TNPSC Thervupettagam

ஃபேஸ்புக் ‘அல்காரித’மும் பாதிக்கப்படும் நகரவாசிகளும்

November 19 , 2024 60 days 79 0

ஃபேஸ்புக் ‘அல்காரித’மும் பாதிக்கப்படும் நகரவாசிகளும்

  • இங்கிலாந்தில் உள்ள சிறிய நகரம் ஒன்று, ஃபேஸ்புக் அல்காரிதம் அளிக்கும் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறது. நகரின் பெயரில் ‘பிரச்சினை’ இருப்பதாக ஃபேஸ்புக் அல்காரிதம் தவறாகப் புரிந்துகொண்டதே இதற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
  • ‘கூல்ஸ்டன்’ (Coulsdon) எனும் அந்த நகரைச் சேர்ந்த தனிநபரும் விற்பனையாளரும் ஃபேஸ்புக் தளத்தில் வைத்துள்ளனர். அந்த நகரிலோ, நகரின் பெயரிலோ எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் ‘Coulsdon' எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கங்கள், குழுக்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் நீக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறியதற்காகப் பதிவுகள் நீக்கம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டதோடு தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கணக்கு முடக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் எச்சரித்துள்ளது. பதிவுகள் நீக்கப்படுவதற்கான சரியான காரணம் புரியாமல் ‘கூல்ஸ்டன்’ நகரைச் சேர்ந்தவர்கள் குழம்பினர்.
  • அதாவது, ‘Coulsdon' எனும் ஆங்கிலப் பெயரில் இடையே உள்ள ‘LSD’ எனும் எழுத்துகள் போதைப் பொருளைக் குறிப்பதாக அமைவதால் ஃபேஸ்புக்கின் தணிக்கை அல்காரிதம், இந்த எழுத்துக்களைக் கொண்டு வரும் பதிவுகளை எல்லாம் பிரச்சினைக்குரியதாக அடையாளம் காட்டி நீக்கியிருக்கிறது.
  • உலகம் முழுவதும் கோடிக்கணக்கானப் பயனர்களைக் கொண்ட ஃபேஸ்புக் மேடையில், உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படுவதற்கென அல்காரிதம் இருப்பதுபோல பதிவுகளைக் கண்காணித்து சிக்கலானவை, சர்ச்சைக்குரியவற்றை நீக்கும் அல்காரிதமும் இருக்கிறது. பொதுவாக ஃபேஸ்புக் கண்காணிப்பு அல்காரிதம், வன்முறையைத் தூண்டும் தன்மை கொண்டவை, சட்ட விரோதமானவை, வெறுப்புப்பேச்சு கொண்டவை போன்றவற்றைக் கண்டறியும் வகையில் செயல்படுகிறது.
  • உதாரணமாக, வன்முறை தொடர்பான சொற்களைக் கொண்டிருந்தால் அந்தப் பதிவு கண்காணிக்கப்பட்டு, சர்ச்சைக்குரியதாக இருந்தால் ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படும். அதுபோலவே போதைப்பொருள் தொடர்பான வார்த்தைகளும் கண்காணித்து தொடர்புடையப் பதிவுகள் நீக்கப்படும். இந்த அல்காரிதம் செயல்படும் முறை பழுதில்லாதது எனச் சொல்ல முடியாது. பல நேரங்களில் தவறாக அடையாளம் காட்டுவதும், சரியான உள்ளடக்கத்தைப் பிழையானது எனச் சுட்டிக்காட்டுவதும் அவ்வப்போது ஃபேஸ்புக் அல்காரிதம் செய்யும் தவறுகள்தான்.
  • இந்த அடிப்படையில்தான் ‘LSD’ எனும் தனித்தனி எழுத்துக்களை 'Cloulsdon' எனும் பெயரில் கண்டறிந்த அல்காரிதம் பிழையானது எனச் சுட்டி தொடர்புடையப் பதிவுகளை நீக்கி வந்திருக்கிறது. இது தொடர்பாக ‘கூல்ஸ்டைன்’ நகரவாசிகள் பல முறை முறையிட்டுள்ளனர். அப்போது, அல்காரிதமின் பிழை சரி செய்யப்படும் என்று ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி ஃபேஸ்புக் அல்காரிதமால் 2021இல் இங்கிலாந்தின் ‘பிளைமூத் ஹோ’ (Plymouth Hoe) எனும் நகரம் பாதிக்கப்பட்டது. காரணமே இல்லாமல் அந்த நகரின் பெயர் கொண்ட பதிவுகளை அல்காரிதம் பிழையானதாகக் கருதி நீக்கியது. பின்னர் இந்தத் தவறை ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டது.
  • அதே போல, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘men’ எனும் வார்த்தை வெறுப்புப் பேச்சின் அடையாளம் எனத் தவறாக அடையாளம் காட்டப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. இதனால், லட்சக்கணக்கானப் பதிவுகள் அல்காரிதமால் பிழையாகக் கருதப்பட்டு நீக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், இவை பிழையில்லாதவை என நிரூபிப்பது பயனர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதால், இது தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றிபெறுவதும் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
  • நிற்க, ஃபேஸ்புக் அல்காரிதம் தணிக்கையால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களது கதைகளைப் பகிர்வதற்காகவே பிரத்யேகமாக ‘facebookjailed.com’ எனும் இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்கள்!

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories