- திலீப் பிஸ்வாஸ் என்கிற ஒரு சராசரி இந்தியக் குடும்பத் தலைவனின் துயரக் கதையிலிருந்து தொடங்குகிறது அந்தக் கள ஆய்வு அறிக்கை. அசாமின் ஒரு கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு, மதிய வேளைகளில் அதே ஊரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தார். ஒருநாள் காவல் துறை அவர் வீட்டுக் கதவைத் தட்டியது. அன்றோடு அவரது வாழ்க்கை திசை மாறிப்போனது.
- இன்று திலீப் பிஸ்வாஸ் எப்படி இருக்கிறார்? விவசாயியாக இல்லை. வழக்கறிஞர் கட்டணத்துக்காகவே தனது நிலத்தை அவர் விற்க வேண்டியதாகிவிட்டது. தான் இந்தியக் குடிமகன் என்பதை உரிய ஆவணங்களைக் காட்டி உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் நிரூபித்துவிட்டார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் அவர் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும்கூட சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். செய்த குற்றம், அவர் இந்தியரா, அந்நியரா என்று சந்தேகத்துக்கு ஆளானது மட்டும்தான்.
- நல்ல வேளையாக, திலீப் பிஸ்வாஸுக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். இல்லையென்றால், திலீப் பிஸ்வாஸ் இன்னும் சிறையில்தான் இருக்க வேண்டும். அவர் பேசிய வங்க மொழியே அவர் இந்தியர் அல்ல என்ற சந்தேகத்துக்குப் போதுமான காரணமாகிவிட்டது.
- திலீப் பிஸ்வாஸ் போன்று ஏறக்குறைய 40 லட்சம் பேர் தாங்கள் எந்த நேரத்திலும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். அசாம் மாநில அரசு, 2015-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகளைத் தொடங்கியது. அதன்படி, அசாமில் வசிக்கும் ஒவ்வொருவரும் 1971-க்கு முன்னால் அந்த மாநிலத்தில் வசித்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. 1971 என்பது வங்க தேசம் உருவான ஆண்டு. அதற்கு முன்பு இந்தியாவில் குடிமக்களாகப் பதிவுசெய்துகொண்டவர்களும் அவர்களின் வாரிசுகளும் மட்டுமே பதிவேட்டில் இடம்பெறுவார்கள். ஒருவேளை, பெற்றோர்கள் தங்களை இந்தியாவின் குடிமக்களாகப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்றால், அவர்களின் வாரிசுகள் அந்நியர்கள் என்றே அறிவிக்கப்படுவார்கள்.
இரண்டே கேள்விகள்
- வங்க மொழி பேசுபவரா, முஸ்லிமா... இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே அசாமில் ஒருவர் இந்தியரா இல்லை அந்நியரா என்று முடிவெடுப்பதற்குப் போதுமானதாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ல் அசாம் மாநில அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. ஏறக்குறைய 40 லட்சம் பேர், அதாவது மாநில எண்ணிக்கையில் 12% பேர் பதிவேட்டில் இடம்பெறவில்லை. பதிவேட்டில் பெயர் இடம்பெறாதவர்கள் தீர்ப்பாயங்களை அணுகித் தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், தீர்ப்பாயங்கள் பின்பற்றும் நடைமுறையோ இயற்கை நீதிக்குப் புறம்பாக முன்தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டதாய் இருக்கிறது.
- இந்நடவடிக்கையைப் பற்றி சுயேச்சை பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பான ‘டைப் மீடியா சென்டர்’ நடத்திய கள ஆய்வறிக்கையின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. தீர்ப்பாயங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், தீர்ப்பாயங்களை எதிர் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது இந்த நேரடிக் கள ஆய்வு.
- 100 தீர்ப்பாயங்களிலும் 2018-ல் இறுதி ஆறு மாதங்களில் அளிக்கப்பட்ட தீர்வறிக்கை விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்தது ‘டைப் மீடியா சென்டர்’. ஐந்து தீர்ப்பாயங்கள் மட்டுமே அந்த விவரங்களை அளித்தன. அத்தீர்ப்பாயங்களில் 10 வழக்குகளில் 9 வழக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்தன. ஏறக்குறைய 90% முஸ்லிம்கள் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இந்துக்களில் இந்த விகிதம் 40%.
- அதிகரிக்கும் தற்கொலைகள்
- இந்தத் தீர்ப்பாயங்கள் நடைமுறையில் நீதித் துறையின் அதிகாரங்களைக் கொண்டிருந்தபோதும், நீதிபதிகளைக் கொண்டது அல்ல. எனவே, வழக்கு விசாரணைகளிலும் முடிவுகளிலும் சமச்சீரான தன்மையென்றும்கூட எதுவும் இல்லை. ஒரு தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்ட அனைவருமே அந்நியர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்கவே இல்லை என்பது நீதித் துறை விசாரணை நடைமுறைகளுக்கே மிகப் பெரிய களங்கம்.
- அந்நியர் என்று குற்றஞ்சாட்டும் பொறுப்பையும், அவர்களைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அளிக்கும் பொறுப்பையும் அசாம் எல்லைப் பாதுகாப்புப் படை ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், குற்றஞ்சாட்டுவதில் மும்முரம் காட்டும் எல்லைப் பாதுகாப்புப் படையானது குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் காட்டவில்லை.
- தீர்ப்பாயங்களும் தங்கள் முன்னால் சமர்ப்பிக்கப் படும் ஆவணங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்களையே பொறுப்பாளியாக்கியது. இப்படிப் பெயர் மற்றும் வயதைப் பதிவுசெய்வதில் நிர்வாகத் துறை காட்டிய அலட்சியத்தால் குடியுரிமையை இழந்து நிற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது.
- தாங்கள் இந்தியாவின் குடிமக்கள்தான் என்பதை மேல்முறையீட்டில் நிரூபிப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சேமிப்பையெல்லாம் செலவழித்து ஆவணங்களைத் திரட்டுகிறார்கள். செலவழிக்க வாய்ப்பில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களோ தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள்.
தொடரும் அபாயம்
- தனது சொந்தக் கிராமத்துக்குத் திரும்பிவந்திருக்கும் திலீப் பிஸ்வாஸின் இரு மகள்களின் கேள்வி இதுதான். ‘இடைப்பட்ட ஆண்டுகளில் நாங்கள் பங்களாதேசிகள் என்று அழைக்கப்பட்டோம். சிறையில் இருந்தோம். பள்ளிக்கூடம் போவதற்கு அனுமதிக்கப்படவில்லை. என் மீது எந்த வழக்கும் இல்லை என்று இப்போது வெளியே அனுப்பிவிட்டார்கள். படிப்பு பாழாகிவிட்டது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு?’
- திலீப் பிஸ்வாஸ் தற்போது வழக்கை மேல்முறையீடு செய்து பிணையில் வெளிவந்திருக்கிறார் என்றாலும், அவர் மீண்டும் தீர்ப்பாயத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்பாயம் வழக்கம்போல ஆவணங்களைக் கணக்கில் எடுக்காமலே தீர்ப்பு சொல்ல முனைந்தால், மீண்டும் வழக்குச் செலவுக்காக விற்பதற்கு அவரிடம் இப்போது நிலமும் இல்லை.
- இந்நிலையில்தான், ஏற்கெனவே இருக்கும் 100 தீர்ப்பாயங்களோடு மேலும் கூடுதலாக 200 தீர்ப்பாயங்களைத் தொடங்கும் அசாமின் வேண்டு கோளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அந்நியர்கள் என்று அடையாளப்படுத்துபவர்களை அடைத்து வைப்பதற்காக மேலும் 10 சிறைச்சாலைகளைக் கட்டவும் அசாம் மாநில அரசு திட்டமிட்டுவருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை(08-08-2019)