TNPSC Thervupettagam

அஜீத் தோவலின் ராஜதந்திரம்!

November 15 , 2021 985 days 574 0
  • புது தில்லியில் புதன்கிழமை கூடிய இந்தியா ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்புக் கூட்டம் இந்தியாவின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
  • கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய ஐந்து மத்திய ஆசிய நாடுகளுடன் ரஷியாவும் ஈரானும் அதில் பங்குபெற்றன. இந்தியாவையும் சேர்த்து எட்டு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் அதில் கலந்துகொண்டனர்.
  • இதிலிருந்து ஒன்று தெரிகிறது. ரஷியா உள்ளிட்ட ஆப்கன், பாகிஸ்தான், இதர அண்டை நாடுகள் இந்தியாவின் நட்புறவை தனிப்பட்ட முறையில் இழக்கத் தயாராக இல்லை என்பதுதான் அது.
  • முந்தைய கனி தலைமையிலான ஆப்கன் தேசிய அரசுடன் இந்தியா இணைந்து செயல்பட்டது.
  • ஆப்கனின் கட்டமைப்புப் பணிகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் இந்தியாவுடன் தலிபான் தலைமையிலான ஆப்கன் அரசின் உறவு எப்படியிருக்கும் என்பது புதிராகத் தொடர்கிறது.
  • அந்தப் பின்னணியில்தான், இந்தியா துணிந்து ஆப்கனைச் சுற்றியிருக்கும் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை கூட்டியது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்புக் கூட்டம்

  • தற்போது ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து சர்வதேச அளவிலான அணுகுமுறையை உருவாக்கும் பணியில் இறங்கியது.
  • இந்தியா முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளையும் பாகிஸ்தானும், சீனாவும் முறியடித்தன. இந்தியா அழைப்பு விடுத்தும்கூட தில்லி கூட்டத்தில் பாகிஸ்தானும் சீனாவும் கலந்து கொள்ளாததிலிருந்து அந்த நாடுகளின் இந்திய எதிர்ப்பு மனநிலை தெளிவாகிறது.
  • தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானால் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும், சீனாவும் பாகிஸ்தானும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலும் முற்றிலும் வெவ்வேறானவை.
  • தலிபானின் தீவிரவாதக் கொள்கையும், மத அடிப்படைவாதமும் அந்த நாடுகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
  • அவர்களைப் பொறுத்தவரை தத்தம் எல்லைகளைப் பாதுகாப்பதுடன் ஆப்கானிஸ்தான் பிரச்னை முடிந்துவிடுகிறது. இந்தியாவுக்கும், ஈரானுக்கும் அப்படியல்ல.
  • சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கும், வாக்கானுக்கும் இடையில் 3,820 கி.மீ. இடைவெளி இருக்கிறது.
  • வாக்கான் பள்ளத்தாக்கு என்பது ஆப்கானிஸ்தானையும், சீனாவையும் இணைக்கும் குறுகிய நிலப்பகுதி. அதுதான் பாகிஸ்தானையும், தஜிகிஸ்தானையும் பிரிக்கிறது.
  • சீனாவின் பகுதியாகிய ஜின் ஜியாங் என்பது முந்தைய கிழக்கு துர்க்கிஸ்தான். அதனால் ஆப்கானிஸ்தானில் செயல்படும் கிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு சீனாவில் நுழைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதுதான் சீனாவின் முக்கிய நோக்கமாக இருக்க முடியும். இந்தியாவுக்கு அப்படியல்ல.
  • தில்லி, காபூலிலிருந்து 990 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. ரஷியா, சீனா போலல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக தலிபான்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
  • இதற்கு முன்னால் ஆப்கானிஸ்தான் குறித்து இஸ்தான்புல் நடவடிக்கை, ஷாங்காய் கூட்டுறவு மாநாடு, ஜி 20 மாநாடுகளில் இந்தியா பங்கெடுத்திருக்கிறது.
  • ஈரானில் 2018- 2019-இல் நடந்த பிராந்திய பாதுகாப்பு விவாதக் கூட்டங்களில் கலந்துகொண்ட இந்தியாவை, கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் கூட்டத்தைக் கூட்டியபோது ஈரான் அழைக்கவில்லை. ஆனால், ரஷியா அழைக்கப்பட்டது.
  • சீனா, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அழைத்து இந்தியா நடத்திய கூட்டத்தைப் போலவே ஒரு கூட்டத்தைக் கூட்டியது.
  • அந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவில் கலந்துகொண்ட நாடுகளும் கலந்து கொண்டன. இந்தியா மட்டும்தான் அழைக்கப்படவில்லை.
  • ஆப்கானிஸ்தான் பிரச்னையில் ரஷியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவைதான் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்றாலும்கூட, இந்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து மத்திய ஆசிய நாடுகளும், ஈரானும், இந்தியாவும் தவிர்க்க முடியாதவை என்பதுதான் உண்மை.
  • தில்லி கூட்டத்தில் கலந்துகொண்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களுடன் இன ரீதியாக இணைந்தவர்கள்.
  • ஆப்கனிலிருந்து வெளியேறும் தலிபான்களுக்கு எதிராக அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குபவர்கள்.
  • பாகிஸ்தானோ சீனாவோ அவர்களது நம்பிக்கைக்கு உரிய நாடுகள் அல்ல; பஷ்டுன்கள், ஆதிக்கம் செலுத்தும் தலிபான்களால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் இந்தியா கூட்டிய கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
  • ஆப்கானிஸ்தானை, பயங்கரவாதத்துக்கான திட்டமிடல், நிதியுதவி செய்தல், தாக்குதல்களை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதைத் தடுப்பது; மத தீவிரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது, போதைப் பொருள்களின் இழி தொழில் வர்த்தக பிராந்தியமாக மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்களை தில்லியில் நடந்த ஆப்கனின் பிராந்திய பாதுகாப்பு கூட்டம் வெளியிட்ட அறிக்கை கோருகிறது.
  • உதவிப் பொருள்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு தனது தரை மார்க்கத்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் தர மறுத்திருக்கும் நிலையில், உதவிகளை அனுப்புவது குறித்தும் அந்தக் கூட்டம் விவாதித்தது.
  • இந்தியாவை ஒதுக்கி நிறுத்தி ஆப்கானிஸ்தான் பிரச்னையை விவாதிக்க முடியாது என்பதை உணர்த்திய ராஜதந்திர நடவடிக்கைக்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலைப் பாராட்ட வேண்டும்!

நன்றி: தினமணி  (15 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories