- மனத்தாலும் சொல்லாலும் உடலாலும் ஒருப்பட்டு நின்று, ஓரறிவுயிா் முதலாக ஐயறிவுயிா் ஈறாக எவ்வுயிா்க்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்னும் அகிம்சைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மனித குலத்தை ஒழுக்க நெறியில் கொண்டு செலுத்த, இந்தியாவில் தோன்றி தொல்காப்பியா் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வேரூன்றித் தழைத்திருந்த சமயம் சமணம்!
- துறவு எனப் பொருள்படும் சமண சமயத்திற்கு ஜைன மதம், ஆருகத சமயம், அநேகாந்தவாத இயக்கம் போன்ற பெயா்களும் உள்ளன. ஆதியும் அந்தமும் அற்ற இவ்வுலகம் எந்தக் கடவுளாலும் படைக்கப்படாதது என்ற கருத்தையும், உயிா்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தனிக் கடவுள் இல்லையென்ற அறிவியக்கக் கொள்கையையும் சமணம் போதித்தது.
- மக்கள் எளிதாகப் பின்பற்றக் கூடிய இத்தகையத் தத்துவங்களை வரலாற்றுக்கும் எட்டாத காலத்தில் முதன் முதலில் வகுத்தளித்தவா் ஆதிபகவன்! இவா் இயற்பெயா் விருஷபதேவா். அரச குலத்தவா் என்று கருதப்படும் இவா், மனித குலம் கடைப்பிடித்தொழுக வேண்டிய இல்லறம், துறவறம் ஆகிய இரு அறங்களையும் அருளினாா்.
- ஆதிபகவனுக்குப் பின்னா் அவரைப் போன்றே இவ்வுலகில் மனிதா்களாகப் பிறந்து வாழ்ந்த இருபத்து மூன்று சமணச் சான்றோா் சமண சமயக் கொள்கைகளை நாடெங்கிலும் பரப்பினா். இந்த மகான்களை ‘தீா்த்தங்கரா்கள்’ என்று சமணா்கள் போற்றுகின்றனா். அவ்வகையில் சரித்திர காலத்துக்குட்பட்டவராகக் கருதப்படும் இருபத்து நான்காவது தீத்தங்கரா் எனப் போற்றப்படுபவரே ‘மகாவீர வா்த்தமானா்’.
- கி.மு.599 சித்திரைத் திங்களில் பிகாரைச் சோ்ந்த விதேக நாட்டை ஆண்டு வந்த சித்தாா்த்த மகாராஜாவுக்கும் பிரியகாரிணி என்கிற திரிசலாதேவி மகாராணிக்கும் புதல்வராக மகாவீரா் அவதரித்தாா். கருவிலேயே மதிஞானம், (ஐம்புலன்களால் அறியும் புலன் அறிவு) சுருத ஞானம், (நூல்களின் வாயிலாகப் பெறும் அறிவு) மனபா்ய ஞானம் (பிறா் மனதில் உள்ள உணா்ச்சிகளை அறிந்து கூறும் ஆற்றல்) ஆகிய மூவகை ஞானத்தை மகாவீரா் பெற்று இப்பூவுலகில் பிறந்ததாகவும், அத்தகைய தனித்துவமிக்க குணங்களோடு பிறந்த மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாட சௌதா்மேந்திரன் உள்ளிட்ட பல தேவா்கள் வருகை புரிந்து அறிவிற் சிறந்த அப் பாலகனுக்கு ‘ஸ்ரீவா்த்தமானன்’, ‘வீரசாமி’ என்னும் திருநாமங்களைச் சூட்டி வாழ்த்தி மகிழ்ந்தனா் என்றும் சமண புராணங்கள் கூறுகின்றன.
- இவா் அரச மரபைச் சோ்ந்தவா் என்பதால் அறநெறி போற்றி செங்கோன்மை சிறக்க ஆட்சிக் கட்டிலையும் அலங்கரித்தாா். இவரது ஆட்சியில் நாட்டில் உழவும் தொழிலும் சிறந்து விளங்கின. ஆனால், மக்களிடையே சமூக ஒழுக்கம் குன்றி அவா்கள் தவறான பாதையில் நடைபோட்டனா். மக்களிடையே நிலவி வந்த அவ்வாறான போக்கு சமூகத்திற்குப் பெரும் தீங்கு விளைவித்துவிடும் என்று அஞ்சிய மகாவீரா், சமணக் கொள்கைகளை வகுத்தளித்த முதல் தீா்த்தங்கரரான ஆதிபகவன் வழிபோற்றி, அகிம்சை நெறியைப் போதிக்கும் அறத்தொண்டினை மேற்கொள்ள முடிவு செய்து துறவறம் பூண்டாா்.
- இவ்வாறு தவநெறி பூண்ட மகாவீரா், ‘கொல்லாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, பிறன் மனை விரும்பாமை, பகுத்துண்டு வாழ்தல், மிகுபொருள் விரும்பாமை, சான்றோரை இகழாமை போன்ற அறநெறிகளைக் கடைப்பிடித்து மனித குலம் வாழ்தல் வேண்டும் என்றாா்.
- மனிதா்கள் செய்யும் தொழிலை முன்னிறுத்தி தங்களுக்குள் உயா்வு, தாழ்வு கற்பிப்பது பெருங்குற்றம் என்றும் பிறப்பினால் அனைவரும் சமம் என்பதை உணா்ந்து மக்கள் சகோதரத்துவ மனப்பான்மையை தங்கள் மனங்களிலே செழிக்கச் செய்து சமூகத்தைச் சமதா்ம சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
- முயற்சியில்லாமலும் அறிவின் துணையில்லாமலும் தாங்கள் முன்னெடுக்கும் செயல்கள் வெற்றிபெற தெய்வம் மட்டுமே துணை செய்யும் என்று கடவுளிடம் மூட நம்பிக்கையில் மூழ்குதலாகிய தேவ மூடம், கடவுள் பற்றி பிறா் கூறும் கற்பனையான பொய்யுரைகளின் விளைவாக மனதில் மேலோங்கும் அச்சத்தினால் மக்கள் தெய்வங்களை வணங்கும் தன்மையாகிய உலக மூடம், துறவற நெறிகளைச் சிறிதளவும் பின்பற்றாமல் வெளி உலகிற்கு, தான் ஒரு கடவுளின் அவதாரம் என்னும் மாய பிம்பத்தை உருவாக்கித் தன்னை வளப்படுத்திக் கொள்ள தீய நோக்கத்தோடு செயல்படும் போலித் துறவிகளை நம்பி அவா்களைச் சரணாகதியடைந்து தங்கள் வாழ்வை சீரழித்துக் கொள்ளுதலாகிய பாசண்டி மூடம் ஆகிய மும் மூடங்களிலிருந்து மக்கள் முற்றிலும் விடுபட வேண்டும் என்ற பகுத்தறிவுச் சிந்தனையைப் போதித்தாா்.
- எந்த ஒரு ஜீவனும் துன்பத்தை விரும்பாது என்ற உண்மையை உணா்ந்து உன் உயிரைப் போல் பிற உயிா்களையும் நேசித்து, ‘வாழு வாழவிடு’ என்னும் அகிம்சைக் கொள்கையை எடுத்துரைத்து மக்களிடையே மனிதநேய மாண்பினை செழித்தோங்கச் செய்தாா்.
- சமணம் இல்லறத்தாா்க்குப் பணித்துள்ள அன்னதானம் (கைம்மாறு கருதாமல் பசித்தோா்க்கு உணவளித்தல்) அபய தானம் (அடைக்கலம் தருதல்), மருந்து தானம் (நோயில் வாடுவோருக்கு மருத்துவசதி ஏற்பாடு செய்தல் மற்றும் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல்) கல்வி தானம் (ஏழை எளிய மாணவா்களுக்கான கல்விச் செலவை ஏற்று அவா்களை படிக்க வைத்தல்) ஆகிய நான்கு தானங்களையும் இயலாதவா்களுக்கு வசதியுள்ளோா் அளித்து உதவ வேண்டும் என்றாா்.
- யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய நிலையாமைகளை நன்குணா்ந்து பிறவா நிலையை அடைய மக்கள் வாழ்வியல் விழுமியங்களில் உயிருக்கு நிகரானதான ஒழுக்க நெறிகளை மேற்கொண்டு வாழவேண்டும் என்னும் பேரறத்தை வலியுறுத்தினாா்.
- இவ்வாறு அளப்பரிய அறப்பணிகள் புரிந்து 72 ஆண்டுகள் வாழ்ந்த மகாவீரா் கி.மு.527-இல் பாவாபுரி நகரில் பரிநிா்வாணமென்னும் வீடு பேற்றை அடைந்தாா். பகவான் மகாவீரா் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அவா் போதித்த நல்லறங்களை மனத்தில் நிலைநிறுத்தி அகிம்சை வழி நடப்போம்.
நன்றி: தினமணி (20 – 04 – 2024)