- பூமியில் கொட்டப்படும் ஞெகிழிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. ஆண்டொன்றில் சுமார் 350 மில்லியன் டன் ஞெகிழிக் கழிவு உற்பத்தியாகிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுற்றுச் சூழல் மாசு, இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் ஞெகிழிப் பயன்பாடு காரணமாக, 2050இல் கடலில் உள்ள மீன்களின் அளவுக்கு நிகராக ஞெகிழிக் கழிவுகளும் இருக்கும் எனச் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகளின் இக்கூற்று நிதர்சனமானால், பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மண்டலமும் பாதிப்புக்கு உள்ளாகும்.
அதிகரிக்கும் ஞெகிழிக் கழிவு
- இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 3.4 மில்லியன் டன் ஞெகிழியை உற்பத்தி செய்கிறது. இதில் 30% மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. பிற ஞெகிழிக் கழிவுகள் நிலம், நீர்நிலைகளை அடைந்து சூழல் மாசை ஏற்படுத்துகின்றன. 2015இல், ‘சயின்ஸ்’ ஆய்விதழ் நடத்திய ஆய்வில், 2010இல் மட்டும் 8 மில்லியன் டன் அளவு ஞெகிழிக் கழிவு கடலுக்குள் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இது 1961ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஞெகிழி அளவுக்குச் சமம்.
ஞெகிழி பிறந்த கதை
- பெல்ஜிய விஞ்ஞானியான லியோ பேக்லேண்ட், 1907இல், ஞெகிழியை முதன்முதலாக உருவாக்கினார். இதன் பின்னர் 20ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளான ஒளிப்படக் கருவி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் உருவாக்கத்தில் ஞெகிழி முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியது. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் ஞெகிழி நிறைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகக் கருதப்படும் சந்திரயான் விண்கலம் ஞெகிழிக் கலவை கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.
உலகளாவிய பிரச்சினை
- ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் 2,000 லாரிகள் அளவில் ஞெகிழிக் கழிவு, கடல், ஆறுகள், ஏரி என நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இவ்வாறு ஞெகிழிக் கழிவு உலகளாவிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 19–23 மில்லியன் டன் ஞெகிழிக் கழிவுகள் கடல்சார் பகுதிகளில் கலந்து கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன. மேலும், இவை சுற்றுச்சூழலையும் பாதித்து காலநிலை மாற்றத்தையும் தீவிரப்படுத்துகின்றன. இதனால், உணவு உற்பத்தியும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
ஞெகிழிக் கழிவு - காலநிலை மாற்றம்
- பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் ஞெகிழிப் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, அப்பைகளில் உள்ள சாயத்தால் புவியின் வளிமண்டலம் மாசுபடுகிறது. மேலும், மண்ணில் புதையும் ஞெகிழி நீண்ட காலத்துக்கு மக்கிப்போகாமல் இருக்கும் தன்மை கொண்டது. இவை மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுத்துவிடுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதன் பொருட்டே சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் ஞெகிழிக் கழிவு, காலநிலை மாற்றத்தைப் போன்றே விவாதத்துக்குரியது என ஐ.நா. அவை குறிப்பிடுகிறது.
தவறாகக் கையாளும் நாடுகள்
- உலகளவில் 83% ஞெகிழிக் கழிவுகள் கடலில் கலப்பதற்கு, வெறும் 20 நாடுகள் மட்டுமே காரணமாக உள்ளன. இந்நாடுகள் மக்கள்தொகை, கழிவு மேலாண்மை கையாளும் தரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு 6 லட்சம் டன் ஞெகிழிக் கழிவைத் தவறாகக் கையாண்டு இந்தியா 12 ஆவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 88.2 லட்சம் டன் ஞெகிழிக் கழிவைத் தவறாகக் கையாண்டு, சீனா முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மயன்மார் உள்பட 11 ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பூஜ்ய வரைவு ஒப்பந்தம்
- ஐ.நா. அவையின்கீழ் உள்ள, நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அமைப்பு (INC), சுற்றுச்சூழல் தொடர்பாக 2023 நவம்பர் 13 முதல் 19 வரை கென்யாவின் நைரோபியில் கூடியது. இக்கூட்டத்தில் உலகளவில் ஞெகிழி மாசினைத் தடுப்பதற்கான பூஜ்ய வரைவு (zero draft) ஒப்பந்தத்துக்கு முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அதில், பாலிமர் பயன்பாடு, ரசாயன உற்பத்தியைக் குறைத்தல், ஞெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான கொள்கைகளை ஊக்குவித்தல் போன்றவை ஆலோசிக்கப்பட்டன. எனினும் அமைப்பில் இருந்த நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததால் வரைவை உருவாக்குவதற்கான எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
என்ன தேவை
- ஞெகிழியை முற்றிலுமாக ஒழிப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதன் பயன்பாட்டைக் குறைக்க முடியும். பாலிதீன் பைகள், ஸ்ட்ராக்கள் எனப்படும் உறிஞ்சுகள், ஞெகிழிக் கோப்பைகள், ஞெகிழிப் புட்டிகள் போன்ற தனிநபர் பயன்பாட்டு ஞெகிழிப் பொருள்களைக் குறைப்பதிலும் அவற்றுக்கான மாற்றுகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். அதே நேரம், ஞெகிழியால் லாபத்தை ஈட்டும் பெரும் நிறுவனங்களை நோக்கியும் அரசின் பிடி இறுக வேண்டும். ஞெகிழிக் கழிவால் நிறுவனங்கள் உருவாக்கும் மாசினைக் குறைப்பதற்கான தார்மிகப் பொறுப்பை நிறுவனங்களை ஏற்கச் செய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 12 – 2023)