TNPSC Thervupettagam

ஃபிரான்ஸ் தேர்தல்: மீறப்பட்ட மக்கள் தீர்ப்பு

September 16 , 2024 126 days 121 0

ஃபிரான்ஸ் தேர்தல்: மீறப்பட்ட மக்கள் தீர்ப்பு

  • ஃபிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நான்காம் இடத்தைப் பெற்ற கட்சியின் மிஷேல் பார்னியே, அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தாந்த மோதல்களை மேலும் கூர்மைப்படுத்தும் காரணியாக இந்த நிகழ்வு அமைந்துவிட்டது.
  • ஜூன் 9 அன்று நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் ஃபிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணி (National Rally) அதிக இடங்களைப் பெற்றது. மையவாத அரசியலைப் பின்பற்றும் அதிபர் இம்மானுவேல் மக்ரூனின் மறுமலர்ச்சிக் கட்சி (Renaissance) பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு, தீவிர வலதுசாரி அரசியலுக்கு எதிரான, தெளிவான மக்கள் தீர்ப்பைப் பெறுவது அவசியமாகிவிட்டதாகக் கூறி நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த மக்ரூன் உத்தரவிட்டார். இது தீவிர வலதுசாரிகளின் செல்வாக்கை வலுப்படுத்தவே உதவும் என்று சர்வதேச ஊடகங்கள் எச்சரித்தன. இப்போது அந்த எச்சரிக்கை மெய்யாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • ஐரோப்பாவில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான மனநிலையை முன்வைத்து அரசியல் செய்யும் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துவரும் சூழலில், ஃபிரான்ஸ் தேர்தலிலும் வலதுசாரிக் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. அதை மெய்ப்பிக்கும் விதமாக ஜூன் 30 அன்று நடத்தப்பட்ட முதல் கட்டத் தேர்தலில் தேசியப் பேரணிக்கு அதிகத் தொகுதிகள் கிடைத்தன. ஆனால், ஜூலை 7 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் காட்சிகள் மாறின. இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியான புதிய வெகுஜன முன்னணி (New Popular Front) ஒட்டுமொத்தமாக 182 இடங்களைக் கைப்பற்றியது. மக்ரூனின் கட்சியை உள்ளடக்கிய மையவாதக் கூட்டணிக்கு 168 இடங்களும், தேசியப் பேரணிக்கு 143 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை (289 இடங்கள்) யாருக்கும் கிடைக்கவில்லை.
  • இந்நிலையில், செப்டம்பர் 5 அன்று பார்னியேவைப் பிரதமராக அறிவித்தார் மக்ரூன். ஃபிரான்ஸ் நாடாளுமன்ற அமைப்பில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. ஆனால், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரும் அவர் தலைமையிலான அரசும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்தச் சூழலில் இடதுசாரி அரசுக்கு ஆதரவளிக்கப் பல கட்சிகளுக்கு விருப்பம் இல்லை என்பதால், அரசியல் நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு மக்ரூன் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
  • ஆனால், பார்னியேவின் பழமைவாதக் குடியரசுக் கட்சி (Conservative Republican Party) 46 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பல கட்சிகளின் ஆதரவுடன்தான் பார்னியே ஆட்சி அமைக்க முடியும். எனவே, தேசியப் பேரணிக் கட்சி உறுப்பினர்கள் உள்பட தீவிர வலதுசாரிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருத்தல் உள்ளிட்ட மறைமுக ஆதரவை வழங்கினால் மட்டுமே பார்னியே ஆட்சி செய்ய முடியும். இது தேர்தல் நடத்தப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கடுமையாக்கப்போவதாக பார்னியே அறிவித்திருப்பது அவரது அரசின் திசைவழியைச் சுட்டுகிறது.
  • மக்ரூனின் நடவடிக்கை இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடிவருகின்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிக இடங்களைப் பெற்ற கட்சியையோ கூட்டணியையோ ஆட்சி அமைக்க அழைப்பதே ஜனநாயக நெறிமுறை. மக்கள் தீர்ப்பை உதாசீனப்படுத்தியிருக்கும் மக்ரூன், அவர் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட தீவிர வலதுசாரிகள் வலிமைபெறுவதற்கும் வழிவகுத்திருப்பதுதான் இந்தத் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் விநோதம்!

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories