Remote work: ஆந்திர அரசின் அசத்தல் திட்டம்!
- அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்களுக்கான சர்வதேச தினமான பிப்ரவரி 11-ம் தேதி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அருமையான திட்டமொன்றை அறிவித்துள்ளார். வீட்டிலிருந்து பணி என்ற நடைமுறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுதல் (Remote work), இணைந்து பணியாற்றும் இடங்கள் (Co-working spaces), அண்டை பணியிடங்கள் (Neighborhood workspaces) ஆகியவற்றை ஆந்திராவில் உள்ள நகரங்கள், சிற்றூர்கள், மண்டலங்கள் அளவில் பெரிய அளவில் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
- ஆந்திராவில் தகவல் தொழில்நுட்ப திட்டம் 4.0 என்ற பெயரில் உருவாகும் இத்தகைய பணியிடங்களுக்கான ஆதரவையும், உதவிகளையும் அரசே செய்யும் என்று அறிவித்துள்ளது மிகப் பெரிய தொலைநோக்குத் சிந்தனையாக பார்க்கப்படுகிறது.
- இதன்மூலம், கிராமங்கள், நகரங்கள் என்ற வேறுபாடின்றி ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி, குடும்பச் சூழ்நிலையில் நெருக்கடியில் உள்ள பெண்கள் வேலை – பணி சமநிலையையும் காக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
- சந்திரபாபு நாயுடு முதல் இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அந்த துறையில் ஆந்திராவை முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டினார். தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியிலும் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும், பெங்களூரு, சென்னையுடன் போட்டி போடும் அளவுக்கு ஹைதராபாத்தை உருவாக்கியதில் சந்திரபாபு நாயுடுவின் பங்கு அதிகம்.
- இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்குவதன் மூலமே நாட்டின் வளர்ச்சியை எட்ட முடியும் என்று அறிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, தற்போதைய ஆட்சிக் காலத்தில் ஆந்திர மாநிலத்தை உலக அளவில் மிக முக்கியமான வேலைவாய்ப்பு மையமாக மாற்றிக் காட்டுவேன் என்று அறிவித்துள்ளதும் பாராட்டுக்குரியது. நாட்டில் 15 வயதுக்கு மேல் உள்ள வேலைக்குச் செல்லும் மக்கள்தொகையில், 32.8 சதவீதம் மட்டுமே பெண்கள்; மீதம் 77.2 சதவீதம் ஆண்களே உள்ளனர்.
- நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் திட்டங்கள் தீட்டி முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், ஆந்திர மாநில அரசின் இந்த திட்டம் பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறும் சூழ்நிலையை உருவாக்கித் தரும். பெண்களுக்கு அவர்கள் வசதிக்கேற்ப வீட்டிலிருந்தும், அவர்களது வீட்டருகே உள்ள இணைந்து பணியாற்றும் பணியிடங்களில் வேலை பார்க்கும்போது அவர்களது பணிச்சூழல் எளிமையாக அமையும்.
- பணியிலிருந்து பாதியில் நின்றவர்கள், புதிதாக பணியில் சேருவோருக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும். பாலின சமத்துவத்திற்கு உலகம் முழுக்க அதிக முக்கியத்துவம் அளித்துவரும் இந்த காலகட்டத்தில், பாலின சமத்துவ குறிக்கோளோடு தீட்டப்பட்டுள்ள இந்த திட்டம் அனைத்து மாநிலங்களும் பின்பற்றப்பட வேண்டிய திட்டம் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 02 – 2025)