TNPSC Thervupettagam

ஃபாலி எஸ்.நாரிமன் - ‘நீங்கள் யார் பக்கம்’

February 27 , 2024 147 days 189 0
  • ‘நீங்கள் யார் பக்கம்?’ என்ற கேள்வியைக் காலமும் வரலாறும் அவ்வப்போது முன்வைத்துக்கொண்டே இருக்கின்றன. 1975 இல் இந்தியா நெருக்கடிநிலைக் காலத்தைச் சந்தித்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதி குறித்த நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்ததால், நாடு முழுவதும் நெருக்கடிநிலையை அறிவித்தார்.
  • அப்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்தவர் ஃபாலி எஸ்.நாரிமன். அரசமைப்புச் சட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியை எதிர்த்து அவர் பதவி விலகினார். டெல்லியின் வீதிகளில் அச்சம் பரவியிருந்தாலும் அவருடைய அலுவலகம் எப்போதும்போல் இயங்கியது.
  • ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசமைப்புச் சட்டம் சில அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை அசைக்கும் உரிமையை நாடாளுமன்றத்துக்குத் தர ஆட்சியாளர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.
  • அண்மையில் நடந்த ராம் ஜெத்மலானி நினைவு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அடிக்கட்டுமானத்தை உயர்த்தியே ஃபாலி நாரிமன் பேசியிருந்தார்; அவரது மகனும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமானரோஹிண்டன் ஃபாலி நாரிமனும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வில் இவ்வாறுதான் பேசினார்.

நேர்மையின் சிகரம்:

  • 10.01.1929இல் பிறந்த நாரிமன், 95 ஆண்டுகள் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர்; பிப்ரவரி 21 அன்று காலமானார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த என்.டி.வானமாமலை, எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்காக ஆஜரானார்.
  • சுமார் 6 மணி நேரம் எம்.ஜி.ஆரைக் கூண்டில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்தார். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். தம்மை விமர்சித்தவர்களைக் கூப்பிட்டுப் பதவி தரும் வழக்கம் அவருக்கு உண்டு. வானமாமலைக்கு நீதித் துறையில் அரசுப் பதவி தர அவர் முயன்றார். “நன்றி. நான் கம்யூனிஸ்ட்டாகவே இருக்க விரும்புகிறேன். எந்த அரசுப் பதவியையும் வகிக்க ஆசைப்படவில்லை” என்று என்.டி.வி. மறுத்துவிட்டார். அப்படியான நேர்மை நாரிமனிடமும் இருந்தது.
  • தம் காலத்தில் நீதித் துறையில் நடந்த பல சுயமரியாதைமிக்க நிகழ்வுகளை நாரிமன் கண்ணுற்றார். 1973இல் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி குறித்த சர்ச்சை எழுந்தது. மூன்று மூத்த நீதிபதிகளின் பெயர்களை விட்டுவிட்டு நான்காவது இடத்தில் இருந்த ஏ.என்.ரே-வை மத்திய அரசு தலைமை நீதிபதியாக்க முயன்றது. இதை எதிர்த்து மற்ற மூவரும் பதவி விலகியது ஓர் உதாரணம். ஓய்வுபெற்ற நீதிபதிகள் தம் பணிக் காலத்துக்குப் பிறகு அரசாங்கம் வழங்கும் சிறப்புப் பதவிகளை ஏற்பதை நாரிமன் எதிர்த்தார்.
  • நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு குறித்த வழக்குகளில் குஜராத் அரசுக்காக ஆஜராகிவந்தவர் நாரிமன். ஒருகட்டத்தில், அங்கு கிறிஸ்துவ சிறுபான்மையினர் மீதான வன்முறைகளைக் கண்டித்த அவர், குஜராத்துக்காக இனி வாதிட முடியாது என வழக்குக் கட்டுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.

பெருகும் மத வெறுப்பு:

  • கேசவானந்த பாரதி, கோலக்நாத், மினர்வா மில்ஸ், டி.எம்.ஏ. பை ஃபவுண்டேஷன் போன்ற வழக்குகளில் நாரிமனின் பங்கு முதன்மையானது. உயில்போல் அமைந்த அவரின் சில கூற்றுகளும் முக்கியமானவை. “நான் வாழ்ந்து பரிணமித்தது மதச்சார்பற்ற இந்தியாவில். காலத்தின் முழுமையில் எனது மரணமும் மதச்சார்பற்ற இந்திய மண்ணில் அமைய வேண்டும்” எனக் கூறியவர் அவர். இந்திய நீதி அமைப்பு அத்தகு சூழல்களைச் சந்திக்கத்தான் செய்கிறது.
  • சமீபத்தில் ஒரு வழக்கு. ஒரு பெண்ணிடம் பாலியல் வல்லுறவு கொண்டுவிட்டு, அப்பெண்ணை மணந்துகொள்ள மறுத்தார் ஒருவர். அப்பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் இருப்பதால் அவரை மணந்தால், தன் குடும்பமே பாதிக்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டிருந்தார்.
  • நீதிமன்றம் மனுவை ஏற்று இருவரின் ஜாதகத்தையும் லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடப் பிரிவுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதில் தலையிட்டு, “மனிதர்கள் செவ்வாய் கிரகம் சென்று ஆராய்ச்சி செய்யும் இத்தருணத்தில் செவ்வாய் தோஷம், ஜாதகம் குறித்துப் பேசுவதா?” எனக் கேள்வி எழுப்பி, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதித்தது.
  • இப்போதும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அக்பர், சீதா என சிங்கங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டது குறித்து ஒரு வழக்கில் பெயரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மத அடிப்படையிலான துவேஷங்கள் பெருகியுள்ளன.

நீதியின் முக்கியத்துவம்:

  • “இந்தப் பூமிக்கு உப்பு போன்றதாக நம் நாட்டின் நீதித் துறை விளங்குகிறது. இந்த உப்பு தன் சுவையை இழந்துவிட்டது என்று சொல்லும்படியான நிலை ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நான் கடவுளிடம் வேண்டுகிறேன். ஏனெனில், விவிலியம் நம்மை எச்சரித்துள்ளது. உப்பு தன் சுவையை எப்போதேனும் இழந்துவிட்டால், அதற்கு நாம் எங்கிருந்து உப்பிட முடியும்?” என்று கேட்டவர் நாரிமன்.
  • 01.07.2023இல் தலைநகர் டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருடைய புதல்வியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அவ்விழாவுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் சென்றிருந்தனர். அத்தருணத்தில், குஜராத் கலவரம் தொடர்பாகப் பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனக்குப் பிணை கோரி நீதிமன்றத்தைச் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் அணுகினார்.
  • முன்னதாக குஜராத் உயர் நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்காலப் பிணையை ரத்துசெய்து உடனே சரணடையும்படி உத்தரவிட்டிருந்தது. இந்நேரத்தில்தான் சீதல்வாட் தாம் சிறைக்குப் போவதிலிருந்து விடுவிப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
  • மாலை 6 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. சீதல்வாட் பிணை கோரிய சூழ்நிலையில், நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி, மாலை 6.30 மணிக்கு நீதிமன்றம் வந்து விசாரணை நடத்தினர். குஜராத் தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா நிகழ்ச்சியிலிருந்து நீதிமன்றம் வந்து விசாரணையில் கலந்துகொண்டார்.
  • இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்தத் தகவல் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அரங்கிலிருந்து வெளியேறி, மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் அவர்கள் நாட்டிய நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் மூன்று நீதிபதிகளின் அமர்வு பிணை மனுவை விசாரித்து இரவு 10.00 மணிக்கு இடைக்காலப் பிணையை வழங்கியது. இத்தகு நிகழ்வுகள் நாரிமனின் நம்பிக்கையைக் காப்பாற்றும்.
  • “இந்துக்கள் வேதங்கள் வேண்டும் என்று விரும்பினர். அதற்காக அவர்கள் சாதி இந்து அல்லாத வேத வியாசரை அழைத்தனர். இந்துக்கள் ஒரு காவியம் உருவாக்கப்பட விரும்பினர். அதற்காக அவர்கள் தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த வால்மீகியை அழைத்தனர். இந்துக்கள் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்க விரும்பினர். அதற்காக அவர்கள் என்னை அழைத்தனர்” என இந்திய நீதிமுறையைப் பற்றி அம்பேத்கர் கூறினார்.
  • இத்தகு சூழ்நிலையில், மதச்சார்பின்மை என்கிற பதாகையை உயர்த்த வேண்டியுள்ளது. நீங்கள் யார் பக்கம் என்றால், நாரிமன் மதச்சார்பின்மையில் உறுதி, மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காத்தல் ஆகியவற்றில் நின்று தன் வாழ்வின் செய்திகளை நிறுவிச் சென்றுள்ளார்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories