- அதீத வெப்பநிலை, வெப்ப அலை ஆகியவற்றின் காரணமாக வட இந்திய மாநிலங்களில் பலர் உயிரிழந்துவருவது வேதனைக்குரியது. இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
- தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மழை பெய்ததால் சில நாள்களுக்கு நிவாரணம் கிடைத்தது. மீண்டும் முன்பைவிட அதிகமாக வெயில் கொளுத்திவருகிறது. ஆனால், வட இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.
- மே 31 அன்று மட்டும் வட இந்திய மாநிலங்களில் 61 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 23 பேர் ஜூன் 1 அன்று நடைபெறவிருந்த மக்களவை இறுதிக்கட்டத் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள். பிஹாரில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மிர்ஸாபூர் மாவட்டத்தில் வெப்ப மயக்கம் (Heat stroke) காரணமாக 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
- ஒடிஷாவில் மே 31 வரை இறந்த 26 பேரில் ஐவர் வெப்ப மயக்கம் காரணமாக உயிரிழந்தது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் 1,326 பேர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 63 பேருக்கு வெப்ப மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
- ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் தொடர்ந்து பல நாள்களாக அதிக வெப்பநிலை பதிவாகிவருகிறது.
- தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பல இடங்களில் வழக்கத்தைவிட 2-3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு, ஜூன் 6 இலிருந்து ஜூன் 10க்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
- கோடைக்காலத்தில் அதீத வெப்பநிலையும் பருவமழைக் காலத்தில் மிக அதிக மழைப்பொழிவும் ஏற்படுவது இந்தியாவில் தொடர்கதையாகிவிட்டது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கங்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கூடவே, வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்கான பணிகளில் அரசுகள் ஆண்டு முழுவதும் கவனம் செலுத்த வேண்டும்.
- கோடைக்காலத்தில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனைவரும் நிழலில் நிற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். லாரி-பேருந்து ஓட்டுநர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைகளை அமைத்தல், மெட்ரோ ரயில் கட்டுமானம் என வெப்பத்தின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொள்ளும் பணியில் இருப்பவர்களுக்கான பணி நேர மாற்றம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அவசியம். இது தொடர்பாகச் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
- இனிமேலாவது கோடைக்காலத்துக்குப் பதிலாக வெப்பமும் மழையும் இல்லாத மாதங்களில் தேர்தல்களை நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். குளிர்சாதன வசதி கொண்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களும், மருத்துவமனை வார்டுகளும் ஏழை மக்களுக்கும் பயன்படும் வகையில் அவற்றுக்கு மானியம் அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
- மாநில அரசுகளும், ஜூன் 4க்குப் பிறகு புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் மத்திய அரசும் வெப்பத்தினாலும் மழையினாலும் உயிரிழப்புகள் நேர்வதைத் தடுத்து நிறுத்துவதைத் தமது முதன்மைக் கடமையாகக் கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 06 – 2024)