TNPSC Thervupettagam

அசட்டு சாகசங்கள் வேண்டாம்

November 25 , 2021 975 days 564 0
  • வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது.
  • குறிப்பிட்ட சில இடங்கள்தான் என்றில்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிகமான மழை பொழிந்து வருகின்றது.
  • சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ள தெருக்களிலும், குடியிருப்புகளிலும் நிரம்பியுள்ள மழை நீரை வெளியேற்றுவது மிகவும் சவாலான காரியமாகவே உள்ளது.
  • நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, வடிகால் வசதிகளை சரியாகப் பராமரிக்காதது ஆகியவை குறித்து ஊடகங்களில் அனல்பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.
  • வழக்கம் போலவே இந்தப் பருவமழைக் காலம் முடிந்ததும், நடந்ததை எல்லாம் அப்படியே மறந்து விட்டு, அடுத்து வருகின்ற கோடைக்காலத்தை சமாளிப்பதில் நாம் கவனம் செலுத்தத் தொடங்கி விடுவோம்.
  • மீண்டும் 2022-ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்குகின்ற காலத்தில் இதே ஆக்கிரமிப்பு, வடிகால் பிரச்னைகளைப் பற்றி மீண்டும் விவாதிக்கத் தொடங்குவோம்.

போனவை போகட்டும்

  • சாலைகளும், குடியிருப்புகளும், விளைந்த பயிர்களும் மழைநீரில் மூழ்கியதைத் தாண்டி இன்னொரு பெரும் பிரச்னையையும் இவ்வருடத்திய பெருமழைக்காலம் நமக்குத் தோற்றுவித்திருக்கிறது.
  • மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகள், சிற்றாறுகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் ஆகியவற்றை நிறைத்துப் பெருக்கெடுத்து ஒடுகின்ற வெள்ளநீரில் ஏற்படும் உயிரிழப்புகளே அந்தப் பெரும் பிரச்னையாகும்.
  • நீர்நிலைகள் நிரம்பி நீர்வளம் பெருகுவதென்பது வரவேற்புக்குரிய விஷயம்தான்.
  • உணவுக்கும், உழவுக்கும் தேவையான தண்ணீர் குறைவறக் கிடைக்கும் என்பதும், தற்போதைய மழைப்பெருக்கினால் உயர்ந்துவரும் நிலத்தடி நீர்வளம் அடுத்து வருகின்ற கோடையை சமாளிக்க உதவும் என்பதும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கவே செய்கின்றன.
  • அதே சமயம், புதிய வெள்ளத்தை அனுபவிக்கிறோம் என்ற பெயரில் வெள்ள நீர் கொப்பளிக்கின்ற நீர்நிலைகளில் குளித்தும், குதித்தும் தங்கள் உயிருக்கே உலைவைத்துக் கொள்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது.
  • எதிர்பாராத விதமாக திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொள்பவர்களையும், மழை நீரால் சூழப்பட்ட குடியிருப்புகளில் சிக்கிக் கொள்பவர்களையும் மீட்பதற்காகத் தீயணைப்புத்துறை, தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் தங்களின் இன்னுயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர்.
  • அதே சமயம் அசட்டுசாகசங்களில் விருப்பமுள்ள இளைஞர்கள் பலரும் பாலத்தின் மீது ஏறிநின்று ஆற்று வெள்ளத்தில் குதிப்பது, ஏரிகள், கதவணைகள் இவற்றிலிருந்து உபரி நீர் வெளியேறும் இடங்களில் குளிப்பது, மீன் பிடிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுத் தங்களின் உயிரை இழப்பதாக வரும் செய்திகள் நம்மைப் பதற வைக்கின்றன.
  • நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரையிலான பத்து நாள்களில் மட்டும் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பதினைந்து பேர் ஆறுகளில் குளிக்கச் சென்று தங்களின் இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.
  • தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்து இருந்ததுடன், தடுப்பணை ஒன்றும் உடைந்ததன் காரணமாக இவ்வருடம் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் யாரும் இறங்கிக் குளிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறிக் குளிக்கச் சென்றவர்கள் பலரும் இறந்திருக்கிறார்கள். ஒரு சிலர் மிகுந்த சிரமத்தின் பேரில் காப்பற்றப்பட்டிருக்கிறார்கள்.
  • திருவள்ளூர் மாவட்டம் வழியாகப் பாயும் கொசஸ்தலை ஆற்றிலும் இவ்வாறு இறங்கிக் குளித்து உயிரை விட்டவர்கள் உண்டு. நிரோஷா என்ற பெண்ணும் அவருடைய இளவயது மகளும் கொசஸ்தலையில் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
  • பல வருடங்களுக்கு ஒரு முறை அபூர்வமாக தண்ணீர் ஓடும் பாலாறும் இவ்வருடம் தனது பலி கணக்கைத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் அருகே ஒருவர் பாலாற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
  • மேலும், ராணிப்பேட்டை அருகிலுள்ள ஓச்சேரியில் பலரது எச்சரிக்கையையும் மீறி நீர்நிறைந்த பாலாற்றில் குதித்த ஏழு இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே உயிருடன் மீட்கப் பட்டிருக்கின்றனர்.
  • இவை எல்லாம் வடதமிழகத்தில் ஓடும் ஆறுகளில் ஏற்பட்ட விபத்துகள் என்றால், தாமிரபரணி, வைகை, காவிரி, பவானி ஆகிய பிற முக்கிய ஆறுகளிலும், இதர சிற்றாறுகளிலும், ஏரிகள், குளங்கள் போன்றவற்றிலும் நேரிட்ட உயிரிழப்புகள் தனிக்கணக்கு.
  • மேற்படி ஆறுகள் நீர்நிலைகள் ஆகியவற்றில் நேரிட்ட உயிரிழப்புகள் அனைத்தையும் அசட்டு சாகசம், கைப்பேசியில் தற்படம் எடுக்கும் மோகம் ஆகிய இரண்டு வரையறைகளுக்குள் எளிதாக அடக்கி விடலாம்.
  • புதிய மழையின் காரணமாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கின் பெரும் சக்தியை யாராலும் எளிதாகக் கணித்து விட முடியாது.
  • குறிப்பிட்ட நீர்நிலைகளில் வழக்கமாக நீந்திக் குளிப்பவர்களுக்கும் கூட, புதிய வெள்ளத்தின் வேகமும் சுழலும் பெரும் சவாலாக இருக்கக் கூடியவை ஆகும்.
  • இதை ஒட்டியே நம்முடைய முந்தைய தலைமுறைப் பெரியோர், புதுத் தண்ணீர் உயிர்க்காவு வாங்கும் என்று சொல்லித் தம்முடைய வீட்டுப் பிள்ளைகளை எச்சரித்து வந்திருக்கின்றனர்.
  • தற்காலங்களில், மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு மழைக்கால எச்சரிக்கைகளை ஊடகங்களின் வாயிலாக முன்னதாகவே அறிவித்து வருகின்றன.
  • வெள்ள நீரில் இறங்குவது மட்டுமின்றி, நீர்நிலைகளின் அருகில் நின்று கைப்பேசியில் தற்படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறிவருகின்றன.
  • ஆனால், இளைஞர்கள் பலரும் இத்தகைய எச்சரிக்கையைப் புறம் தள்ளிவிட்டு வெள்ளம் கரைபுரண்டோடும் இடங்களில் குளிப்பதுடன், அவ்வாறு குளிப்பதை தற்படங்களாகவோ, காணொலிகளாகவோ எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுப் பலரது பாராட்டுகளைப் பெறவும் துணிகின்றார்கள்.
  • ஆனால், அத்தகைய அசட்டு சாகசத்தில் அவர்கள் தங்களது உயிரையே இழப்பதுடன், தங்களின் அன்பான குடும்பத்தினருக்கு ஆற்ற முடியாத துயரத்தையும் அளிக்கின்றார்கள்.
  • போனவை எல்லாம் போகட்டும். இந்த மழைக்காலம் முடியும் வரையிலாவது நம் இளைஞர்கள் இந்த மன்னிக்கமுடியாத சாகசத்தைச் சற்றே மறந்திருக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.

நன்றி: தினமணி  (25 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories