எதிர்பார்த்தது போலவே மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீதின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றியை அடைந்திருக்கிறது. 87 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் நாடாளுமன்றமான மஜ்லீஸில் 68 இடங்களில் வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப்பெற்றிருக்கிறது.
அதிபர் இப்ராகிம் சோலீயின் மாலத் தீவு ஜனநாயகக் கட்சித் தலைவர் முகமது நஷீதும் அடைந்திருக்கும் வெற்றி சாமான்யமானதல்ல.
அதிபர்
ஓராண்டுக்கு முன்னால், முன்னாள் அதிபர் அப்துல்லாயாமீனின் சர்வாதிகார ஆட்சி அகற்றப்படும் என்றோ, வெளிநாட்டில் குடியேறி இருந்த முகமது நஷீத் மீண்டும் மாலத் தீவுகளுக்கு வருவார் என்றோ யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. 2008-இல் நடைபெற்ற தேர்தலில், வெற்றி பெற்று மாலத்தீவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராகப் பதவியேற்றவர் முகமது நஷீத்.
ஆனால், அவருக்கு எதிராக கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டு சிக்கலான சூழ்நிலையில் 2012-இல் அவர் பதவி விலக நேர்ந்தது. அதைத்தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய அப்துல்லா யாமீன் அவர் மீது பல்வேறு வழக்குகளைத் தொடுத்து தீவிரவாத முத்திரை குத்தி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு 2016-இல் முகமது நஷீத் மாலத் தீவை விட்டே தப்பியோட வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டது.
அப்துல்லா யாமீனின் சர்வாதிகார ஆட்சிக்கும் அடாவடியான நடவடிக்கைகளுக்கும் சீனாவின் பின் துணை இருந்ததால் அவர் அசைக்க முடியாத சக்தியாகவே தொடர்ந்தார். அவரை எதிர்த்தஅரசியல் எதிரிகளையும், அவருக்குச் சாதகமாக இல்லாத உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் சிறையில் அடைத்தார்.
தனி மனித உரிமைகளுக்குத் தடை விதித்தும், இந்தியாவை அவமானப்படுத்தும் விதத்திலான பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அப்துல்லா யாமீனின் கண்மூடித்தனமான சீன ஆதரவு மாலத்தீவை மிகப் பெரிய கடன் புதைகுழிக்குள் தள்ளியிருக்கிறது.
சீனாவின் கட்டமைப்பு
யாமீன் நிர்வாகத்தின்போது அனுமதிக்கப்பட்ட சீனாவின் கட்டமைப்பு முதலீடுகளின் காரணமாக தேசத்தின் கடன் அளவு மொத்த ஜிடிபியில் கால்வாசி அளவுக்கு உயர்ந்துவிட்டிருக்கிறது. இதுவரை சீனாவின் மொத்த முதலீடு மூன்று பில்லியன் டாலரிலும் அதிகம். சீன முதலீட்டாலும், சீன நிறுவனங்களின் செயல்பாடுகளாலும் மாலத்தீவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் திவாலாகி விட்டிருக்கின்றன.
அதிபர் இப்ராகிம் சோலீயின் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, சீனாவின் பல்வேறு திட்டங்களை மறு ஆய்வு செய்ய முற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் சீனாவிடம் பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற்கும் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில் சோலீ நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
கடந்த டிசம்பர் மாதம் அதிபர் சோலீ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தபோது, 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இன்னும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. விரைவிலேயே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் முன்னாள் அதிபர் முகமது நஷீத் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவரும் நன்றிக் கடன்பட்டவரும் என்பதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்பதிலும், அப்துல்லா யாமீன் நிர்வாகத்தின்போது இந்தியாவுக்கு மறுக்கப்பட்ட திட்டங்கள் வழங்கப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கலாம்.
சீனாவின் பிடியிலிருந்து மாலத் தீவு முற்றிலுமாக விடுபடுவது என்பது இயலாது. மிகப் பெரிய அளவில் மாலத் தீவு சீனாவுக்கு கடன்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு விதத்தில் சீனா அழுத்தம் கொடுக்காமல் இருக்காது. இதேபோலத்தான் இலங்கையில் மஹிந்த ராஜபட்சஅரசு முற்றிலுமாக சீனாவிடம் இலங்கையை அடகு வைத்துவிட்ட நிலைக்கு இட்டுச் சென்றது.
இலங்கை
சீனாவின் கடன் வலையில் விழுந்த இலங்கையில் மஹிந்த ராஜபட்ச ஆட்சியை அகற்றி 2015-இல் மக்கள் மைத்ரி பால சிறீசேனாவின் தலைமையில் ஆட்சியமைத்தும்கூட, சீனாவின் பிடியில் இருந்து இலங்கையால் வெளிவர முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். முன்பைவிட மேலும் லாபகரமாக அதே திட்டங்களை மைத்ரி பால சிறீசேனா ஆட்சி, முன்பைவிட அதிகமான திட்டங்களை சீனாவுக்கு வழங்கியது.
சீனா தன்னுடைய கடன் ராஜ தந்திரத்தைக் கையாண்டு புதிய ஆட்சியாளர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து தன் வழிக்கு இலங்கையைக் கொண்டு வந்ததுபோல, மாலத் தீவையும் கொண்டு வராது என்பது என்ன நிச்சயம்?
மாலத் தீவு ஜனநாயகக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் அதிபர் சோலீக்கும், பிரதமராகப் பதவியேற்க இருக்கும் முகமது நஷீதுக்கும் தாங்கள் விரும்பும் சட்டங்களை இயற்றவும் முடிவுகளை எடுக்கவும் எந்தவித நிர்வாகத் தடையும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில், தனக்குச் சாதகமாக புதிய அரசு செயல்படாமல் போனால், முன்னாள் அதிபர் அப்துல்லாயாமீனின் துணையுடன் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளை சீனா தூண்டிவிடக் கூடும். அதை எதிர்கொள்ள அதிபர் சோலீயின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.
இந்து மகா சமுத்திரம்
இந்து மகா சமுத்திரத்தில், 1192 சிறு சிறு தீவுகளை உள்ளடக்கிய நாடு மாலத் தீவு. இந்தத் தீவுகள் சர்வதேச கடல் பாதையில் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கின்றன. மாலத் தீவை நட்புமுறையில் நெருக்கமாக வைத்துக்கொள்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக மிக அவசியம். இலங்கையைக் கை நழுவ விட்டதுபோல, மாலத்தீவில் அமைந்திருக்கும் புதிய ஆட்சியை நழுவ விடாமல் நமது நட்பு வட்டத்தில் தக்க வைத்துக்கொள்வதில்தான் இந்தியாவின் ராஜ தந்திரம் அடங்கியிருக்கிறது.