களால், என் நூலுக்கான அனுமதி தடையேதுமின்றிக் கிடைத்தது.
  • நூல் வெளியிட அனுமதி கிடைத்தாலும் ஒலிக்க விரும்பிய என் குரலை அடக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. கவிதையில் பொருத்த நினைத்த என் சொற்களையும் நான் இழக்கத் தயாராக இல்லை. ஆகவே நூலை வெளியிட அனுமதி வந்ததும், அச்சிடப்பட்டிருந்த நூல்களில் ... ... புள்ளி வைத்திருந்த இடங்களில் பொருந்தும் சொற்களை நானே பேனாவால் ஒவ்வொரு பிரதியிலும் எழுதி விற்பனைக்கு அனுப்பினேன்.
  • ஏற்கெனவே நூற்பிரதி வாங்கியவர்களுக்கு உதவுவதற்காக அப்புள்ளிகள் உள்ள பக்கங்களைக் குறிப்பிட்டுப் புள்ளிகளுக்கு வரிசை எண்ணும் கொடுத்துக் கையால் எழுதிய சொற்களை இணையத்தி்ல் பதிவேற்றி உலவவிட்டேன்’’ என்று 2021, மார்ச் மாதம், சாம்சோனியா வே என்ற பத்திரிகையாளருக்கு ஒரு ஜூம் செயலி வழியான பேட்டியில் எக்தேசரி தெரிவித்திருக்கிறார்.
  • இவ்வாறு, எக்தேசரி, தனது இருபத்தி மூன்றாவது வயதில், தணிக்கையாளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி எதுவும் தூவாமல், புள்ளிகளைத் தூவியே தணிக்கைத் தடைகளைக் கடந்து அவரது கவியாற்றைப் பாயவிட்டவர். தன் கவிதைக் குரலை முடக்காமல் ஒலிக்கச் செய்தவர். ஐந்தாண்டுகள் கழித்து 2015-ல் இவ்விஷயம் வெளிப்பட்ட பின், ஈரான் தணிக்கையாளர்கள் தடை செய்யப்பட வேண்டிய சொற்களின் பட்டியலில் தற்போது, ... ... (புள்ளிகளையும்) சேர்த்திருக்கின்றனர்!
  • இதிலிருந்தே நமக்குத் தெரிந்திருக்கும் ஈரானில் இவரது இன்னல்களுக்கான காரண வேர்கள் யாவையென.
  • 2013 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில், கோதன்பேர்க் நகரில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பிய பின், கவிஞர் எக்தேசரி துருக்கி செல்ல முற்படும்போது டிசம்பர் 2013-ல் இஸ்லாமிய புரட்சிகரக் காவலர் படையின் (IRGC ஐஆர்ஜிசி) உளவுத்துறைப் பிரிவால், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, தெஹ்ரானின் ‘இழிபுகழ்’ எவின் (Evin Prison) சிறையில் 38 நாள்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான தொடர் விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்டார்.
  • ‘’எவின் சிறையில் இருந்தபோது, வருத்தும் உளவியல் அழுத்தங்களுக்கு நான் உள்படுத்தப்பட்டேன். எனது சில கவிதைகள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டேன். மேலும், ஈரான் நாட்டிலிருந்து தப்பி ஓடிய பாப் இசைப் பாடகர் நஜாஃபி என்பவர் எனது நூலிலுள்ள காதற் கவிதையொன்றை விடியோவாக வெளியிட்டிருப்பது குறித்தும் விடிய விடிய விடாமல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தனர்’’ என்றும் எக்தேசரி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
  • கைது செய்யப்பட்ட பின்னர் எக்தேசரியின் வீடு சோதனையிடப்பட்டது, அவரது மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்குகள், பயன்படுத்திய செல்போன்கள், நோட்டுகள், குறிப்புகள், பேடுகள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டன. அரசு எந்திரத்தின் நீள் கொடுங்கரங்களுக்கு எட்டாமல் தப்பிய - ஆன்லைனில் வெளியிடப்பட்டு அழிவிலிருந்து தப்பி நிற்பவை, பென் ட்ரைவ்கள், ஹார்டு டிஸ்க்குகள் போன்ற வெளிப்புறச் சேமிப்புக் கலங்களில் அவராலும் ஆங்காங்குள்ள அவரது நண்பர்களாலும் பாதுகாக்கபட்டிருப்பவை தவிர - எக்தேசரியின் அனைத்து நூல்களும், எழுத்துகளும், குறிப்புகளும், படைப்புகளும், இசைக் குறுந்தகடுகளும் முற்றாக அழிக்கப்பட்டன.
  • நூலகங்களிலிருந்தும், புத்தக விற்பனைக் கடைகளிலிருந்தும் – புத்தகப் பொருட்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்த நூற் பிரதிகள்கூட - அனைத்தும் போர்க்கால அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டுத் - தகனம் செய்யப்பட்டன. அவரது நூல்களும் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
  • முப்பத்தெட்டு நாட்களுக்குப் பின் ஒருவழியாகப் பிணை கிடைத்து, எவின் சிறையிலிருந்து எக்தேசரி தற்காலிகமாக வெளியில் வந்தார். ஆனாலும், விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதி என்பதால், பிணையில் வெளியிலிருந்தாலும், பாதுகாப்புக் காவலர்களின் நிலையான கண்காணிப்பு, நிழல்போல் தொடரும். கண்காணிப்புக் காலத்திலும் விசாரணை என்ற பெயரில் தொடர் துன்புறுத்தல்கள் வாடிக்கையானது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரத்து செய்யப்பட்டது.
  • எந்தவிதமான வெளிப்படைத்தன்மையோ, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நியாயமுறையான விசாரணைகளோ இல்லாமல் - குறிப்பாகக் கடைசிநாள் விசாரணைக்கு முன்னரே தேதியிட்ட (!) - நீதிமன்றத் தீர்ப்பின்படி, 2015 அக்டோபர் மாதம் 12 ஆம் நாள், எக்தேசரிக்கு பதினோராண்டுகள் ஆறுமாதம் (138 மாதங்கள்) சிறைத் தண்டனையும், கூடுதலாகப் பொதுவெளியில் நிறைவேற்ற வேண்டுமெனும் குறிப்புடன், 99 கசையடிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
  • தண்டனைக்கான காரணங்களாக, "ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள்", "புனிதங்களை அவமதித்ததற்காக’’ (தெய்வ நிந்தனை’), "ஒழுக்கக்கேடான நடத்தை’’ என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. எக்தேசரிக்கு "புனிதங்களை அவமதித்ததற்காக’’ ஏழு ஆண்டுகளும், "ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள்", வகையில் "இணையவெளியில் அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தை (... ... சொற்களை) வெளியிட்டதற்காகவும், ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகவும் என" மூன்று ஆண்டுகளும், "அரசுக்கு எதிரான பிரசாரத்திற்காக" ஒன்றரை ஆண்டுகளும் மொத்தம் பதினொரு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • நெடுங்காலச் சிறைத் தண்டனையும், (பொதுவெளியில்) 99 கசையடிகளும் கவிதைச் சன்மானமாக கவிஞர் எக்தேசரிக்கு மேற்கண்ட மூன்று முதன்மைக் கொடுங்குற்றங்களைச் சுட்டிக்காட்டிதான் வழங்கப்பட்டது. அந்தக் கொடுங்குற்றங்கள் குறித்து கொஞ்சம் விளக்கம் காண்போமா?
  • பொது வெளியில் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு வழங்கப்பட்ட 99 கசையடித் தண்டனையானது என்ன குற்றத்திற்காக வழங்கப்பட்டது?
  • ஸ்வீடன் நாட்டில் இலக்கிய நிகழ்வின்போது கலந்துகொள்ள வருகை தந்த ஆண் இலக்கியவாதிகளுடன் இப்பெண் கவிஞர் அறிமுகமாகும்போது சம்பிரதாயமாகக் கை குலுக்கிய குற்றத்திற்காக!
  • விதிக்கப்பட்ட கசையடித் தண்டனையைவிடக் கொடுமையானது என்னவென்றால், அவ்வாறு எக்தேசரி இலக்கியவாதிகளிடம் கைகுலுக்கிய செயல் விபச்சாரத்திற்கீடான குற்றம் (crime, not prostitution, but of the same degree), கணவர் தவிர்த்த பிற ஆண்களுடன் பாலுணர்வுத் தொடர்பு கொண்டது (adultery) "ஒழுக்கக்கேடான நடத்தை’’ என்று சம்பிரதாயக் கைகுலுக்கலுக்கு விதவித வண்ணங்களில் ‘ஒளிர் ஸ்டிக்கர்’ ஒட்டியதுதான்!
  • ‘’புனிதங்களை அவமதித்தது’’ என்ற குற்றம் எக்தேசரி மீது சாற்றப்படுவது அதிவிநோத வகையானது. எக்தேசரியின் கவிதைகளில் ஒன்று நாடு கடத்தப்பட்ட ஈரானிய ராப் பாடகர் ஷாஹின் நஜாஃபியால் ஒரு விடியோவில் பயன்படுத்தப்பட்டது. கவிதைப் பாடலுக்கான இசை விடியோவில் ஹிஜாபின் உயர்ந்த வடிவம் என்று ஈரானிய கடும்போக்காளர்கள் பாராட்டும் கருப்பு சடோர் (chador) அணிந்த ஒரு பெண், வெளியே நன்கு தெரியும் (துணியால் மூடப்படாத) கால்களுடன் கடற்கரையில் ஓடுவதைக் காணலாம். "நீ ஒரு ஓநாய், …. நாம் வீட்டிலிருந்து… தோட்டத்திலிருந்து... வெகு தொலைவிற்கு... வெகு தொலைவிற்கு.. ஓட வேண்டும்" என்று நஜாஃபி அதில் பாடுகிறார்.
  • இதில் எக்தேசரியின் குற்றம் என்ன? இந்தக் கவிதையைத் தனது விடியோவில் பயன்படுத்த நஜாஃபி, கவிஞர் எக்தேசரியின் அனுமதியை பெற்றிருந்தாரா, இல்லையா என்பதையெல்லாம் நீதிமன்றம் கருத வேண்டுமா? இல்லையா? அதெல்லாம் அவசியமில்லை போலும் அங்கு.
  • "அது ஒரு காதல் கவிதை, எனது புத்தகத்தில் வெளியிடப்பட்ட ஒரு கலகக் கவிதை (Rebellious Poetry), அதை நஜாஃபி ஒரு பாடலாக மாற்றி விடியோவில் சேர்த்துள்ளார். அவ்வளவுதான். நான் அனுமதி ஏதும் அளிக்கவில்லை; ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’’ என்று நீதிமன்றத்தில் உண்மை கூறினார் எக்தேசரி. ஈரானில் கண்மூடிக்கொண்டு நிற்கும் நீதி தேவதைக்கு உண்மை தெரியவில்லை. கேட்கவுமில்லை போலும்.
  • (இந்தியாவில், நீதி தேவதையின் கண்கட்டு, சமீபத்தில் பணிநிறைவடையவிருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிமான் அவர்களால் களையப்பட்டிருக்கிறதாம்! - பார்க்க: சொல்லப் போனால்... கண் திறக்கப்பட்ட நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்! - dinamani.com 27 அக். 2024, எம். பாண்டியராஜன் சிறப்புக் கட்டுரை) 'புனிதங்களை அவமதித்ததாக' குற்றம் சாட்டப்பட்ட ஒரு தனிநபருடன் தொடர்பிலிருக்கும் / ஒத்துழைக்கும் எவரும் 'புனிதங்களை அவமதிக்கிறார்கள்' என்றுதான் அர்த்தம்.
  • ஆதலால், 'புனிதங்களை அவமதித்ததாக'க் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்ட ராப் பாடகர் ஷாஹின் நஜாஃபியுடன் எக்தேசரிக்கு (முன்குறிப்பிட்ட விடியோ மூலம்) தொடர்பு இருப்பதால் எக்தேசரி 'புனிதங்களை அவமதித்திருக்கிறார்’’ என்று ‘ஐ.ஆர்.ஜி.சி’ விசாரணையாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததுதான் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • குற்றச்சாட்டுகளில் மற்றொன்று, "ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள்" புரிந்தது என்பதாகும். கவிஞர் எக்தேசரி ஸ்வீடன் நாட்டுக்குப் பயணம் செய்தபோதும், அவர் கலந்து கொண்ட இலக்கிய நிகழ்வையொட்டிய கலந்துரையாடல்களிலும் பலருடன் ஹிஜாப் அணியாமல் அமர்ந்து பேசியிருக்கிறார் ( ‘ரோம் நகரில் இருக்கும்போது ரோமானியர்கள் போல் நடந்து கொள்’ என்பது ஈரானியக் குடிமக்களுக்குச் செல்லுபடியாகாது போல).
  • ஹிஜாப் அணியாத செயல் ஈரான் சட்டமான ‘கட்டாய ஹிஜாப்’ சட்டத்தை மீறியதாகும்; அரசாங்கத்தை எதிர்ப்பதும் ஆகும். மேலும், அவருடன் பயணித்தவர்கள், பேசியவர்களில் பலர் ஈரான் நாட்டுக்கெதிராகச் செயல்படும் ஒற்றர்கள். அவர்களிடம் எக்தேசரி ஈரான் நாட்டைப் பற்றி, நிலவும் அரசியல், சமுதாய சூழல்கள் குறித்து எதிர்மறையான செய்திகளைப் பகிர்ந்துள்ளார். ஆகவே இதுவும் நாட்டிற்கெதிராகச் செயல்பட்டதாகும் என்றது அரசுத் தரப்பு .
  • இவ்விஷயத்தில் குறிப்பிட உரியது என்னவென்றால் எக்தேசரியின் பயணத்தின்போது, இலக்கிய நிகழ்வில், மற்றும் கலந்துரையாடல்களின்போது நிகழ்ந்த விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் முன்கூட்டியே ஈரான் அரசுக்குத் தெரியாது. டிசம்பர் 2023-ல் எக்தேசரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு எவின் சிறையில் அடைக்கப்பட்டபின் அவர் வீடு சோதனையிடப்பட்ட விவரத்தை முன்பே குறிப்பிட்டிருக்கிறோம்.
  • அந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட அவரது மடிக்கணினி, செல்போன் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள், குறிப்புகளையும், அவர் கைது செய்யப்படும்போது கையில் வைத்திருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனிலிருந்த படங்களையும் வைத்துப் புனையப்பட்ட புதுக் குற்றச்சாட்டாகும் இது. முதலில் காரணமின்றிக் கவிஞரைக் கைது செய்து விட்டுக் காரணங்களையும் ஆதாரங்களையும் பிறகு சேகரித்திருக்கிறார்கள்!
  • மேலும், எக்தேசரியுடன் பயணித்தவர்கள், ஸ்வீடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் பெயர், முகவரிகள் போன்ற விவரமெல்லாம் ஈரான் அரசுக்கு எட்டிப்பெற முடியாததல்ல. அவர்களது படங்கள்கூடத் தற்போது கைவசம் உள்ளன. அவற்றுள் யார் ஒற்றர்கள் என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு நிரூபிக்க முயற்சியே செய்யவில்லை. அதுபோக அவர்களுடன் எக்தேசரி என்ன பேசினார் என்பதற்கு எந்த ஆடியோ ஆதாரங்களையும் அரசு வழக்குரைஞர் மன்றில் தாக்கல் செய்யவே இல்லை.
  • பின்னர் எப்படி இந்தக் குற்றச்சாட்டு?
  • எப்படி அந்தக் குற்றச் சாட்டின் அடிப்படையில் தண்டனை? இதையெல்லாம் கேட்கலாமா, ஈரானில்?
  • எல்லாவற்றையும் மீறிய அநியாயம் ஒன்று எக்தேசரியின் வழக்குரைஞரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது என்னவென்றால் எக்தேசரி வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் மாதம், 2015-ல். ஆனால், "வழக்குரைஞர் பார்த்த ஆவணங்களில் / கணினியில் நீதிமன்ற தீர்ப்பு பதிவு செய்யப்பட்ட தேதி ஜூன் 22, 2015. அதாவது, கடைசி விசாரணை அமர்வுக்கு முன்னரே - சட்டத்தரணியும் சந்தேக நபர்களும் தமது தரப்பு இறுதி வாதங்களை முன்வைப்பதற்கு முன்னரே- இந்த தீர்ப்பு எழுதப்பட்டு ஆவணங்களிலும் பதிவாகிவிட்டது.’’
  • நல்லவேளையாக 2015-ல் வழங்கப்பட்ட (11.5 ஆண்டுச் சிறை மற்றும் பொதுவெளியில் 99 கசையடித்) தண்டனையை எதிர்த்து முறையீடு செய்ய அனுமதித்தார்கள். முறையீடு செய்யப்பட்டது (2016-ல்). இனி இந்த நாட்டில் இருக்க முடியாது என்ற நிலைக்கு எக்தேசரியும், அவருடன் கைதாகி ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அவரது ஆண் நண்பர், கவிஞர், மருத்துவராகிய மெஹ்தி மூசாவியும் (Mehdi Moosavi) தள்ளப்பட்டனர்.
  • இருவரும் பல இன்னல்களைச் சாதுரியமாக கடந்து, மிக ரகசியமாக, ஈரான் நாட்டு எல்லைக் காவற்படையின் கழுகுக் கண்களில் சிக்காமல், பல மைல்கள் நடந்து, கிடைக்கின்ற வாகனங்களில் (ஒட்டகம், கோவேறு கழுதை உள்பட) பயணித்து, ஜனவரி 2016-ல் முதலில் துருக்கி நாட்டிற்குத் தப்பிவிட்டனர். இருவரது பாஸ்போர்ட்களும் ஏற்கெனவே ஈரானில் ரத்து செய்யப்பட்டு விட்டதால் எந்த ஆவணங்களுமில்லாமல் துருக்கியில் தொடர்ந்து இருப்பதில் இவர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
  • நல்வாய்ப்பாக இன்டர்நேஷனல் சிட்டிஸ் ஆஃப் ரெஃப்யூஜி நெட்வொர்க் (ICORN) மூலம் 2017 ஆம் ஆண்டில் இருவருக்கும் பாதுகாப்புக் கிடைத்தது. அதன் மூலம் இருவரும் நார்வேயின் லில்லிஹாமரில் இரண்டு ஆண்டுகள் நகரத்தின் விருந்தினர் எழுத்தாளராக வசித்து வந்தனர். அதன் பின்னரும் அவர்களிருவரும் லில்லிஹாமரில் தொடர்ந்து தங்கியிருக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தற்போது நார்வேயிலிருந்து எக்தேசரி தனது இணையருடன் (மருத்துவர் - கவிஞர் மெஹ்தி மூசாவி Mehdi Moosavi வயது 41) சர்வதேச வாழ்க்கையை வளர்த்து வாழ்ந்து வருகிறார்.
  • ஈரானை விட்டு வெளியேறியதிலிருந்து, எக்தேசரி ஒரு கவிதைத் தொகுப்பு (தி கிரேட் ஐடல், 2018); இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ( Swimming in the Acid Pool, 2017, மற்றும் Axe, 2018) எனப் படைப்புக் களத்தில் முழு ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். சமூக ஊடகங்களில் வெகு உற்சாகமாகச் செயல்பாடுகள் நிகழ்த்தியும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1,25,000-க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஈரானிலும், உலகளாவிய புலம்பெயர்ந்தோரிடையேயும் பாரசீக இலக்கியத்தில் செல்வாக்கு மிக்க கவிஞராக வளர்ந்து வருகிறார். நார்வே இலக்கிய அரங்கிலும் எக்தேசரி ஒரு மைய நபராக மாறியுள்ளார். நார்வேக்கு வந்த பிறகு, எக்தேசரி ஒரு இணையதள பத்திரிகையை- சுதந்திர ஈரானிய இலக்கியம் - நிறுவினார். தற்போது, அந்த இணைய இதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.
  • ‘’எக்தேசரியின் சக்திவாய்ந்த கவிதைகள் நவீன உள்ளடக்கம் கொண்டு, பாரம்பரியப் பாரசீகக் கவிதை வடிவங்களோடு புதுமையும் விரவி இனிமையூட்டுவதால் புகழ் பெற்றுவருகிறார்’’ என்கிறார். நார்வே விமர்சகர் இங்குன் ஓக்லாண்ட்.
  • ஈரானில் இருந்திருந்தால் அவர் இப்போதும் சிறையில்தான் உழன்றிருப்பார். துணிந்து தப்பிப் பிழைத்தார். சொந்த நாட்டைப் பிரிந்திருக்கும் சோகம் அவரிடம் தொடர்கிறதென்றாலும், இடுக்கண் களைந்து, 2017 முதல் இருக்க இடமுமளித்துக் காத்த நார்வேயிலிருந்து ஃபதேமே எக்தேசரி கவியாண்டு வருகிறார்.

நன்றி: தினமணி (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories