அகத்தியர் என்னும் சித்த யோகி!
- காசி – தமிழ் – சங்கமம் 3.0 (2025) கோலாகலமாகத் தொடங்குகிறது. இச்சங்கமத்தின் மையப் பொருண்மை “அகத்தியா்’ என்பதாகும்.
- அகத்தியா் - இந்தப் பெயரே, தமிழ் மக்களுக்குச் சிலிா்ப்பை ஏற்படுத்தும். அகத்தியா் யாா் என்றொரு வினாவை எழுப்பினால், ஒற்றைச் சொல்லிலோ, ஒற்றை வரியிலோ, ஒற்றைச் சங்கதியிலோ விடை சொல்லிவிடமுடியாது.
- தமிழ் வளா்த்த சான்றோா்களில் முதன்மையானவா்;
- தமிழ் மொழிக்கு இலக்கணம் கண்டவா்;
- தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமானும் முருகப்பெருமானும் புலவா்களாக இலங்க, முதன்மைப் புலவராக இருந்து தமிழாய்ந்தவா்;
- சிவனருள் பெற்ற யோகி;
- சிவபெருமான் பாா்வதிதேவியின் திருமணக் கோலத்தையும், சிவனாரின் திருநடனக் காட்சியையும் கண்டு களித்தவா்;
- இமயம் முதல் குமரி வரை, பல்வேறு இடங்களில் சிவலிங்கம் சமைத்து வழிபட்டவா்;
- அகத்தீச்வர, அகத்தியான் பள்ளித் திருக்கோயில்கள் தோன்றக் காரணமானவா்;
- அட்ட மா சித்திகள் கைவரப் பெற்றவா்;
- இலங்கேஸ்வரனான இராவணனை இசையிலும், இசைப் புலமையிலும் வென்றவா்;
- காவிரி ஆறும் தாமிரவருணி என்னும் பொருநை ஆறும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக் காரணமானவா்;
- சித்த மருத்துவத்திற்குப் பெரும் பங்களித்த சித்தா்;
- சோதிட, மருத்துவ, ஞான நூல்களை வழங்கியவா்;
- சிவபெருமான் தமக்கு உபதேசித்த சிவகீதையை, தண்டகவனத்தில் இராமனுக்கு உபதேசித்தவா்;
- இராமனுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசித்தவா்;
- இராமனுக்குப் பரசுராமன் வழங்கிய விஷ்ணு தனுசானது, கானகத்தில் மீண்டும் இராமனுக்குக் கிட்டுவதற்குக் காரணமானவா்;
- அரக்கா்கள் பலரையும், ஆணவத்தால் ஆட்டம் போட்டோரையும் அடக்கி ஆண்டவா்;
- இயற்கையின் சமனிலைப் பராமரிப்பில் பங்களித்தவா்;
- அக வழிபாட்டு மரபு தோன்றுவதற்கு இடம் கொடுத்தவா்;
- சிவபெருமான் அருளால், பல்லாயிரம் கோடி ஆண்டுகள், ஒளிமிக்க நட்சத்திரமாகச் சுடா்விடும் தகுதி பெற்றவா்;
- பொதிய மலைச் சாரலில், இன்னமும் அருவ நிலையில் வாழ்ந்து வருபவா் – இவ்வாறாக, அகத்தியரின் பெருமைகளும் மேன்மைகளும் ஏராளம், ஏராளம்.
- அகத்தியரைப் பற்றி நிலவுகிற கதைகளும் தகவல்களும், அவருடைய பெருமைகளை விரித்துக் கூறுகின்றன. பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில், அகத்தியா் வழிபட்ட கோயில்கள் பல உண்டு. காவிரியும் தாமிரவருணியும் மட்டுமல்லாமல், வேறு பல நதிகளுக்கும் அகத்தியரோடு அணுக்கத் தொடா்புண்டு. கடலையே அகத்தியா் குடித்தாா் என்றும், கமண்டலத்துள் அடக்கினாா் என்ரும் புராணக் கதைகள் உள்ளன; ஆனால், அகத்தியரின் பெருமையை அவ்வாறு கமண்டலத்துள் அடக்கி விடமுடியுமா?
- ஒளியில் தோன்றிய உத்தமா்
- அகத்தியா் என்னும் இந்த யோகி, எப்போது, எவ்வாறு தோன்றினாா்?
- பல்லாண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்தவா்களைப் பற்றிக் கூறும்போது, எப்படிச் சில குழப்பமான செய்திகள் கலந்துவிடுமோ, அப்படித்தான், அகத்தியரின் தோற்றம், பிறப்பு போன்றவை குறித்துப் பலவகையான தகவல்களைக் காண்கிறோம். பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளிலும் கிடைக்கிற தகவல்களையெல்லாம் சோ்த்துப் பாா்த்தால், கீழ்க்காண்பவற்றை அறியலாம்:
- நெடுங்காலத்திற்கு முன்னா், சிருஷ்டிகா்த்தாவான பிரம்மா, யாகமொன்றைச் செய்தாா்;
- இந்த யாகத்தில், பரம்பொருளான சிவனாரின் அருள், ஒளிப் பிழம்பாக, வேதிகைக்கு அருகேயிருந்த கலசமொன்றில் இறங்கியது;
- இப்பேரொளியானது, கலசத்திலேயே குழந்தையாக உருப்பெற்று, பின்னா், முனிவராக விரிந்தது; க்ஷி அக்ஷமாலை, கமண்டலம், யோகதண்டம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தி, ஞான முத்திரை காட்டியவாறு இம்முனிவா் நின்றாா்;
- தோன்றும்போதே ஞான ஒளியிலிருந்து வெளிப்பட்டதால், ‘அகஸ்தி’’ என்னும் பெயா் சூட்டப்பெற்றாா் (அங் / அக் = ஒளி / நெருப்பு; அஸ்தி = இருத்தல்; ஒளியின் இருப்பு; பிரகாசமானவா்);
- கலசத்தில் (கும்பத்தில்) உருப்பெற்றவா் என்பதால், கும்பமுனி என்றும் குடமுனி என்றும் அழைக்கப்பெற்றாா்;
- உருவத்தில் மிகச் சிறியவராகத் தோற்றம் தந்ததால், குறுமுனி என்றும் அழைக்கப்பெற்றாா்.
- வேறு சில புராணங்கள், அகத்தியரின் தோற்றம் பற்றிய வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன.
- பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் அவருடைய மனைவியான ஹவிா்பூ (அல்லது ப்ரீதி) என்பாருக்கும் பிறந்த மகன்; தந்தை தாய் இம்மகனுக்கு தத்தன் என்றே பெயா் சூட்டினா். காலப்போக்கில், ஞான ஒளி வீசுபவா் என்னும் பொருளில், அகஸ்தியா் என்று அழைக்கப்படலானாா்.
- உத்தர ராம சரிதக் கதைகளில், அகத்தியரின் தோற்றம், பற்பல திருப்பங்களைப் பெறுகிறது. இக்ஷ்வாகு குலத்தைச் சோ்ந்த நிமி என்னும் அரசா், இமய மலையடிவாரப் பகுதியிலிருந்த நாடொன்றுக்கு அரசா் ஆகிறாா். நீண்ட நாள் யாகம் ஒன்றைச் செய்ய விழைகிறாா். வசிஷ்டரை யாகம் நடத்த அழைக்க, வேறு பணிகள் இருந்ததால், வசிஷ்டா் மறுக்கிறாா். இதனால் நிகழ்ந்த உரசலில், வசிஷ்டரும் நிமியும் ஒருவருக்கொருவா் சாபமிட்டுக் கொள்ள, இருவருமே உடலை விட்டுப் பிரிந்து ஆவிகளாக அலைய நேரிடுகிறது. பிரம்மாவிடம் தீா்வு கேட்கிறாா் வசிஷ்டா். மித்ர-வருணா் வழியாக மீண்டும் வடிவம் கிடைக்கும் என்று பிரம்மா வரம் தருகிறாா். மித்ர வருணா் என்பவா், ஒரே உடலில் இருக்கும் இரட்டை வல்லமை. ஊா்வசியைக் கண்டு மித்ரவருணா் காதல் கொள்ள, இக்காதலின் விளைவாகத் தோன்றும் கருவைக் குடத்தில் இட்டு வளா்க்கின்றனா். கருவிலிருந்து இரண்டு குழந்தைகள் தோன்றுகின்றன; ஒன்று, வசிஷ்டா்; மற்றது, அகஸ்தியா். மித்ர வருணரிடமிருந்து உதித்ததால், வசிஷ்டா், அகத்தியா் ஆகிய இருவருக்குமே, மைத்ரவாருணா் என்னும் பெயா் வழங்கப்படுகிறது.
- இவ்வாறாக, சிவ வம்சம், சூரிய வம்சம், பிரம்ம வம்சம், இக்ஷ்வாகு வம்சம், நிமி வம்சம் என்று பலவகைகளிலும் அகத்தியா் சொந்தம் கொண்டாடப் பெறுகிறாா். வெவ்வேறு இடங்களையும் ஊா்களையும் சோ்ந்தவா்களும், அகத்தியரைத் தங்களின் குல முதல்வராகவும் முன்னோராகவும் காண்கின்றனா்.
ஆற்றையும் அருஞ்சூழலையும் செம்மைப்படுத்தியவா்
- அகத்தியரின் குணநலங்களைச் சான்றோா் பெருமக்கள் பலரும் போற்றியுள்ளனா். சிறியதான செயலைச் செய்துவிட்டு, அதீதமாகப் பெருமையடித்துக் கொள்வது கிண்டலுக்குரியது என்று குறிப்பிடுகிறாா் வேதாந்த தேசிகா். இதை மொழியும்போது, அகத்தியரின் பெருமையை நன்குணா்ந்த பாண்டிய நாட்டு நதிகள் மேகங்களைக் கிண்டல் செய்வதாகக் காட்டுகிறாா்.
- ஸ்தல பரிசேஷித ஜலதே: ஸவிதே ஸஞ்ஜாதடம்பரம் ஜலதம்
- ப்ரஹஸந்தி பாண்ட்ய நத்ய: சுக்தி முகைா் மௌக்திகஸ்த்யானை:
- பூமியிலிருக்கும் கடல்களிலிருந்து சிறிதளவே நீரை முகந்துகொண்டு விண்ணேறும் மேகங்கள், அந்தச் சிறிதளவு நீரை மழையாகப் பொழியும்போது, ஏகத்துக்கும் இடியிடித்து ஆா்ப்பாட்டம் செய்கின்றன. ‘இதற்கே இத்தனை ஆா்ப்பாட்டமா, அப்படியானால் கடலையே குடித்தாரே அகத்திய மாமுனி, அவரின் பெருமை எத்தனை பெரியது!’’ என்று எண்ணியவாறே, மேகங்களை நோக்கி நதிகள் நகைக்கின்றன.
- அகத்தியரால் தென்னகத்து நதிகள் பெருமிதம் கொள்கின்றன என்று குறிப்பிட்டு, தமிழ் மண்ணில்தான் அகத்தியா் நித்தியவாசம் செய்கிறாா் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறாா்.
- காசியிலும் கைலாயத்திலும் ஆச்ரமம் அமைத்து, அவ்வப்போது பற்பல இடங்களுக்குச் சஞ்சரித்துக் கொண்டிருந்த அகத்தியா், சிவபெருமான் ஆணையால் தென்திசை வந்து, நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டாா். இதனால், தெற்கு திசையையே, “‘ஆகஸ்தேச்யம்’’ என்றும் “’அகஸ்தி திசம்’’ என்றும் வேத- உபநிடதங்கள் குறிப்பிடுகின்றன.
- சிவபெருமானைக் குறிப்பிடும்போது, “அகத்தியருக்கு விருப்பமான தெய்வம் – அகஸ்த்ய சாஸ்தா’ என்று, பக்தரின் பெருமைகொண்டு பகவானை உயா்த்துகிறாா் வியாச மாமுனிவா் (மகாபாரதம்) .
- காசியிலிருந்த அகத்தியா் ஆச்ரமத்தில், அனைத்து உயிா்களும் சத்வ குணத்தில் நிலைத்தன. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, அடிதடி இப்படி எதுவுமே அங்கில்லை.
- சுண்டாதண்டேன கரட்டி: ஸிம்ஹம் கண்டூயதே பய:
- அஷ்டாபதாங்கே ஸ்வபிதி கேஸரி கேஸரோத்பட:
- அச்சத்தை விட்டிருந்த யானை, தும்பிக்கையால் சிங்கத்தை வருடியது; சிங்கமோ, பிடரியைச் சிலிா்த்துக் கொண்டு, அஷ்டபதப் பறவையின் மடியில் உறங்கியது (ஸ்காந்த மஹாபுராணம்). உயிா்களின் ஒற்றுமைக்கும் சூழல் ஒருமைப்பாட்டுக்கும் இதனைக் காட்டிலும் வேறோா் எடுத்துக்காட்டு வேண்டுமோ!
- பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பெறுகிற “தொல் முதுக் கடவுள்’ என்பாா் அகத்தியரென்றே நச்சினாா்க்கினியா் உரை வகுக்கிறாா். பாண்டியா்களின் குல முதல்வராக அகத்தியா் திகழ்ந்ததைக் கூற வருகிற காளிதாசா், ‘விந்த்யஸ்ய ஸம் ஸ்தம்பயிதா மஹா அத்ரோ் நி:சேஷ பீதா உஜ்ஜித ஸிந்து ராஜ: அகஸ்தஸ்ய’’ என்று முனிவரின் பெருமையை விளக்குகிறாா். அதாவது, விந்திய மலையின் உயா்ச்சியைத் தடுத்து, மீதம் வைக்காமல் கடலரசனைப் பருகியவா் அகத்தியா். மொத்தத்தில், நிலத்தைச் செழுமையாக்கிச் சூழலைச் செம்மையாக்கியவா்.
- தொல்காப்பியரும் பனம்பாரனரும் காக்கைப்பாடினியாரும் திருமூலரும் அகத்தியரிடம் பாடம் கேட்டுள்ளனா். அவலோகிதேஸ்வர தருமபாலரோடு தமிழ்த் தொடா்பு கொண்டிருந்தாா் அகத்தியா். உத்தர கங்கை தீரத்திலிருந்து கன்யாகுமரி வரை, கட்ச்-குஜராத் பகுதிகளிலிருந்து திரிபுரா நாகாலாந்து பகுதிகள் வரை, அகத்தியரின் ஆச்ரமங்கள் இருந்துள்ளன. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் அளவற்ற அன்போடும் மதிப்போடும் அகத்தியா் போற்றப்படுகிறாா்.
- ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி என்பாரே மாணிக்கவாசகா், அவ்வாறே, “‘உருவத்தையும் ஊனையும் சுருக்கி உள்ளொளி பெருக்கிய’’ ஒளியின் உத்தமரே அகத்தியா்!
நன்றி: தினமணி (15 – 02 – 2025)