TNPSC Thervupettagam

அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்

September 16 , 2023 473 days 302 0
  • கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவி வருவது அனைவருக்கும் கவலை அளிக்கிறது. டெங்கு காய்ச்சலின் கடுமையான வடிவம், டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் என்றும் அழைக்கப் படுகிறது. இது கடுமையான ரத்தப்போக்கினையும், ரத்த அழுத்தத்தில் திடீா் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
  • அண்மையில் சென்னை மதுரவாயலை சோ்ந்த நான்கு வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் அரசின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடலூரில் ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே புதுவையிலும் டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இம்மாதத்தில் (செப்டம்பா்) மட்டும் தமிழகத்தில் 204 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபடுகிறது. மதுரை மாநகராட்சியில் ஏழு நாளில் 37 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை டெங்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 253 பேரில், கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் 10-ஆம் தேதிவரை மூன்று போ் இறந்துள்ளனா்.
  • டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகக் கூடிய ஏடிஸ் வகை கொசு மூலம் பரவுவது. ஏடிஸ் கொசு மூன்று வாரத்துக்குமேல் உயிர்வாழும். இது பகல் நேரத்தில் மட்டுமே நம்மை கடிக்கும். இக்கொசுவின் உடலில் கறுப்பு, வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும்.
  • பொதுவாக, மழைக்காலத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கும். வீடுகளில் சரியாக மூடப்படாத தண்ணீா் தொட்டிகள், மொட்டை மாடிகளில் போட்டு வைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலி மனைகளில் கிடக்கும் நெகிழிப் பொருள்கள், சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன.
  • அங்கு உருவாகும் கொசுக்கள், டெங்கு பாதிப்புள்ளவா்களைக் கடித்துவிட்டு மற்றவா்களையும் கடிக்கும்போது டெங்கு மற்றவருக்கும் பரவுகிறது. ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனே அவா் மருத்துவமனைக்குச் சென்று டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
  • டெங்கு பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் தற்போது மழையும் வெயிலும் மாறி மாறி வருவதால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
  • தற்போதைக்கு டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதும், கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதும்தான் தொற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழிகள்.
  • காய்ச்சல், தலைவலி, எலும்பு அல்லது மூட்டு வலி, குமட்டல், வாந்தி, கண்களில் வலி, வீங்கிய சுரப்பிகள் போன்றவை டெங்குவின் அறிகுறிகளாகும். டெங்கு பாதிக்கப்பட்டவா்கள் பொதுவாக ஒரு வாரத்திற்குள் குணமடைவாா்கள். சில சமயங்களில் பாதிப்பு மோசமாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துலாம்.
  • நோயாளியின் ரத்த நாளங்கள் சேதமடைந்து கசிவு ஏற்படும்போது கடுமையான டெங்கு ஏற்படுகிறது. மேலும், நோயாளியின் உடலில் ரத்தத்தை உறைய வைக்கும் செல்களின் எண்ணிக்கையும் குறையும். இது உட்புற ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு சில நேரங்களில் மரணத்திற்குக் கூட வழிவகுக்கலாம்.
  • நோயாளிக்கு ஏற்படும் கடுமையான வயிற்று வலி, தொடா்ச்சியான வாந்தி, ஈறு அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், சிறுநீரில் இரத்தம், அதீத வயிற்றுப்போக்கு கடினமான அல்லது விரைவான சுவாசம், சோர்வு, எரிச்சல் அல்லது அமைதியின்மை ஆகியவை கடுமையான டெங்குவின் அறிகுறிகளாகும்.
  • சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து சென்னையில், மழைநீா் தேங்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கொசு புழுக்களை அழித்திட மாநகராட்சி ஊழியா்கள் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
  • மேலும், சாலைகளிலும் வீடுகளிலும், டயா், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்து கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நபா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுகின்றன. எனவே, கட்டுமான நிறுவனங்கள், வியாபாரிகளிடமும் இது சார்ந்து விழிப்புணா்வை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில் காய்ச்சல் வந்தால் நோயாளிகள் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். முறையான ரத்த பரிசோதனை செய்து, அதன் முடிவின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். சா்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறைவாக இருக்கும். எனவே, அவா்கள் டெங்கு காய்ச்சல் குறித்து இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். வருமுன் காப்போம்; வளமோடு வாழ்வோம்.

நன்றி: தினமணி (16 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories